Ad

சனி, 30 அக்டோபர், 2021

Doctor Vikatan: சாப்பிட்ட சில மணி நேரத்தில் களைப்பும் தலைச்சுற்றலும் ஏற்படுகிறது; ஏன்?

எனக்கு நீரிழிவு இருக்கிறது. என் HbA1c அளவானது 6.2. நீரிழிவுக்காக மிகக்குறைந்த டோஸ் மருந்துகளையே எடுத்துக்கொள்கிறேன். எனக்கு தைராய்டு பாதிப்பும் இருக்கிறது. அதற்கும் 75 மி.கி அளவு மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறேன். சாப்பிட்டு முடித்த இரண்டு, இரண்டரை மணி நேரத்தில் நான் மிகவும் களைப்பாக உணர்கிறேன். லேசான தலைச்சுற்றலும் வருகிறது. இதற்கு என்ன காரணம்... தீர்வு என்ன?

- ஆதிநாராயணன் ஶ்ரீதர் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சஃபி சுலைமான்

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த மருத்துவர் சஃபி.

``உங்களுக்கு மூன்றுமாத சராசரி ரத்தச் சர்க்கரையின் அளவு (HbA1c) 6.2 என்பது நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பதையே காட்டுகிறது. நீரிழிவுக்கும் தைராய்டு பாதிப்புக்கும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம் இல்லை. உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சோர்வுக்கும் தலைச்சுற்றல் பிரச்னைக்கும் வேறு சில காரணங்கள் இருக்கலாம். நீங்கள் எந்த வேளையில் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுகிறீர்கள், எப்போதெல்லாம் இந்தப் பிரச்னைகளை உணர்கிறீர்கள் என்பதை முதலில் கவனியுங்கள்.

Also Read: Doctor Vikatan: முக நரம்புகளில் வலி; எனக்கு சித்த மருத்துவம் உதவுமா?

சர்க்கரை அளவுக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்களா என்று பாருங்கள். அதாவது, சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா என்று பார்த்து, அதை மாற்றிக்கொள்ளலாம்.

தைராய்டுக்கு நீங்கள் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கும் 75 மில்லிகிராம் அளவு அவசியமா என்பதையும் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். பொது மருத்துவர் அல்லது நீரிழிவு மருத்துவர் அல்லது நாளமில்லா சுரப்பியல் மருத்துவரை அணுகி, முழுமையான பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

Diabetes

Also Read: Doctor Vikatan: வெயிட்டும் குறைய வேண்டும், மஸிலும் வேண்டும்; இதற்கு நான் என்ன வேண்டும்?

ரத்த அழுத்த அளவு பரிசோதிக்கப்பட வேண்டியது முக்கியம். கூடவே ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற உப்புகளின் அளவுகளும் சரிபார்க்கப்பட வேண்டும். அவற்றையெல்லாம் பார்த்தபிறகே உங்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளை மருத்துவரால் பரிந்துரைக்க முடியும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/why-there-is-giddiness-after-eating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக