Ad

சனி, 30 அக்டோபர், 2021

தீபாவளி போனஸை இப்படி ஸ்மார்ட்டாகவும் பயன்படுத்தலாம்; நிபுணரின் வழிகாட்டல்!

இந்தியாவில் ஆரம்பக் காலத்தில் வாரம் ஒரு முறை சம்பளம் கொடுக்கும் முறையே நடைமுறையில் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்தான் மாதச் சம்பள முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. அதாவது, நான்கு வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் எனக் கணக்கிட்டு மாதம் ஒரு முறை சம்பளம் கொடுக்கப்பட்டது. மாதத்துக்கு ஒரு சம்பளம் என்றால் ஆண்டுக்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால், ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் என்கிறபோது 13 மாதம் சம்பளம் வர வேண்டும். தொழிலாளர்கள் ஏமாற்றப்படுவதாக, ஒரு மாத சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படுவதாகத் தொழில் சங்கங்கள், 1930 முதல் 1940 வரை 10 ஆண்டுகள் மகாராஷ்டிராவில் தொடர்ந்து போராடின.

இந்தத் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து ஒரு மாத சம்பளத்தை வழங்குவது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பிரிட்டிஷ் அரசு ஆலோசனை நடத்தியது.

இந்தியாவில் அதிக பேரால் கொண்டாடப்படும் தீபாவளி திருவிழாவின்போது தொழிலாளர்களுக்கு அதிக பணம் தேவைப்படும். அந்தச் சமயத்தில் போனஸ் கொடுத்தால் உதவியாக இருக்கும் எனத் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இதன் விளைவாக 1940-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது.

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், https://ift.tt/3nMNPY6

கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு பலருக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த வருடம் அப்படி இல்லை. தொழில், பொருளாதாரம், நிறுவனங்களின் நிதி நிலவரம் எதிர்பார்த்ததைவிட வேகமாக மேம்பட்டிருப்பதால் பலருக்கும் தீபாவளி போனஸ் கிடைத்திருக்கும். ஓராண்டு உழைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்த ஊக்கத் தொகையை பயனுள்ளதாகச் செலவிடுவது மிகவும் முக்கியமாகும்.

தனிநபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தேவையைப் பொறுத்து புதிய ஆடைகள், தங்க நகைகள், டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள், கார், செல்போன் வாங்குவது, சுற்றுலா செல்வது எனப் பலவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

பெரும்பாலானோர் (வறட்டு) கௌரவத்துக்கான புதிய மாடல் ஸ்மார்ட் போன் வாங்குகிறார்கள். ஆனால், இன்றைய நிலையற்ற சூழ்நிலையில் தீபாவளி போனஸைக் கொண்டு வேறு சில நிதி சார்ந்த விஷயங்களைச் செய்வது அவசியமாகிறது.

அவசரக் கால நிதியை உருவாக்குதல்!

கொரோனா பாதிப்பு முதல் அலையின்போதுதான் பலருக்கும் அவசரக் கால நிதியின் (Emergency Fund) அவசியம் தெரிய வந்திருக்கும். சம்பளம் / வருமானம் தடைபட்டதால் அவசரக் கால நிதி இல்லாதவர்கள் குடும்பச் செலவு, கடன் தவணை, காப்பீட்டு ப்ரீமிய தவணை, ஆர்.டி, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி தவணை ஆகியவற்றில் சிக்கலைச் சந்தித்திருக்கிறார்கள். பலருக்கு தாங்கள் சேர்த்து வைத்த அவசரக் கால நிதி கரைந்திருக்கும்.

Health Insurance

Also Read: “7 ஃபண்டுகளில் ரூ.72,500 முதலீடு... ஓய்வுக்காலம் குறித்த கவலை இல்லை!’’

அவர்களைப் போன்றவர்கள் தீபாவளி போனஸ் தொகையில் மிக அவசியமான செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அவசரக் கால நிதியுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
இதுவரை அவசரக் கால நிதியை சேர்த்து வைக்காதவர்கள், இந்த போனஸ் தொகையிலிருந்து ஆரம்பிக்கலாம். அவசரக் கால நிதி என்பது குடும்ப மாதச் செலவைப்போல் 3 முதல் 6 மடங்கு வைத்துக்கொள்வது நல்லது.

ஆயுள் காப்பீடு

இதுவரையும் ஆயுள் காப்பீடு பாலிசி எடுக்காதவர்கள் அல்லது ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 15 மடங்குக்குக் குறைவாக ஆயுள் பாலிசி எடுத்திருப்பவர்கள், கவரேஜ் தொகையை அதிகரிக்க இந்த போனஸ் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிக தொகை போனஸ் பெறுபவர்கள் ஒற்றைத் தவணை ப்ரீமியம் கட்டி டேர்ம் பிளான் எடுத்துக்கொள்ளலாம். டேர்ம் பிளான் என்கிறபோது குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும்.

மருத்துவக் காப்பீடு

மருத்துவக் காப்பீடு கவரேஜுக்கு ஓரிரு லட்சம் ரூபாய் போதாது, பல லட்சம் ரூபாய்க்குத் தேவை என்பதை கொரோனா பாதிப்பு உணர்த்தியிருக்கிறது. இதுவரை தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மருத்துவப் பாலிசி எடுக்காதவர்கள், குறைவான கவரேஜ்க்கு பாலிசி எடுத்திருப்பவர்கள் இந்த போனஸ் பணத்தைக் கொண்டு எடுத்துக்கொள்ளலாம். அலுவலக ஹெல்த் பாலிசி மட்டும் வைத்திருப்பவர்கள் தனியே ஒரு பாலிசி எடுத்துக்கொள்வது பற்றி யோசிக்கலாம். மேலும், ஏற்கெனவே அடிப்படை பாலிசி வைத்திருப்பவர்கள் டாப் பாலிசி எடுக்க இந்த போனஸ் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதிக வட்டியிலான கடன்களை அடைக்க..!

அதிக வட்டி வரும் தனிநபர் கடன்கள் (ஆண்டு வட்டி 14 % - 22%), கிரெடிட் கார்ட் கடன்களை (ஆண்டு வட்டி 35 % - 40%) முடிக்க அல்லது குறைக்க போனஸ் பணத்தைப் பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித் தனம் மற்றும் லாபகரமாக இருக்கும்.

வீட்டுக் கடனுக்கான வட்டி இப்போது ஒற்றை இலக்கத்தில் சுமார் 7 சதவிகிதமாக இருப்பதால், அந்தக் கடனை அடைப்பது லாபகரமாக இருக்காது. திரும்பக் கட்டும் அசல் (நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்) மற்றும் வட்டிக்கு (ரூ.2 லட்சம்) வரிச் சலுகை வேறு இருக்கிறது.

Stock Market (Representational Image)

பங்குச்சந்தை சார்ந்த முதலீடு

நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்க்க பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் போனஸ் பணத்தை முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை உச்சத்தில் இருப்பதால், போனஸ் பணத்தை லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி) மூலம் மாதம் குறிப்பிட்டத் தொகையை சுமார் 12 முதல் 24 மாதங்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுக்கு மாற்றலாம்.

நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது என்றால் லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு அதிலிருந்து 8,10 தவணைகளாக பணத்தை எடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் உங்களின் நிதி இலக்குகளை விரைந்து நிறைவேற்ற முடியும்.

ஓய்வுக் காலத் திட்டமிடல்

பலரும் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் ஆகியவற்றுக்குதான் முதலீடு செய்து வருகிறார்கள். விலைவாசி உயர்வைக் கணக்கில் எடுத்தால் பி.எஃப் சேமிப்பு மட்டுமே ஓய்வுக் காலத்துக்கு பத்தாது. மேலும், ஓய்வுக் கால செலவுக்கு கடன் கிடைக்காது என்பதால், அதற்கு இளம் வயதிலேயே முதலீடு செய்து வருவது அவசியமாகும். உங்களின் ஓய்வுக் காலத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது என்றால் பங்கு சார்ந்த திட்டங்களிலும் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்ட்கள்) குறுகிய காலம் இருக்கிறது என்றால் கடன் சந்தை சார்ந்த திட்டங்களிலும் (எஃப்.டி, கடன் ஃபண்ட்கள்) முதலீடு செய்து வாருங்கள்.

வீட்டுக் கடன் முன் பணம்

சொந்த வீட்டை கடனில் வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்குத் தேவையான முன் பணத்துக்கு போனஸ் பணத்தை ஒதுக்கி வைக்கலாம். அதிக முன் பணம் தேவைப்பட்டால், அடுத்துவரும் ஆண்டுகளின் போனஸ் தொகையையும் முதலீடு செய்து வரலாம்.

வீடு

Also Read: வங்கியை விட அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்; இதில் உங்களுக்கேற்ற திட்டம் எது? - 34

வீடு வாங்குவற்கான முன் பணம் எவ்வளவு நாளைக்குள் தேவை என்பதைப் பொறுத்து, குறுகிய காலம் என்றால் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகளிலும், நடுத்தரக் காலம் என்றால் ஹைபிரீட் ஃபண்டுகளிலும் நீண்ட காலம் என்றால் டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளிலும் முதலீடு செய்து வரலாம்.

இன்வெட்டர் வசதி..!

பலருக்கும் கொரானாவால் அலுவலகம் செல்லும் அலைச்சல் இல்லாத வீட்டிலிருந்தே வேலை என்கிற வாய்ப்பு வாய்த்திருக்கிறது. சில நேரங்களில் நாள் முழுக்க மின்சாரம் இல்லாதபோது வேலை செய்ய பலரும் திண்டாடிப் போகிறார்கள். மாதச் சம்பளக்காரர்கள் என்றால், சம்பளம் குறைக்க வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், சொந்தமாகத் தொழில் செய்பவர்கள், ஒப்பந்த வேலையில் இருப்பவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அது போன்றவர்கள் இன்வெட்டர்களை ஏற்படுத்திக்கொள்ள போனஸ் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- என்.விஜயகுமார், நிதி ஆலோசகர்.



source https://www.vikatan.com/business/investment/expert-says-how-can-we-spend-our-deepavali-bonus-effectively

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக