Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

Doctor Vikatan: புனித் ராஜ்குமாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு; பலருக்கு உடற்பயிற்சியின்போது ஏற்படுவதேன்?

விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை ஆரோக்கியத்துக்கான விஷயங்களாகத்தானே வலியுறுத்தப்படுகின்றன.. ஆனால் கடந்த காலத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்தபோதெல்லாம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களை அடிக்கடி பார்க்கிறோம். நடிகர் புனித் ராஜ்குமார்கூட வொர்க் அவுட் செய்துகொண்டிருந்தபோதுதான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாகச் சொல்லப்படுகிறதே.... அப்படியானால் உடற்பயிற்சி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டுமா என்ன?

- தினேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

ஷீபா தேவராஜ்

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

``மிகவும் நல்ல கேள்வி. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.

ஒன்று- உடற்பயிற்சி செய்யும் போது ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக, அதற்கு உடற்பயிற்சிதான் காரணம் என்று அர்த்தம் இல்லை. இரண்டு - மருத்துவரின் ஆலோசனையுடனும், மிதமாகவும் செய்யப்படும் உடற்பயிற்சிகள் ஆரோக்கியமானவையே.

இன்னும் விளக்கமாகப் பார்ப்போம். மாரடைப்பு என்பது ஓர் இரவில் நிகழ்வதில்லை. அந்த நபருக்கு அறிகுறிகள் இருந்திருக்கும் அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும் சிக்கல்கள் அவருக்கு ஏற்கெனவே இருந்திருக்க வேண்டும். ஓய்வின்மை, பரபரப்பான வேலை, உடலில் நீர்ச்சத்து இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவு, நேரந்தவறிய உணவுப்பழக்கம், மன அழுத்தம் ஆகியவை இதயப் பிரச்னைகளுக்கு வழிவகுப்பவை.

இரண்டாவதாக, அதிகப்படியான உடற்பயிற்சிகள் செய்வது மற்றும் உடல்நலப் பிரச்னைகளைக் கவனிக்காமல் இருப்பதும்கூட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். அதன் விளைவாகவும் மாரடைப்பு வரலாம்.

Heart attack (Representational Image)

Also Read: "அவர் ஊர்ல அவர் ராஜா" - புனித் ராஜ்குமாருடனான நினைவுகள் பகிரும் சமுத்திரக்கனி

உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்துக்கான அடிப்படை என்பதை நாம் அறிவோம். ஆனால் உடல் ஓய்வு கேட்பதையோ, சரியாகச் சாப்பிட வேண்டியதன் அவசியத்தையோ, ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையோ உடல் சில அறிகுறிகளின் மூலம் நமக்கு எச்சரிப்பதைப் புறக்கணிக்கிறோம்.

சுருக்கமாகச் சொல்வதானால், மாரடைப்பு என்பது, ஆரோக்கியம் அலட்சியப் படுத்தப் படுவதால் ஏற்படும் கடைசி நிகழ்வாக இருக்குமே தவிர, வொர்க் அவுட் செய்வதால் நிகழ்வதல்ல."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/doctor-explains-about-the-relationship-between-gym-workouts-and-cardiac-arrest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக