Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

தென்காசி: ரூ.1 கோடி கேட்டாரா திமுக மாவட்டச் செயலாளர்?! - யூனியன் பெண் தலைவர் ராஜினாமா பின்னணி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட கடையம் ஒன்றியத்துக்கு, அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது 10-வது வார்டில் தி.மு.க சார்பாக செல்லம்மாள் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ராஜினாமா செய்த செல்லம்மாள்

அதன் பின்னர் ஒன்றியக்குழுத் தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அதில், திமுக சார்பாக ஜெயக்குமார் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள யூனியன் கவுன்சிலர்களில் தி.மு.க 11 இடங்களிலும் அ.தி.மு.க 5 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றிருந்தது.

யூனியன் கவுன்சிலர்களில் தி.மு.க-வுக்கு பெரும்பான்மை இருந்ததால் தி.மு.க வேட்பாளர் ஜெயகுமார் சுலபமாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் துணையுடன் செல்லம்மாள் என்பவர் வெற்றி பெற்றார். அதனால் அதிர்ச்சியடைந்த கட்சி நிர்வாகிகள் இது குறித்து விசாரித்து ஒன்றிய செயலாளர் குமார் பாண்டியன் என்பவரை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கினார்கள்.

அதிகாரியிடம் கடிதம் கொடுக்கும் செல்லம்மாள்

கடையம் வட்டார தி.மு.க-வில் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. கட்சிக்குள் நடந்த இந்த உள்குத்து விவகாரத்தின் பின்னணியில் ஒன்றிய செயலாளர் குமார் பாண்டியன் இருந்தது குறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். இந்த நிலையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று சென்ற ஒன்றியக்குழுத் தலைவர் செல்லம்மாள் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஒன்றியக்குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய செல்லம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தி.மு.க-வில் நடக்கும் உள்கட்சி பூசல் காரணமாக நான் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.

ராஜினாமா கடிதம்

இதனிடையே செல்லம்மாளிடம் ஒருவர் நேரில் பேசும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் பேசும் செல்லம்மாள், “என்னிடம் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கேட்கிறார். என்னிடம் அவ்வளவு பணம் எங்கே இருக்கு? அதனால் தான் ராஜினாமா செய்தேன்” என்கிறார்.

ராஜினாமா செய்த செல்லம்மாள் பேசும் ஆடியோ குறித்து தென்காசி மாவட்ட தி.மு.க செயலாளரான சிவபத்மநாதனிடம் கேட்டதற்கு, “கட்சி சார்பாக ஜெயகுமார் என்பவர் யூனியன் சேர்மன் தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் தேர்தல் பணிக்கு கவுன்சிலர்களுக்கு நிறைய செலவு செய்திருந்தார். அவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்த நிலையில் எந்தச் செலவும் செய்யாமல் குறுக்கு வழியில் செல்லம்மாள் பொறுப்புக்கு வந்துவிட்டார்.

முதல்வருடன் தென்காசி தி.மு.க மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன்

ஒன்றிய செயலாளராக இருந்த குமார் பாண்டியன் என்பவர் செல்லம்மாளுக்கு பின்னணியில் இருந்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவர் மீண்டும் கட்சியில் சேர்வதற்காகவும் பொறுப்பைக் கைப்பற்றவும் செல்லம்மாளிடம், ’பணத்தைக் கொடு அல்லது பதவியை ராஜினாமா செய்’ எனச் சொல்லியிருக்கலாம். இது தவிர நான் செல்லம்மாள் என்பவரைப் பார்த்தது கூட கிடையாது. நான் யாரிடமும் பணத்தைக் கேட்கவும் இல்லை” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/newly-elected-chairperson-resigns-for-political-reasons

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக