Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

AKS - 49 | கவிதா vs பாண்டியன் சண்டையும், குழப்பங்களின் குவியலாக இருக்கும் காயத்ரியும்!

நாள்தோறும் இரவு உணவு சாப்பிடும் தள்ளுவண்டி கடையில் பாண்டியன் கவிதாவுக்காகக் காத்திருக்கிறான். கடைக்காரர் பாண்டியனிடம், பாண்டியனும் கவிதாவும் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று கேட்க, பாண்டியன் நாங்கள் இருவரும் நண்பர்கள் என விளக்கம் சொல்கிறான். கடைக்காரர், ”அப்படின்னு நினைக்கிறீங்களா, அட போங்க தம்பி” என்று சொல்கிறார்.

’டின்னர் போகலாமா’ என்று கேட்கும் ராஜேஷிடம், கவிதா வீட்டுக்கு போய் சாப்பிடுகிறேன் என்று சொல்கிறாள். அந்த நேரம் பாண்டியன் கவிதாவிற்கு போன் செய்து சாப்பிட காத்திருப்பதாகச் சொல்கிறான். கவிதா வேண்டுமென்றே தான் ராஜேஷுடன் சாப்பிட்டுவிட்டு வருவதாகச் சொல்கிறாள். பாண்டியன் கடையில் இருந்து வருத்தமாகச் சாப்பிடாமலேயே கிளம்புகிறான்.

ஒவ்வொரு முறையும் கவிதா ராஜேஷுடன் வெளியே செல்வது, பாண்டியனை பழிவாங்குவதற்காக எனும் ரீதியிலே இருக்கின்றது. கவிதா பாண்டியனுடன் போனில் கூட சரியாக பேசுவதில்லை. கவிதா வீட்டிற்கு வந்ததும் பாண்டியன் தான் அவார்ட் வாங்கிய விஷயத்தை கவிதாவிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். கவிதாவோ அப்போதும் அவனைத் தவிர்ப்பதற்காக ராஜேஷிடம் போனில் பேசுகிறாள்.

AKS - 49

ஒருமுறை ராஜேஷ் கேட்டுக் கொண்டதற்காக பாண்டியன் கவிதா அழைத்தும் திரையரங்கிற்கு அவர்களுடன் செல்லவில்லை. கவிதா மற்றும் ராஜேஷுற்கு இடையிலான தனிப்பட்ட நேரத்தில் இனிமேலும் தான் உடன் இருப்பது நாகரிகம் இல்லை என சொல்லி பாண்டியன் ஒதுங்கிக் கொள்கிறான். ஆரம்பத்தில் கவிதாவிற்கும் அது புரிகிறது. ஆனாலும் ஒரு கட்டத்தில் கவிதாவின் ஈகோ, பாண்டியன் அவளை ஒதுக்குவதாக நினைத்துக் கொள்ளச் செய்கிறது. பதிலுக்கு கவிதா, அவனை ஒதுக்கத் தொடங்குகிறாள். அவனை வெறுப்பேற்றுவதற்காக மட்டுமே ராஜேஷுடன் நெருங்கி பழகுகிறாள்.

ஒரிரு முறை என்றால் பரவாயில்லை. கவிதா ராஜேஷுடன் இருக்கும் எல்லா நேரமும் பாண்டியனை வெறுப்பேற்றுவதையே 'Agenda'வாக வைத்திருக்கிறாள். மற்றவர்கள் விஷயத்தில் மிகுந்த மனமுதிர்ச்சி உடைய பெண்ணாக இருந்து புரிந்து கொண்டு அறிவுரை சொல்லும் கவிதா, பாண்டியன் விஷயத்தில் செய்வது அதற்கு நேர் எதிர் குணமாக இருக்கின்றது. தன்னை பகைத்துக் கொண்டால் இப்படித்தான் பழிவாங்குவேன் என்பதுபோல் பாண்டியனிடம் நடந்து கொள்கிறாள்.

தன்னிடம் பேசவரும் பாண்டியனைத் தவிர்ப்பதற்காக ராஜேஷுக்கு போன் செய்துவிட்டு தானே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். கவிதா ராஜேஷை தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறாள். அது ஓரளவிற்கு ராஜேஷிற்கும் புரிகிறது. இதனால் அவனும்கூட கவிதாவை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சூழ்நிலை ஏற்படும். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது கவிதா செய்தது விளையாட்டுத்தனமாகவும், ராஜேஷ் செய்வது தவறான விஷயமாகவும் பார்க்கப்படும்.

ராஜேஷ் கவிதாவிடம் அலுவலக விசயமாக பெங்களூர் போகிறேன் என்று சொல்கிறான். கவிதா முகம் வாடியதும், ’நீ வேண்டுமானால் என்னுடன் வா’ என்று அழைக்கிறான். கவிதா யோசிக்கிறாள். அவளை சம்மதிக்க வைக்க, ”பாண்டியனை வெறுப்பேற்ற இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று ராஜேஷ் சொல்லவும், கவிதா மகிழ்ச்சியாக சம்மதிக்கிறாள். அப்போதே பாண்டியனுக்கு கால் செய்து பெங்களூர் செல்லும் விஷயத்தைச் சொல்கிறாள்.

AKS - 49

கவிதா, கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் பாண்டியனை பழிவாங்கிக் கொண்டே இருக்கிறாள். கவிதாவும், பாண்டியனும் எப்போதுமே ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டையிட்டுக் கொள்வார்கள். பிறகு உடனே சேர்ந்தும் கொள்வார்கள். அது அவர்கள் இருவருக்குள் மட்டுமே இருக்கும் பிரச்னை. வெளியிலிருந்து ராஜேஷை போன்று மூன்றாவதாக ஒருவருக்கு அதில் தொடர்பிருக்கும்போது இந்த செல்ல சண்டைகள் தீவிரமான பிரச்னைகளை உண்டாக்கும்.

கவிதா விளையாட்டுக்குப் பழிவாங்குவதாக நினைத்துக்கூட பாண்டியனுடன் சண்டை போடலாம். பாண்டியன் அவனுக்கு அவார்டு கிடைத்த விஷயத்தை கவிதாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அவன் பேச நினைக்கும் எதையுமே கவிதா கேட்கும் நிலையில் இல்லை. பாண்டியன் தொடர்ந்து முகம் வாடியே இருப்பது கவிதாவிற்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ”சாப்ட்டியா” என்று பாண்டியன் கேட்கும்போது பதிலுக்கு அவன் சாப்பிட்டிருப்பானா என்று கூட கவிதா யோசிக்கவில்லை. சிறிது சிறிதாக அவர்களுக்குள் இருக்கும் அன்புச் சண்டைகள், ஈகோ சண்டையாக மாறுகிறது.

மதிய உணவு நேரத்தில் சிவா காயத்ரியின் இருக்கைக்கு வருகிறான். சாப்பிட கேன்டீன் போகலாமா என்று கேட்கிறான். தனக்கும் சேர்த்துதானே உணவு எடுத்து வந்திருக்கிறாய் எனக் கேட்கும் சிவாவிடம் காயத்ரி, தனக்கு மட்டுமே கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறாள். அதைத் தவறாக எடுத்துக் கொள்ளாமல் சிவா, ‘தான் காயத்ரி கொண்டு வந்ததை உண்பதாகவும், காயத்ரிக்கு பிடித்ததை கேண்டினில் வாங்கித் தருவதாகவும்’ சொல்கிறான். அப்படியும் மறுத்து காயத்ரி தன் தோழிகளுடன் உணவருந்துவதாகச் சென்று விடுகிறாள்.

காயத்ரி ஊரில் சுந்தருடன் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றது தெரிந்ததிலிருந்து சிவா அவளிடம் ஒதுங்கி இருக்கிறான். தனக்கு பிடித்திருப்பதை கூடுமானவரை மறைத்தே வைக்கிறான். காயத்ரி தானே விருப்பத்துடன் சிவாவிற்குப் பிடித்த உணவை சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறாள். வீட்டில் ’டிராப்’ செய்ய சொல்லி பைக்கில் செல்கிறாள்.

AKS - 49

முதல் நாள் சுந்தர் காயத்ரியிடம் அழுததை அடுத்து காயத்ரி ஒரே நாளில் மனம் திருந்தி விடுகிறாள். சிவாவைத் தவிர்க்க முயற்சி செய்கிறாள். நேற்றுவரை சுந்தரை தவிர்த்து சிவாவிடம் பிரியமாக இருந்துவிட்டு இன்று சிவாவைத் தவிர்க்கிறாள்.

சிவாவை போன்று ஏற்கெனவே தனிமையில் இருந்து சிறிது, சிறிதாக மற்றவருடன் பழக ஆரம்பிப்பவர்கள், திடீரென்று இப்படிப் பாதிக்கப்படுவதால், மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற ஒதுக்குதல்கள் சிவாவை போன்றவர்களை மொத்தமாக தங்களுடைய தனிமை மற்றும் மன பிரச்னைகளில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காயத்ரியும் உணர்வு கொந்தளிப்பில்தான் இருக்கிறாள். அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், குடும்பத்தை எதிர்த்து முடிவெடுக்கவும் துணிவில்லாதவளாக இருக்கிறாள். காயத்ரிக்கு தன் வீட்டை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பது நன்றாகவே தெரியும். சுந்தரை ஒதுக்குவதும் சாத்தியமில்லை. ஆனாலும் மனதில் அவளுக்கு சிவாவைத்தான் பிடித்திருக்கிறது.

Also Read: AKS - 48 | சுந்தர், பரத் இருவருக்கும் இருப்பது ஒரே பிரச்னைதானா? காயத்ரி என்ன செய்யவேண்டும்?

காயத்ரிக்கு திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமையை அவர்கள் குடும்பத்தினர் கொடுக்கவில்லை என்பது சரிதான். அதேசமயம் காயத்ரி 18 வயது நிரம்பிய பெண், பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் சென்று சுயவருமானத்தில் இருப்பவள். இன்னமும் தன்னால் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியவில்லை என்பதுடன் அந்தக் குழப்பங்களை மற்றவர் மீது ஏற்றி அவர்களையும் குழப்புவதுடன், தவறான நம்பிக்கையையும் கொடுத்து பிறகு பின்வாங்குவது நியாயம் இல்லை.

AKS - 49

கிஷோருக்கு உடல்நலம் சரியில்லை என்று புனிதா அவனுக்கு உதவுவதற்காக வீட்டிற்குச் சென்றது பற்றி பரத்திடம் சொல்கிறாள். பரத், ஆண்களை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்று சொல்லி கிஷோர் அவளிடம் ப்ரபோஸ் செய்யலாம் என எச்சரித்திருந்தான். அவன் கணித்திருந்தது போலவே மறுநாள் கிஷோர் புனிதாவிடம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறான். முதலில் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் பின்பு தான் ஏற்கெனவே பரத்துடன் “கமிட்” ஆகி இருப்பதை புனிதா கிஷோருக்குச் சொல்கிறாள்.

கிஷோர் தன்னிடம் ப்ரொபோஸ் செய்த விஷயத்தை புனிதா பரத்திடம் சொல்வாளா?
கவிதா- பாண்டியன் “Cold War” முடிவுக்கு வருமா?


source https://cinema.vikatan.com/television/aks-49-kavitha-vs-pandian-and-gayathris-confusions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக