Ad

புதன், 27 அக்டோபர், 2021

தனியார் நிறுவனம் மூலம் பசுமைக் குடில்கள்; எதிர்க்கும் விவசாயிகள்; என்ன காரணம்?

தேசிய தோட்டக்கலை வாரியத்தின் கீழ் நிதியுதவியுடன் விவசாயிகளால் பசுமைக் குடில்கள் அமைக்கப்படுகின்றன. விவசாயிகள் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறைக்கு விண்ணப்பித்து அவர்கள் அளிக்கும் ஒப்புதல் சான்றுடன் வங்கியை அணுகினால் கடன் வழங்குவார்கள். ஒரு விவசாயி ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை கடன் பெறலாம். வேலை முடிந்த பின்னர், தோட்டக்கலைத் துறையினர் ஆய்வு செய்வார்கள் பணிகள் முழுமையாக செய்யப்பட்டிருந்தால், ரூ.20 லட்சம் மானியம் கிடைக்க ஒப்புதல் வழங்குவார்கள். அதன்பிறகு, மானியத்தொகை நேரடியாக வங்கியில் செலுத்தப்பட்டுவிடும்.

சுமார் 15 ஆண்டுகளாக இவ்வாறான நடைமுறைதான் இருந்தது. ஆனால், தற்போது சொட்டுநீர் பாசனம், நெட் ஹவுஸ் அமைப்பது போன்று பசுமைக்குடில் அமைப்பதையும், திராட்சை, காய்கறி பந்தல் அமைப்பதையும் தனியார் நிறுவனங்கள் மூலம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டு வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

குடில்

இதுகுறித்து தேனி பசுமை பாலிஹவுஸ் அசோசியேஷன் பொருளாளர் கலாநிதியிடம் பேசினோம். ``தேசிய தோட்டக்கலை வாரியம், விவசாயிகளால் மட்டுமே பசுமைக் குடில் அமைக்கப்பட வேண்டும் என்ற விதியை வகுத்துள்ளது. அதனடிப்படையில் விவசாயிகள் பசுமைக் குடில் அமைக்க தாங்களாகவே குடிலுக்குத் தேவையான தரமான பொருள்களை வாங்கி அமைத்து வருகின்றனர். இவ்வாறு அமைக்கும்போதே சேதங்கள் அதிமாக ஏற்படுகிறது. தரமற்ற பொருள்கள் மூலம் அமைத்தால் சேதம் அதிகமாகும்.

Also Read: முல்லைப்பெரியாறு அணை: `கேரளா விஷமப்பிரசாரங்களை நிறுத்தவேண்டும்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

ஒவ்வோர் ஆண்டும் சித்திரை, ஆடி மாதங்களில் கடுமையான காற்று காரணமாகவும் பசுமைக் குடில்கள் சேதமடைந்து வருகின்றன. கஜா புயல் வந்தபோது பசுமைக் குடில்கள் அனைத்தும் சேதமடைந்தன. எனவே, குடில்களைத் தரமானதாக அமைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது. தற்போதுதான் பசுமைக் குடில் விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, அதிக விவசாயிகள் ஆர்வத்துடன் அதில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் பசுமைக் குடில் விவசாயம் பெரும் பாதிப்பைக் கொடுத்துள்ளது. புதிய குடில் அமைக்க வேண்டுமெனில் பல மடங்கு விலை அதிகமாகியுள்ளது. தனியார் நிறுவனங்கள் மூலம் அமைத்தால் விலை அதிகமாகவும், தரமும் இல்லாமல் இருக்கும். ஏனென்றால் கான்ட்ராக்ட் எடுப்பவர் மூலம் எல்லா பகுதிகளிலும் பணி செய்ய முடியாது. எனவே சப்-கான்ட்ராக்ட் விடுவார்கள். இதனால் அவர்கள் அதிக லாபம் பெற தரத்தைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்'' என்றார்.

திண்டுக்கல் பசுமைக் குடில் விவசாயி செந்தில், ``தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை உள்ளிட்டப் பகுதிகளில்தான் பசுமைக் குடில் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இதில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் வெள்ளரி மட்டுமே அதிகமாகப் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் வெள்ளரி பெரும்பாலும் கேரள மாநிலத்துக்குச் செல்லும். ஆனால், கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக கேரளாவுக்கு செல்லவில்லை. விற்பனையின்றி கிலோ ரூ.6 முதல் ரூ.8 -க்கும் விற்கும் நிலை இருந்தது. கடந்த ஒரு வாரமாகத்தான் வெள்ளரி கிலோவுக்கு ரூ.20-க்கு விற்பனையாகிறது. சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான பைப் உள்ளிட்டப் பொருள்களை வாங்க 20 தனியார் நிறுவனங்களின் பட்டியலை தமிழக அரசே வெளியிட்டுள்ளது. அவர்கள் விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்துவிட்டு, தோட்டக்கலைத்துறையிடம் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

கலாநிதி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல தனியார் நிறுவனங்கள் மூலம்தான் பசுமைக் குடில் அமைக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது. அப்போது அதற்கு விவசாயம் ஆட்சேபனை தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அதேபோல அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பசுமைக் குடில் அமைக்கத் தேவையான பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்த அரசு பரிசோதனை மையங்கள் மதுரையிலும் சேலத்திலும் உள்ளன. இங்கு பொருள்களை ஆய்வு செய்து தரத்தை உறுதிப்படுத்திய பிறகே குடில் அமைத்து வருகிறோம். இந்த நடைமுறைகள் எல்லாம் தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு ஏக்கரில் பசுமைக்குடில் அமைக்க 40 டன் துருப்பிடிக்காத ஜிஐ பைப்கள் தேவை. இந்தப் பைப்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.52-க்கு கிடைத்தது. தற்போது அதே பைப் கிலோவுக்கு ரூ.95 ஆக விலை உயர்ந்துள்ளது. ஆனால், மானியம்தான் குறைவாகக் கிடைக்கிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் மூலம் குடில் அமைத்தால் எங்களுக்கு வர வேண்டிய மானியம் கிடைத்தாலும் எவ்வித பயனும் இல்லை'' என்றார்.

பாலிஹவுஸ்

Also Read: உடையும் தறுவாயில் தடுப்பணை: `அதிகமாக மணல் அள்ளப்பட்டதே காரணம்!' - விவசாயிகள் வேதனை

இதுகுறித்து தேனி தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாண்டியிடம் விசாரித்தோம்.

``தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எவ்வித வாய்மொழி உத்தரவும் அளிக்கவில்லை. ஒரே மாதிரியாகவும் தரமானதாகவும் அமைக்கவே தனியார் நிறுவனங்கள் மூலம் பசுமைக் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எவ்வித முறையான அறிவிப்புகளும் வரவில்லை. எனவே, விவசாயிகள் குழப்பிக்கொள்ள வேண்டாம். பசுமைக் குடில் அமைப்பதில் ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடரும்'' என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/farmers-oppose-the-tn-horticulture-dept-s-new-regulation-on-greenhouse-subsidy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக