Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

தீபாவளி பட்டாசுக் கடை அனுமதிக்கு லஞ்சமா? சமூக வலைதளங்களில் வைரலான ரேட் கார்டு; அதிகாரிகள் விளக்கம்

தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள்தான் நினைவுக்கு வரும். கொரோனாவால் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை களையிழந்தது. இந்த ஆண்டு மக்கள் ஓரளவு இயல்பு நிலைமைக்குத் திரும்பியிருப்பதால், தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயாராகிவருகின்றனர். அதனால், பட்டாசுக் கடைகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாகப் பட்டாசுக் கடைகளைத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை ஆகிய மூன்று துறைகளில் அனுமதி பெற வேண்டும். அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே ஒவ்வொரு துறையிலும் பெறப்பட்டு, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு லைசென்ஸ் வழங்கப்பட்டுவருகிறது. லைசென்ஸ் வழங்கியதில் மூன்று துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களால் முடிந்தளவுக்கு லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், தற்போது தீயணைப்புத் துறையின் (லஞ்ச) ரேட் கார்டு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விதிகள்

அந்த ரேட்கார்டில், எதற்கெல்லாம் எவ்வளவு தொகை லஞ்சமாகப் பெறப்படுகிறது என்ற பட்டியல் இருக்கிறது. பொதுவாக, பட்டாசுக் கடைகளுக்கு நிலைய அலுவலர், மாவட்ட உதவி அலுவலர் ஆகியோர் ஆய்வுக்குச் சென்று அதன் ரிப்போர்ட்டை மாவட்டத் தீயணைப்புத் துறை அலுவலரிடம் சமர்ப்பிப்பார்கள். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ரேட் கார்டில், விதிமுறைகள் எந்தளவுக்கு மீறப்பட்டிருக்கிறதோ அதற்கேற்ப 15,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை லஞ்சமாகப் பெறப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ரேட்கார்டில் அனைத்து மல்டி ஸ்டோரிட் பில்டிங்குகளுக்கு (Multi storied building - MSB 17 மீட்டருக்கு மேல்) லைசென்ஸ் வழங்குவதற்குக் கோடிக் கணக்கில் லஞ்சம் பெறப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பில்டிங்குக்கான லைசென்ஸை தீயணைப்புத்துறை இயக்குநர் வழங்குவார். ஆய்வுக்காக மாவட்ட அலுவலர், இணை, துணை, கூடுதல் இயக்குநர்கள் உடன் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ரேட் கார்டு குறித்துத் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நேர்மையான சில அதிகாரிகளிடம் பேசினோம்.

``தமிழகம் முழுவதும் தீயணைப்புத் துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளுக்கானத் தற்காலிக லைசென்ஸ் 15 நாள்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்த லைசென்ஸை வழங்க 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த விதிகள் எல்லாம் பெயரளவுக்கு மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு லைசென்ஸ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக நிரந்தர கட்டடத்தில் தான் (செங்கல், கற்களால் கட்டப்பட்டவை) பட்டாசுகளை விற்க அனுமதிக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் அந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. குறைந்தபட்சம் 9 சதுர மீட்டர் பரப்பளவும் (90 சதுர அடி) அதிகபட்சம் 25 சதுர மீட்டர் (250 சதுர அடி) பரப்பளவும் கொண்டதாகவே பட்டாசுக் கடைகள் இருக்க வேண்டும். ஆனால், திறந்தவெளி மைதானத்தில் 1000 சதுர அடிக்கு மேல் உள்ள இடத்துக்குக் கூட லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. கடைக்குள் செல்ல உள்ளே, வெளியே என தனித்தனி பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் ஒரு வழிப்பாதை மட்டுமே இருக்கிறது. திருமண மண்டபங்களில் பட்டாசுக்கடைகள் அமைக்கக்கூடாது என்ற விதியும் மீறப்பட்டிருக்கிறது. ஆனால், திருமண மண்டப வளாகத்துக்குள் ஷெட் அமைக்கப்பட்ட பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது" என்றனர்.

Also Read: லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கைது!

திருமண மண்டப வளாகத்துக்குள் பட்டாசு கடை

குற்றச்சாட்டில் சிக்கியவருக்குச் சலுகை

கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளியையொட்டி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் சோதனையில் வடசென்னை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன் சிக்கினார். அவரிடமிருந்து கணக்கில் வராத 1,60,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணன், தற்போதும் வடசென்னையிலேயே பணியாற்றி வருகிறார். இவரைத் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய உயரதிகாரி ஒருவர், நடவடிக்கையிலிருந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. குற்றச்சாட்டில் சிக்கியவருக்கு, `ஏன் இந்த சலுகை'? என்ற கேள்வி தீயணைப்புத் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது.

இது குறித்து தீயணைப்புத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு. ``நீங்கள் சொல்வதைப்போலப் பட்டாசுக் கடைகளுக்கும் மற்ற சேவைகளுக்கும் லஞ்சம் வாங்கப்படுவது ஆதாரங்களுடன் தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்களில் உலா வரும் ஒரு ரேட்கார்டுதான்" என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்துவார்கள். ஆனால், இந்த ஆண்டு பெரியளவில் லஞ்ச ஒழிப்பு சோதனை இதுவரை நடத்தப்படவில்லை. அதனால் சுதந்திரமாக அரசு அலுவலகங்களிலும், கார் பார்க்கிங் பகுதியிலும், கார்களுக்குள்ளும் டீலிங் பேசப்பட்டு லஞ்சப் பணம் கைமாற்றப்படுகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் விதிகளை மீறி ஒரே நபருக்கு 5 பட்டாசுக் கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கச் சம்பந்தப்பட்ட தீயணைப்புத்துறை அதிகாரியும், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளும் சில லட்சங்களை வாங்கியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, லஞ்சத்தைச் சமமாக உயரதிகாரிகள் வரை பிரித்துக் கொடுத்திருப்பதால் தங்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்ற தைரியத்தில் வலம் வருகின்றனர்.

மின்வயர் அருகே பட்டாசு கடை

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்த பட்டாசுக் கடை விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப்பிறகே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கின்றனர். அதைப்போல, விதிகளை மீறி லைசென்ஸ் வழங்கப்பட்டிருக்கும் பட்டாசுக் கடைகளைச் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள உயரதிகாரிகள் ஆய்வு செய்தால் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க முடியும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் பணியாற்றும் அதிகாரிகள் அடாவடி வசூலில் ஈடுபட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தீபாவளி சீசன் பிசினஸ் மூலம் கல்லா கட்டியிருக்கும் அரசுத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை பாயுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/article-about-fire-department-bribe-rate-card

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக