Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

``அன்றிரவு தூங்கவே இல்லை!" - படுகொலை செய்யப்பட்ட தேவமணி வீட்டில் அன்புமணி ஆறுதல்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரைச் சேர்ந்த பா.ம.க. மாவட்டச் செயலாளர் தேவமணி கடந்த 22-ம் தேதி கூலிப்படையானாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அடிக்கடி கட்சி மாறும் கலாசாரம் உள்ள புதுவை மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பாமக-வில் அடிமட்டத் தொண்டனாக இருந்து, மாவட்டச் செயலாளராக உயர்ந்து, கட்சிக்கு களப்பணியாற்றிவர் தேவமணி. ஆனால், அவர் மரணத்திற்கு மருத்துவர் இராமதாஸோ, அன்புமணியோ அஞ்சலி செலுத்தவரவில்லை என்று மனக்குமுறல் புதுவை நிர்வாகிகளுக்கு இருந்து வந்தது.

Also Read: `அன்புமணிக்கு புதுப் பதவி முதல் அனிதா மீது அப்செட்டில் ஸ்டாலின் வரை!' - கழுகார் அப்டேட்ஸ்

அன்புமணி

இந்த நிலையில், அன்புமணி இராமதாஸ் நேற்று திருநள்ளாறில் உள்ள தேவமணி வீட்டுக்குச் சென்று, அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தேவமணி மனைவி மாலா, மகன் பிரபாகரன், மகள்கள் சரஸ்வதி, சிந்து ஆகியோருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அவர்களின் படிப்பு விவரங்களைக் கேட்டறிந்தார். தேவமணியின் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்புமணி பேசுகையில், "தேவமணி கொலையான செய்தி கேட்ட அன்றிரவு தூங்கவே இல்லை. காரைக்கால் என்றால் தேவமணிக்கு ஒரு போன போட்டால் போதும். எந்தக் காரியத்தையும் உடனே முடித்திடுவார். அவரின் மறைவு நம் எல்லாருக்குமே பேரிழப்பு. கட்சித் தலைமையும், தொண்டர்களும் உங்கள் குடும்பத்திற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம். தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார்.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தேவமணி கொலையில் பெரிய சூழ்ச்சி இருக்கிறது. பெயரளவுக்கு நான்கு நபர்களைக் கைது செய்திருக்கிறார்கள். முக்கிய குற்றவாளிகள் அனைவரும் வெளியில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய சூழ்ச்சி இருப்பதாகத் தகவல் வருகிறது.

காவல்துறையினர் சிலர்கூட இதில் தொடர்பில் இருப்பதாகச் செய்திகள் வருகிறது. எனவே உண்மையானக் குற்றவாளிகள் அத்தனை பேரையும் கைது செய்து, கடுமையாகத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். மனசாட்சி இல்லாத மனிதர்களால் நடத்தப்பட்ட வெறிச்செயல். என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை தர வேண்டும். கூலிப்படையை ஏவி கொலை செய்யும் கலாசாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். தற்போது, புதுவையில் கூலிப்படையினரால் அரங்கேற்றப்படும் கொலைகள் அதிகரித்திருக்கிறது. புதுவை அரசு தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவமணி கொலை வழக்கை முறையாக நடத்தாவிட்டால் பாமக கடுமையான தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். அதேபோல், சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் கோரிக்கை முன்வைக்க இருக்கிறோம்.

அன்புமணி

அதற்கு முன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தன்ராஜ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து புதுவை துணைநிலை ஆளுநர், முதல்வரை நேரில் சந்தித்து முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தவிருக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/anbumani-urges-pondy-govt-to-tighten-the-investigation-of-devamani-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக