Ad

செவ்வாய், 4 மே, 2021

ம.தி.மு.க: மதுராந்தகத்தில் மல்லை சத்யாவின் வெற்றியைக் காலி செய்த நாம் தமிழர் வேட்பாளர்!

`சட்டமன்றத் தேர்தல் வந்தாலே சறுக்கி விடுவார்' என்கிற நீண்ட கால விமர்சனத்துக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. தி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சி ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கங்களில்தான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது அவரின் கட்சிக்காரர்களுக்கே பயங்கர அதிர்ச்சி. ஆனாலும் வெற்றி வாய்ப்புகளைக் கருத்தில் கொண்ட மிகவும் நிதானமாகப் பயணம் செய்தார் வைகோ.

ம.தி.மு.க வைகோ

சீட்டு எண்ணிக்கையில் மட்டுமல்ல, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க தரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனையும் ஏற்றுக்கொண்டார். அந்தக் கட்சிக்கு, மதுரை (தெற்கு), வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில், மதுராந்தகம், பல்லடம் தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடியிருக்கிறது ம.தி.மு.க.

Also Read: வைகோ : பொங்கி எழுவாரா, பொறுமையைக் கையாள்வாரா..! - இந்த சட்டமன்றத் தேர்தலிலாவது கரையேறுமா ம.தி.மு.க?

மதுரை தெற்குத் தொகுதியில் பூமிநாதன், சாத்துார் தொகுதியில் - ரகுராமன், வாசுதேவநல்லுார் தொகுதியில் சதன் திருமலைக்குமார், அரியலுார் தொகுதியில் சின்னப்பா ஆகிய நான்கு பேரும் வெற்றி பெற்றிருக்கின்றனர். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட, ம.தி.மு.-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட முத்துரத்தினமும் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர். இதில், மதுராந்தகம் தொகுதியில் மல்லை சத்யாவுக்கும், வெற்றி பெற்ற அ.தி.மு.க வேட்பாளர் மரகதம் குமாரவேலுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசன் என்பது 3570. ஆனால், மூன்றாவது இடத்தைப் பிடித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சுமிதா பெற்ற வாக்குகளோ 9,293. இதன்மூலம் ம.தி.மு.கவின் வெற்றி வாய்ப்பை அந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி திசைமாற்றி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நாம் தமிழர் கட்சி

``ம.தி.மு.க மற்றும் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் நடைமுறையில் பெரியளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. அடிப்படையான கருத்தியல் ரீதியில் சில மாறுபாடுகள் இருந்தாலும், தமிழ் மொழி, இன ஆதரவு, இயற்கை வளப் பாதுகாப்பு, ஏழு தமிழர் விடுதலை, ஈழத் தமிழர் ஆதரவு உள்ளிட்ட பல விஷயங்களில் இரண்டு கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. மத்திய மாநில அரசுகளின் மீதான எதிர்ப்பு வாக்குகள்தான் இங்கு இரண்டு கட்சிகளுக்கும் பிரிந்திருக்கின்றன. மற்ற கட்சி வேட்பாளர்களும் இங்கு பெரியளவில் வாக்குகளை வாங்கவில்லை'' என காரணத்தையும் அடுக்குகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/nam-tamilar-candidate-grabs-mallai-satyas-victory-in-maduranthagam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக