Ad

செவ்வாய், 4 மே, 2021

மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுப்பாரா முதல்வர் பினராயி விஜயன்? - பரபரக்கும் கேரள அரசியல்!

கேரள மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. பினராயி விஜயன் மீண்டும் கேரள முதல்வராக வரும் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாஸ் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் பெங்களூரில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். வீணா விஜயனுக்கும் சி.பி.எம் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டி.ஒய்.எஃப்.ஐ) தேசிய தலைவராக இருக்கும் முகம்மது ரியாசுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவனந்தபுரத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது.

பினராயி விஜயன்

வீணா விஜயன் மற்றும் முகம்மது ரியாஸ் ஆகியோருக்கு இரண்டாவது திருமணம் என்பதால் மிக எளிமையாக நடந்து முடிந்தது. ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அப்துல் காதரின் மகன்தான் முகம்மது ரியாஸ். இவர் 2009-ம் ஆண்டு கோழிக்கோடு தொகுதியில் சி.பி.எம் சார்பில் போட்டியிட்டு சுமார் 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நடந்துமுடிந்த தேர்தலில் கோழிக்கோடு மாவட்டம் பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகம்மது ரியாஸ் வெற்றிபெற்றுள்ளார். அவரும் மாமனார் பினராயி விஜயனுடன் எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குச் செல்ல உள்ளார்.

Also Read: `பா.ஜ.க வென்ற இடங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவோம்' - இப்படிச் சொன்னாரா பினராயி விஜயன்?!

இந்த நிலையில் பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாசுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள எல்.டி.எஃப் கூட்டணியில் போட்டியிட்ட மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மேழ்சிக்குட்டி அம்மா தோல்வியடைந்துள்ளார். ஏற்கனவே ஐந்து அமைச்சர்களுக்கு கட்சி கட்டுப்பாடுகள் காரணமாக போட்டியிட சீட் வழங்கப்படாமல் இருந்தது.

முகம்மது ரியாஸ் எம்.எல்.ஏ

அதுமட்டுமல்லாது ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.டி.ஜலீல் உறவினருக்கு சட்டவிரோதமாக பணி வழங்கிய விவகாரத்தில் லோக் ஆயுக்தா தீர்ப்பின்படி பதவி விலகியுள்ளார். இதையெல்லாம் கணக்கில் எடுத்து பார்க்கும்போது புதிய அமைச்சரவையில் பினராயி விஜயனின் மருமகன் முகம்மது ரியாசுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கேரள அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.



source https://www.vikatan.com/news/general-news/kerala-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக