தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்றத்தை முன்வைத்து தேர்தலில் பங்கேற்ற அணிகளில், ''உண்மையான மாற்று நாங்கள்தான்'' என சொல்லி அடித்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகள் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கூட்டணிக்குமே ஓரளவுக்கு சாதகமாகத்தான் வந்திருக்கின்றன. பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறது தி.மு.க. கடந்தமுறை சட்டமன்ற வாய்ப்பை தவறவிட்ட கம்யூனிஸ்ட்கள் இந்தமுறை வெற்றி பெற்றிருக்கின்றனர். போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 தொகுதிகளை வென்றிருக்கிறது காங்கிரஸ். அதேபோல, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத்துக்குள் நுழைகின்றனர்.
மறுபுறம் அ.தி.மு.க அணியில் எடுத்துக்கொண்டாலும், அதிகபட்சம் 50 தொகுதிகளில் வெல்வதே கடினம் என எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க யாரும் எதிர்பாராத வகையில் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் கூட மலர்வது கடினம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் நான்கு தொகுதிகளில் தாமரை மலர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலில், தனித்து நின்று படுதோல்வியைச் சந்தித்த பா.ம.கவும் இந்தமுறை ஐந்து தொகுதிகளில் வெற்றிக்கனியைச் சுவைத்திருக்கிறது. தவிர, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட பல கட்சிக்கு இந்தத் தேர்தலில் ஏறுமுகம்தான்.
ஆனால், மாற்று அணிகளாகப் போட்டியிட்ட, அ.ம.மு.க, தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளை உள்ளிட்ட டி.டி.வி தினகரன் தலைமையிலான அணியோ, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி உள்ளிட கட்சிகளை உள்ளடக்கிய கமல்ஹாசன் தலைமையிலான அணியோ, 234 தொகுதிகளிலும் தனியாகக் களம் கண்ட நாம் தமிழர் கட்சியோ ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளை, 6.5 சதவிகித வாக்குகளைப் பெற்று தி.மு.க, அ.தி.முகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.
நாம் தமிழர் கட்சி கடந்து வந்த பாதை!
2009-ம் ஆண்டு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாற்றப்பட்டது. ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களைவைத் தேர்தல் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி போட்டியிடவில்லை. முதன்முறையாக 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை 1.07 சதவிகிம் பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல் ரீதியாக மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது என பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டார் சீமான்.
அதனைத் தொடர்ந்து நடந்த, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. ஒட்டுமொத்தமாக 16,45,185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் 1.1-ல் இருந்து 3.87 ஆக அதிகரித்தது. அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.6%) வாக்குகள் பெற்று தி.மு.க, அ.தி.மு.கவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கையில் வளர்ச்சி!
நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்து வருகிறது. இந்தத் தேர்தலில், மாற்று அணிகளில் மற்ற இரு அணிகளின் மீதிருந்த அளவுக்கு எதிர்பார்ப்போ, மீடியா வெளிச்சமோ நாம் தமிழர் கட்சியின் மீது இல்லை. ஆனாலும், 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதியிலும் இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும் பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும் பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும் 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது.
கடந்த 2016 தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெறுவதே அந்தக் கட்சிக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதேபோல, அந்தத் தேர்தலில் பல தொகுதிகளில் மூன்றிலக்க வாக்குகளையே அந்தக் கட்சி பெற்றது. சீமான் பெற்ற 12,497 வாக்குகளே அந்தக் கட்சி பெற்ற அதிகமான வாக்காக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அது அப்படியே மாறியிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது அந்தக் கட்சிக்கு இது அபார வளர்ச்சியே. கட்சி மட்டுமல்ல, சீமான் மீதான மக்களின் கவனமும் அதிகரித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கடலூரில் தொகுதியில் போட்டியிட்டு, வெறும், 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்குத்தான் சீமானால் வரமுடிந்தது. ஆனால், இந்தமுறை கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறார். பெண்களை ஒப்புக்காக வேட்பாளர்களாக நிறுத்துகிறார்கள் என்கிற விமர்சனமும் சரிபாதி பெண் வேட்பாளர்களை நிறுத்தியபோது எழுந்தது. ஆனால், தற்போது அந்தக் கட்சி பெற்றுள்ள 30 லட்சம் வாக்குகளில் 16 லட்சம் வாக்குகள் பெண் வேட்பாளர்கள் வாங்கியதுதான் என பெருமிதமாகச் சொல்கிறார்கள் அந்தக் கட்சி நிர்வாகிகள்.
சாதித்தது எப்படி?
தேர்தல் காலங்களிலும் மற்ற நேரங்களிலும் சரி எப்போதும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து ஏரி, குளங்குளைத் தூர் வாருவது, நிலவேம்புக் கசாயம் கொடுப்பது, பன விதைகளை நடுவது, இரத்த தான முகாம் நடத்துவது, பகுதிப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுப்பது என எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். தமிழகத்தில் தற்போது ஊருக்கு நான்கு பேர் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு கிளை இல்லாத ஊர்களே இல்லை என்றளவுக்கு ஆகிவிட்டது.
Also Read: பெரும்பாலான தொகுதிகளில் 3 -வது இடம்! - கவனம் ஈர்க்கும் நாம் தமிழர் கட்சி!
கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். ``கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தவிர தேர்தலுக்கு மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரசாரம் செய்ய ஆரம்பித்ததுதான் தற்போது அவர்களுக்குக் கைகொடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவர்களால் மேம்படும் கட்சிக் கட்டமைப்பு அந்தக் கட்சியின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. தவிர, அரசியல் விமர்சகர்களால் அந்தக் கட்சிக்கு மைனஸாகப் பார்க்கப்படும்,'' தனித்துப் போட்டி என்கிற விஷயம்தான் எங்களை நோக்கி இளைஞர்கள் வருவதற்கும் மக்களின் கவனம் எங்கள் மீது திரும்புவதற்குக் காரணம். அதுவே எங்கள் பலம்' என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.
நாம் தமிழர் கட்சியின்மீது அனைவரும் முதன்மையாக வைக்கக்கூடிய விமர்சனம் அவர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதுதான். சோஷியல் மீடியாவில் தேர்தல் வைத்தால் சீமான்தான் முதலமைச்சர் ஆவார் என மாற்றுக் கட்சியினரால் அவர்கள் கேலி செய்யப்படுவதும் உண்டு. ஆனால், அது போன்ற விமர்சனங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி இருக்கிறது இந்தத் தேர்தல் முடிவுகள். அதேபோல கிராமப்புறங்களில் மட்டும்தான் செல்வாக்கு இருக்கிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநகரங்களில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்கிற கருத்துகளும் முன்வைக்கப்படுவதுண்டு. ஆனால், அதுவும் இல்லை என இந்தத் தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது.
தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்குப் பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித சட்டகத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ராஜ்ஜியம். அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் வேருன்றியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. எதிர்காலத்தில் இதைவிட அதிகமான களப்பணி, புதிதான் அரசியல் வியூகங்களை வகுத்தால் நிச்சயமாக கணிசமான இடங்களில் வெற்றியைக் கூட பெற அந்தக் கட்சியால் முடியும் என்பதே கள எதார்த்தமாக இருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/the-third-largest-party-in-tamil-nadu-nam-tamilar-partys-success-story
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக