Ad

திங்கள், 10 மே, 2021

டான்சி வழக்கு முதல் பேரறிவாளன் பரோல் வரை... யார் இந்த அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம்?

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் ஏராளமான அதிரடி சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் தங்கியிருந்த தாஜ்கோரமண்டல் நட்சத்திர விடுதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அனுப்பப்பட்டது முதல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக உயர் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே `கஞ்சா போஸ்டர்கள்’ ஒட்டப்பட்டது வரை அந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்த அதிரடி சம்பவங்களின் பட்டியல் மிகவும் நீளமானது.

ஜெயலலிதா

அவற்றில் ஒன்றுதான், வழக்கறிஞர் ஆர்.சண்முகம்சுந்தரம் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். அந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது.

தமிழக அரசின் டான்சி (Tamil Nadu Small Industries Corporation) நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் வாங்கியது. அதேபோல, டான்சி நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு நிலத்தை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களிலும் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோர் பங்குதாரர்கள்.

அரசு நிலங்கள் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டன. அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தி.மு.க முடிவுசெய்தது. இன்றைய மாநிலங்களவை உறுப்பினரும் அன்றைய தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்குப் பதிவு செய்ய முடிவுசெய்யப்பட்டது. அதற்கான மனுவைத் தயாரிக்கும் பணியில் ஆர்.சண்முகசுந்தரம் ஈடுபட்டிருந்தார். 1995 மே 31-ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவிருந்தது.

ஆர்.சண்முகசுந்தரம்

அந்த நிலையில்தான், வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. மே 30-ம் தேதி இரவு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த ஒரு ரவுடி கும்பல், வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியது. அவரது உடலின் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தன.

அவரது கைகளிலும் கால்களிலும் பல இடங்களில் எலும்புமுறிவுகள் ஏற்பட்டன. அவரது இடது கை சுண்டுவிரல் துண்டாகி கீழே விழுந்தது. ரத்தவெள்ளத்தில் மிதந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சம்பவம், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதித்துறையினர் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு, சாலை மறியல் உள்பட பல போராட்டங்களில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூன்று வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். சென்னை அண்ணாசாலையில் மறியல், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் எனப் போராட்டங்கள் தொடர்ந்தன. ஆழமான வெட்டுக்காயங்களுடன் பல வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

அந்த தாக்குதல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான வெல்டிங் குமார் உள்பட ஆறு பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டார்.

ஸ்டாலின்

டான்சி வழக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்கு எதிரான பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு உள்பட ஏராளமான வழக்குகளில் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகியிருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகி வாதாடியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது தொடர்பான வழக்கிலும் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகியிருக்கிறார்.

மூத்த வழக்கறிஞரான ஆர்.சண்முகசுந்தரம் ஓர் இரண்டாம் தலைமுறை வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை எஸ்.ராஜகோபாலும் ஒரு வழக்கறிஞர். அவர், மதுரையில் அரசு வழக்கறிஞராகவும் சி.பி.ஐ-க்கான சிறப்பு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். 1953-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த ஆர்.சண்முகசுந்தரம், சட்டப்படிப்பை முடித்தவுடன் 1977-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞரான என்.நடராஜனிடம் ஜூனியர் வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார்.

பேரறிவாளன்

தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு 1996-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சியில், தமிழக அரசு வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 2001 வரை அரசு வழக்கறிஞராக அவர் இருந்தார். 2000-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், 2002-ம் ஆண்டு தி.மு.க-வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். 2008-ம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்தார்.

Also Read: கமல்ஹாசனுக்கு கட்சிக்குள்ளேயே துரோகம் இழைக்கப்பட்டதா? - நடந்தது என்ன?

வழக்கறிஞராக 44 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆர்.சண்முகசுந்தரம், சென்னை உயர் நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சட்டக் கல்லூரிகள், சட்டப் பல்கலைக்கழகங்கள், சர்வதேச அளவிலான மாநாடுகள் ஆகியவற்றில் அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம்

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சியமைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் செய்த தியாகத்துக்காகவும் உழைப்புக்காகவும் தி.மு.க தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பல அங்கீகாரங்களை சண்முகசுந்தரத்துக்கு வழங்கியிருக்கிறார். அந்த வழியில் மு.க.ஸ்டாலின் தற்போது சண்முகசுந்தரத்துக்கு மிகப்பெரிய பொறுப்பை வழங்கியிருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/new-advocate-general-of-tamilnadu-government-shanmugasundaram-life-history

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக