விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் 6 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் விசிகவும் போட்டியிட்டது. திமுக போட்டியிடும் 6 தொகுதிகளில் விழுப்புரத்தை தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகளிலும் கடந்த முறை போட்டியிட்ட நபர்களையே மீண்டும் நிறுத்தியிருந்தது. அதிமுக கூட்டணி சார்பில், அதிமுக 4 இடங்களிலும், பாமக இரண்டு இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் போட்டியிட்டது. அதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் திண்டிவனம் தவிர்த்து மீதமுள்ள மூன்று தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட நபர்களையே வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தியது.
7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 6 மையங்களில் நேற்று முந்தினம் நடைபெற்று முடிந்தது. செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் தொகுதிகளில் திமுகவும், திண்டிவனம் மற்றும் வானூர் தனி தொகுதிகளில் அதிமுகவும், மயிலம் தொகுதியில் பாமகவும் வெற்றி பெற்றுள்ளது.
திண்டிவனம், மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தோல்வியை தழுவியுள்ளனர். விழுப்புரம் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றியைப் பெற்றிருந்த க.பொன்முடியை, 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தோற்கடித்து நடைமுறையை மாற்றி காட்டியவர் சி.வி.சண்முகம்.
தொடர்ந்து 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்ற இவர், மூன்றாவது முறையாக விழுப்புரத்தில் ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில், முன்னாளில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்து திமுக-வில் இணைந்துள்ள ஆர்.லட்சுமணனிடம் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். விழுப்புரம் தொகுதி தோல்விக்கு பின்னர், 2016 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் க.பொன்முடி. தற்போது இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
எதிர்த்துப் போட்டியிட்ட விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன், 51,300 வாக்குகள் (26.14%) மட்டுமே பெற்றார். க.பொன்முடி, 1,10,980 வாக்குகள்(56.60%) பெற்று 59,680 வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக மாநில துணை பொதுச் செயலாளராக உள்ள க.பொன்முடி வெற்றிக்கு, தொகுதியில் பெருவாரியாக உள்ள அவருடைய சமூகத்தை சேர்ந்த மக்களின் ஆதரவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கலிவரதன் மீதுள்ள அதிருப்தியும், தேர்தல் பணியின் போது பாமகவினரின் ஒத்துழைப்பின்மையும் பாஜக வேட்பாளர் கலிவரதனுக்கு எதிராக அமைந்தது. இது மேலும், பொன்முடிக்கு சாதனமாக மாறியுள்ளது.
திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் இம்முறை அமைச்சராகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 'வெற்றிக்கு பின்னர், தன் சமூக மக்களுக்கு மட்டுமே அனைத்தையும் செய்வார்' எனும் குற்றச்சாட்டை இம்முறை மாற்றி காட்டுவாரா க.பொன்முடி..! என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 62,261 வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கல்லூரிப் பேராசிரியர் டு அமைச்சர்... திருக்கோவிலுார் தொகுதியை வென்ற பொன்முடி! #TNelections2021
விழுப்புரம் மாவட்ட வெற்றி நிலவரம்:
திமுக
1).செஞ்சி (கே.எஸ்.மஸ்தான்),
2).விழுப்புரம் (ஆர்.லட்சுமணன்),
3).விக்கிரவாண்டி (நா.புகழேந்தி),
4).திருக்கோவிலூர் (க.பொன்முடி).
அதிமுக
1).வானூர் - தனி (சக்கரபாணி),
2).திண்டிவனம் - தனி (P.அர்ஜுனன்).
பாமக
1).மயிலம் (சி.சிவக்குமார்).
source https://www.vikatan.com/government-and-politics/politics/villupuram-district-election-field-situation-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக