மேற்கு வங்க தேர்தலில் பாஜக தலைவர்கள் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் சூறாவளியாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் உற்சாகமடைந்த பாஜக எப்படியும் மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்று விடவேண்டும் என்பதற்காக தேர்தலை 8 கட்டமாக நடத்தினர். அதோடு மம்தாவிற்கு தேர்தல் கமிஷன் மூலம் பல தடங்கல்களை கொடுத்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் மம்தா பானர்ஜி அவர்களின் பாணியிலேயே சென்று பாஜகவை வீழ்த்தியுள்ளார்.
காலில் பட்ட அடியின் காரணமாக, தேர்தல் முழுக்க வீல் சேரில் அமர்ந்து பிரசாரம் செய்தே வெற்றிக்கனியை பெற்றுள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், ``பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தோற்கடிக்க முடியாதவர்கள் அல்ல என்ற செய்தியை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரையும் தோற்கடிக்க முடியும் என்ற ஒரு தெளிவான செய்தியை மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.
சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரேயும் மம்தா பானர்ஜியின் வெற்றியை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ``பிரதமர் நரேந்திரமோடி தன்னை எதிர்த்து பிரசாரம் செய்த போதும் தனி ஆளாக நின்று வங்கத்து புலி வென்றுள்ளது. இந்த வெற்றி முழுக்க முழுக்க வங்கத்து புலியையே சேரும். அனைத்து சக்திகளையும் சேர்த்து மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முயன்றனர். ஆனாலும் வெற்றி பெற்றுள்ளார். இதற்காக மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ``இனி தலைவர்கள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு கொரோனா ஒழிப்பில் கவனம் செலுத்தவேண்டும்” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜியின் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் இறுதிவரை போராடி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜி கட்சியின் முன்னாள் நிர்வாகி சுவந்து அதிகாரி மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். தேர்தலுக்கு முன்பாக மம்தா பானர்ஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்காவிட்டால் அரசியலை விட்டுவிலகிவிடுவேன் என்று சுவந்து அதிகாரி சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜி தனது நந்திகிராம் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் தேர்தல் முடிவினை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே மேற்கு வங்க தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
source https://www.vikatan.com/news/politics/mamata-sends-a-message-that-narendra-modi-amit-shah-are-not-invincible-shiv-sena
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக