மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. ஆனால், கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவை செய்வதில் இருந்து, தடுப்பூசி இல்லை என்பதுவரை பல்வேறு சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான புதிய ஆர்டர் எதையும் மத்திய அரசு இதுவரைத் தரவில்லை என்று சொல்லியிருக்கின்றன தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள்.
''மத்திய அரசு இதுவரை கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட்டுக்கு 10 கோடி தடுப்பூசி கொள்முதல் ஆர்டரும், கோவாக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 2 கோடி தடுப்பூசி ஆர்டரும் கொடுத்திருந்தது. இந்த 12 கோடி தடுப்பூசி தயாரிப்பும் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த ஆர்டரும் கடந்த மார்ச் மாதம் தரப்பட்டது. அதன்பிறகு இந்திய அரசிடம் இருந்து புதிதாக எந்தக் கொள்முதல் ஒப்பந்தமும் போடப்படவில்லை'' என்கிறார்கள் தடுப்பூசி நிறுவனங்களோடு நெருக்கமானவர்கள்.
''தடுப்பூசி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 12 கோடி ஆர்டரில் தற்போது அந்நிறுவனங்கள் தயாரித்து தரவேண்டிய வேண்டிய மிக சில லட்ச தடுப்பூசிகள் இன்னும் சில நாட்களுக்குள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். அதன்பிறகு தடுப்பூசிகள் தயாரிக்க புதிதாக எந்த ஆர்டரும் இல்லை'' என்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த மே 1-ம் தேதியன்று 18 - 44 வயதுக்குட்பட்ட 86,203 பேருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் தாமதம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.
source https://www.vikatan.com/health/healthy/no-more-fresh-vaccination-order-from-indian-government
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக