குளிர் ஆகாது... ஆனால் கம்பளி போர்த்தக்கூடாது. சுழல் விசிறிக்கு நேராகப் படுக்கக்கூடாது. வாசனை திரவியம், ஊதுபத்தி, கொசுவிரட்டி, சாம்பிராணிப் புகை தவிர்ப்பது நல்லது. வயிறுநிறைய சாப்பிடக்கூடாது. பால், தயிர், முட்டை, மீன், கடலை, வாழை, திராட்சை, எலுமிச்சை, நெல்லி, கத்திரிக்காய், கொய்யா, தக்காளி, டால்டா, குளிர்பானங்கள் தவிர்க்க வேண்டும். ஒட்டடை அடித்தல், வெள்ளை அடித்தல் போன்றவை செய்யக்கூடாது. கடுங்குளிர், கடுமையான வெப்பம் இரண்டுமே ஆகாது. கவலை, பதற்றம், கோபம், பயம், அதிர்ச்சி, மனக்குழப்பம் கூடாது...
இத்தனையும் தவிர்த்த பிறகு ஒரு மனிதன் வாழ்க்கையில் என்ன இருக்கும்?
இப்படிப்பட்ட கொடுமையான ஒரு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ஆஸ்துமா நோயாளிகள்.
ஆஸ்துமா!
ஒரு மனிதன் உயிர்வாழ மிகவும் அடிப்படையான மூச்சுக்காற்றை இயல்பாக சுவாசிப்பதையே கடினமாக்குவது தான் இந்த ஆஸ்துமா.
ஒவ்வாமையும், பரம்பரைத் தன்மையும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். பெரும்பாலும் மேற்கூறிய காரணங்கள் ஒன்றோ அல்லது கூட்டாகவோ பாதிப்பதால் ஒருவருக்கு ஏற்படும் ஒவ்வாமை, அவருடைய மூச்சுக்குழல் (Bronchus) தசைகளைச் சுருங்கச் செய்து, அவரது மூச்சு சிறுகுழல்கள் (Bronchioles) இன்னும் அதிகமாகச் சுருங்கும். மூச்சுக்குழலின் உள்சவ்வு வீங்கி, அந்த வீக்கத்திலிருந்து சுரக்கும் நீர் ஏற்கனவே சுருங்கிப்போன மூச்சுப்பாதையை இன்னும் அதிகமாக அடைக்க, மூச்சை வெளிவிடுவதில் சிரமமேற்பட்டு வீசிங் என்ற விசில் சத்தத்துடன் கூடிய சுவாசம் உண்டாகும். இந்த மூச்சுத்திணறலை அதிகமாக்குவது சிகரெட் புகையும், சில வைரஸ் நோய்களும்!
நமது நாட்டில் ஏறக்குறைய இரண்டு கோடி மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருக்க, இவர்களில் ஒரு லட்சம் பேர் தீவிர ஆஸ்துமா நோயால் நாட்பட பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாய் 'ஸ்பைரோமெட்ரி' (Spirometry) எனும் பரிசோதனை மூலமாக, மூச்சுக்குழலின் சுருக்க அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப, மூச்சுக் குழல்களைத் தளர்த்தி நிவாரணமளிக்கும் இன்ஹேலர் மற்றும் நெபுலைசர் சிகிச்சைகள் இதுவரை அளிக்கப்பட்டுவந்தன. இதனுடன் பரிந்துரைக்கப்படும் மருந்துகள், மாத்திரைகள் என மூச்சுத்திணறல் ஏற்படும்போது தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கப்பெற்ற இந்த நாட்பட்ட நுரையீரல் நோய்க்கு, இப்போது விடிவெள்ளியாக வந்துள்ளது, ஒரு சூடான மருத்துவ சிகிச்சை.
கிட்டத்தட்ட குளிர் அதிகமாக இருக்கும்போது நாம் வெளியே நெருப்பைக் கூட்டி குளிர்காய்வது போல இது, உள்ளே குளிர்காயும் முறை என்று கூறலாம்.
ஆம்... Bronchoscopy என்ற கருவியின் மூலமாக, நுரையீரல் உள்தசைகளை 65°செல்சியஸ் வரை மெதுவாக சூடுபடுத்தி, சுவாசத்தை எளிதாக்கும் இந்த சூடான அதிர்வலை சிகிச்சையை, 'Bronchial Thermoplasty' என அழைக்கும் மருத்துவர்கள், இந்த தொழில்நுட்பம் உண்மையிலேயே தீவிர ஆஸ்துமா நோய்க்கு ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர்.
பதினெட்டு வயதைத் தாண்டிய ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூன்று வார இடைவெளிகளில் மூன்று முறை மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சைக்கு நான்கு மணிநேரம் மட்டுமே போதுமென்பதால் நோயாளி மருத்துவமனையில் அட்மிட் ஆகத் தேவையில்லை.
இந்த மூன்றுமுறையுடன் கூடிய ஒரு முழுமையான சிகிச்சையானது நோயாளிக்கு ஐந்திலிருந்து பத்து வருடங்கள் வரை நோயிலிருந்து விடுதலையளிக்கிறது என்பதால் இவர்கள் வாழ்க்கை முறையே மற்றவர்கள் போல எளிதாக மாறிவிடும் என்று கூறும் நுரையீரல் மருத்துவர்கள், இந்த சிகிச்சையை மேற்கொள்பவர்கள் கட்டாயமாக புகைப்பிடிக்கக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.
காஷ்மீரி மக்கள், கடும்குளிரை எதிர்கொள்ள தங்களது வயிற்றுக்கு வெளியே நெருப்புடன் கட்டிக்கொள்ளும் சூடான காங்கிரி பாத்திரத்தைப் போல, உடலுக்குள்ளே சூடுபடுத்திச் செய்யும் இந்த சூடான தெர்மோபிளாஸ்டி சிகிச்சை, ஆஸ்துமா நோயாளிகளுக்கு உண்மையிலே ஒரு அருமருந்துதான்!
source https://www.vikatan.com/health/healthy/how-bronchial-thermoplasty-helps-severe-asthma-patients
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக