Ad

செவ்வாய், 4 மே, 2021

`கொரோனாவை விடப் பெரிய ஆபத்தில் உலகம் சிக்கியுள்ளது... அது பசி!' - எச்சரிக்கும் நிபுணர்கள்

கொரோனா பெருத்தொற்றுப் பேரிடர், உலகளவில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் 2030-ம் ஆண்டுக்குள் பட்டினியை ஒழிப்பதற்கான முயற்சியை இது பின்னோக்கி இழுத்துச் செல்வதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி குறித்த 54-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், ``மக்கள் தொகை, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, நீடித்த நிலையான வளர்ச்சி போன்றவற்றின் மீது தீவிர கவனம் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கோவிட்-19 ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இழப்புகளைச் சரி செய்து, இந்தப் புதிய சவால்களைச் சமாளிக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், கொரோனா தொற்றுப் பேரிடர் உணவுப் பாதுகாப்பில் நம் வளர்ச்சியை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றது" என்று கூறினார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

ஐ.நா துணை பொதுச் செயலாளர் அமீனா முகமத், கூட்டத்தில் பேசியபோதும் உலகளவில் மக்களின் வாழ்வாதாரம், சமத்துவம் அனைத்தையுமே இந்தத் தொற்றுப் பேரிடர் குலைத்து விட்டதாகவும் இதனால் அநீதிகள் அதிகரித்துள்ளதோடு பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், ``வருந்தத்தக்க வகையில், 2030-ம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பாதுகாப்பின்மை, பட்டினி போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் நாம் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. கொரோனா பேரிடர் வருவதற்கு முன்னமே, ஊட்டச்சத்துக் குறைபாடு அஞ்சத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. அந்தச் சிக்கலை, தொற்றுப் பேரிடர் மேலும் விரைவுபடுத்திவிட்டது" என்று கூறினார்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவும் தீவிர உணவுப் பாதுகாப்பின்மையைச் சந்தித்து வருகிறார்கள். உணவுப் பொருள்களின் விலை உயர்வு, தரமின்மை என்று உலக மக்கள் பல சிக்கல்களைச் சந்திக்கின்றனர். பெருந்தொற்றுக்கு முன்னமே, நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழிருந்த மக்களிடையே குறைந்துகொண்டிருந்த வருமானம், சமூகத்தில் நிலவிய பொருளாதாரச் சங்கிலித் தொடரில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. அந்த விரிசல் பெரிதாகி பெருந்தொற்றுக் காலத்தில் அறுபட்டுவிட்டது. சமூக-பொருளாதார சூழ்நிலைகளில் நிகழ்ந்த தாக்கங்கள் உலக மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. அனைத்து நாடுகளிலுமே, இத்தகைய பாதிப்புகள் 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் தொடரும் என்றும் உலக வங்கி எச்சரிக்கின்றது.

கொரோனா லாக்டௌன்

ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலகட்டத்திலேயே உலகளவில் உணவுப் பொருள்களின் விலை 20% அதிகரித்துவிட்டது. உணவு உற்பத்தி, தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தவரை, பெரியளவில் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் கணிக்கப்படுகிறது. அதோடு, அனைவருக்கும் உணவு கிடைக்க வழி செய்வதோடு, அந்த உணவு தரமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். அதுவும்கூட, தற்போது உறுதியற்ற நிலையே நீடிப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் (World Food Programme, WFP) கணக்குப்படி, ஏப்ரல் 2021 வரை 35 நாடுகளில் மொத்தம் 296 மில்லியன் மக்கள் போதுமான, தரமான உணவின்றித் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான தரவுகளின்படி இருந்த எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு 111 மில்லியன் மக்கள் இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். கொரோனா லாக்டௌன் தொடங்கியதிலிருந்து, பல சிறு குறு தொழில்கள் முடங்கியதிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானார்கள்.

கட்டுமானப் பணிகள் முதல் தினசரி சந்தைகள் வரை பல தொழில்கள் முடங்கின. தினக்கூலிக்குச் செல்பவர்கள், திருப்பூர் போன்ற நகரங்களில் பனியன் கம்பெனிகளில் வார சம்பளத்தை நம்பிப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் என்று பல வகையான மக்களின் குடும்பங்கள் மிகப்பெரிய பொருளாதாரச் சுழலுக்குள் சிக்கினார்கள். இவர்கள் அனைவருமே, ஒரு நிலையான வருமானமின்றி கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு, கடந்த ஓராண்டாக அன்றாட வாழ்வுக்காகப் போராடிக்கொண்டிருந்தனர். கடந்த சில மாதங்களில் இந்தப் பிரச்னைகள் ஓரளவுக்குச் சரியாகி, சூழல் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது.

வறுமை

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் பாதிப்புகள் அதிகளவில் இருந்து வருகிறது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. கொரோனா பாதிப்புகளை விடவும், தன் குடும்பத்துடைய உணவுத் தெவையைப் பூர்த்தி செய்வதற்கான போராட்டம் தான் இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. கூடுதலாக, தொடரும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் சிக்கலை மேலும் அதிகப்படுத்தி யுள்ளது. வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் மக்கள் ஒவ்வொரு மாதமும் அவர்கள் வாங்கும் உணவுப் பொருள்களின் எண்ணிக்கை மற்றும் அளவையே குறைத்துக்கொண்டுள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தரவுகளை அடிப்படையாக வைத்து, பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய பகுப்பாய்வில், இந்தியாவில் 140 ரூபாய்க்கும் குறைவான ஒரு நாள் வருமானத்தில் வாழக்கூடிய மக்களின் எண்ணிக்கை கடந்த ஒரே ஆண்டில் 6 கோடி பேரிலிருந்து 13.4 கோடி பேராக அதிகரித்துள்ளது. இந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய, மோசமான பின்னடைவுக்கு முதன்மைக் காரணமாக கொரோனா பேரிடர் கூறப்பட்டாலும், வறுமைக் கோட்டிற்குக் கீழிருக்கும் மக்களின் நிலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை பேரிடருக்கும் முன்பே தீவிரமாக முன்னெடுக்காததும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

இந்தப் பிரச்னை இந்தியாவில் மட்டுமில்லை. உலகளவில் பல வளர்ந்து வரும் நாடுகளையும் பாதித்திருக்கிறது. அவர்களின் பொருளாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் இந்தப் பேரிடர், வறுமைக் கோட்டிற்குள் மேலதிக மக்களைத் தள்ளிக்கொண்டிருக்கிறது.

உணவு

இதன் விளைவாக உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தச் சிக்கலைச் சமாளிப்பதற்காக, லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்களுடைய ஊட்டச்சத்து மிகுந்த தரமான உணவுகளைத் தியாகம் செய்துகொண்டிருக்கிறார்கள். உணவு கிடைக்கிறதா என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமாக உள்ளது. அந்த உணவு ஆரோக்கியமானதா, தரமானதா, ஊட்டச்சத்து மிக்கதா என்பதைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் அவர்கள் இல்லை. 2021-ம் ஆண்டுக்கான உலகளாவிய உணவுக் கொள்கை அறிக்கையை, சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் வெளியானது. அதிகரித்து வரும் வறுமை, வாழ்வாதாரச் சிக்கல் ஆகியவை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் தரமின்மைக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

உதாரணத்துக்கு, பங்களாதேஷில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்கள் அவர்களிடம் இருக்கும் உணவுக் கையிருப்பு சீக்கிரம் முடிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முழுக்கச் சாப்பிடமாலே இருக்கின்றனர். நேபாளில் 30% ஊர்ப்புறக் குடும்பங்கள் உணவுக்கான செலவில் பெரும் பகுதியைக் குறைத்துக்கொண்டார்கள்.

இதுபோன்ற சிக்கல்கள் தான், ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள விடாமல் ஏழை மக்களைச் சிக்கலில் தள்ளுகின்றது. ஏழைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் பல்வேறு ஆரோக்கியம் தொடர்பான கோளாறுகளுக்கு இது முதன்மைக் காரணமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. அதுமட்டுமின்றி, உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் நிகழும் உயிரிழப்புகளில் 22% மரணங்களுக்கு தரமற்ற உணவே காரணமாக இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.

உலகளவில் கொரோனா பேரிடருக்கு முன்பு, மூன்று பில்லியன் மக்கள் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வாங்கமுடியாத அளவுக்கு வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தனர்.

ஊரடங்கு

இப்போது நிலவும் இந்தப் பேரிடர் சூழலால், 2020-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாக 267.7 மில்லியன் மக்கள் அதே நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

இன்றைய சூழ்நிலையில் உணவு கிடைத்தாலே போதுமென்ற மனநிலையில்தான் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கும் மக்கள் இருக்கின்றனர். அந்த உணவு ஆரோக்கியமானதா, தரமானதா என்று கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை. அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டியது அரசாங்கம். இனியாவது விரைந்து அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிக்க தரமான உணவு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இல்லையேல், தரமற்ற உணவு என்ற பொறிக்குள் மேன்மேலும் மக்கள் சிக்கிக் கொள்வார்கள். அது மீண்டுமொரு பேரிடர் உருவாக்கலாம். ஆனால், இந்தப் பேரிடர் கொரோனாவைப் போல இருக்காது. அது, மெல்ல மெல்ல மனித சமூகத்தைக் கொன்று கொண்டிருக்கும் பசி, பட்டினியாக இருக்கும்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/food-insecurity-affects-most-of-the-world-during-covid-19-pandemic-says-who

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக