கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பியுள்ள நிலையில், மரணங்களும் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தன் தொகுதியில் செயல்படுத்தியுள்ள திட்டம் அனை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் ஆரம்ப நிலை நோயாளிகளுக்கும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ளும் வகையில் சித்தா, ஹோமியோ, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து பெட்டகங்கள் வழங்கும் ஏற்பாட்டை சு.வெங்கடேசன் செய்தார். இதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20,00,000 ஒதுக்கியுள்ளார்.
பெரும்பாலான எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்டடம், சாலை அமைப்பதற்கு மட்டும் ஒதுக்கி வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்குவதில்லை.
கடநத அலையின்போது தொகுதி மேம்பாட்டு நிதியில் முககவசங்கள், மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்த சு.வெங்கடேசன், தற்போது மக்களை கொரோனாவிலிருந்து காப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகங்களுக்காக நிதியை ஒதுக்கியுள்ளார்.
கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடந்த நிகழ்வில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நம்மிடம் பேசிய சு.வெங்கடேசன், "வளர்ச்சி திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும்தான். அதே நேரத்தில் மக்கள் நலன் முக்கியம். அவர்களை பாதுகாக்கும் வகையிலும் நிதிகளை ஒதுக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் முதலில் 20,000 மருந்து பெட்டகங்கள் வழங்க நிதி ஒதுக்கினேன்.
மதுரை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 5 நாட்களாக வீட்டில் தனிமையில் இருப்பவர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நகர்நல பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
இதில் 5 நாட்களாக வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு மண்டல மருத்துவ அலுவலர்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கு மருந்து பெட்டகம் கொடுக்கப்பட உள்ளது.
அதுபோல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு வகைப்படுத்துதல் மையத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவர் ஆலோசனையின்படி மருந்து பெட்டகம் வழங்கப்படும். மருந்து பெட்டகங்கள் மாநகராட்சிப் பகுதிக்கு 15 ஆயிரமும், ஊரக பகுதிகளுக்கு 5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. அடுத்த கட்டமாக இந்த விநியோகத்தை அதிகமாக்கும் திட்டமுள்ளது" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/su-vengatesan-mp-provided-medical-kit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக