எம்.ஜி.ஆர் தனது ஆளுமை சார்ந்த பிம்பத்தை தமிழ் சமூகத்திடம் எத்தனை ஆழமாக விதைத்து வைத்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் கூட இருக்கிறது.
"நீ யாருக்கு ஓட்டு போடுவே?" என்று ஒரு கிராமத்துப் பெண்மணியிடம் ஒரு காட்சியில் கேட்கப்படும் போது அவர் வெள்ளந்தியாக "எம்.ஜி.ஆருக்கு" என்பார். "எம்.ஜி.ஆர் இறந்து விட்டாரே!" என்று கேள்வி கேட்டவர் சொன்னவுடன் அந்த முதிய பெண்மணி அதிர்ச்சியில் மூர்ச்சையாகி விடுவார். இது நகைச்சுவையான தொனியில் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும் இப்படியான ஒருவர் ஏதாவது ஒரு கிராமத்தில் உண்மையிலேயே கூட இருக்கலாம்.
ஆம், '’எம்.ஜி.ஆர் இன்னமும் உயிரோடு இருக்கிறார். அவருக்கு மரணமில்லை’' என்று நம்பிக் கொண்டிருக்கும் மனங்கள் தமிழகத்தில் ஒருவேளை இருக்கக்கூடிய அளவிற்கு தமிழர்களின் ஆழ்மனங்களில் பின்னிப் பிணைந்த ஒரு பிம்பமாக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.
கடந்த அத்தியாயங்களில் பார்த்தபடி அவர் தனது வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக தானே செதுக்கிக் கொண்டார். திரைத்துறையில் தனது பிம்பத்தை கவனமாக அவர் வளர்த்துக் கொண்டது போலவே, அரசியலிலும் அதை வெற்றிகரமாக தொடர்ந்தார்.
அரசியலில் இறங்கி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதும் 'எளிய மக்களின் காவலன்' என்கிற அடையாளத்தை மிகக் கவனமாகப் பராமரித்தார். எந்தவொரு கூட்டத்திலும் பாதுகாப்பை மீறி எளிய மக்களிடம் சென்று அவர்களை அணைத்துக் கொள்வது, ‘'தாய்மார்களே என் தெய்வம்'’ என்று மேடைகளில் பேசுவது என்று தன்னை ஓர் ஏழைப்பங்களானாக நிறுவிக் கொண்டார். அரசின் நிதிச்சுமையும் கடன்களும் ஒரு பக்கம் இருந்தாலும் அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயங்களை அவர் கவனமாக கையாண்டார். உதாரணமாக ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசியின் விலை அதிகம் ஏறாமல் பார்த்துக் கொண்டார். இதனாலேயே எளிய மக்களின் அன்பையும் பிரியத்தையும் நிரந்தரமாக சம்பாதித்துக் கொண்டார்.
ஆனால், இது போன்றவற்றுக்கு இன்னொரு புறமும் இருக்கிறது. அரசியல்வாதிகள் தங்களின் செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக தரும் மறைமுக விலைகளும் காரணங்களும் உண்டு. எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் அவரது நிர்வாகத் திறன் பற்றி ஒரு பக்கம் மிகையாக புகழப்பட்டாலும் இன்னொருபக்கம் அவற்றை விமர்சிக்கும் பதிவுகளும் நூல்களும் உண்டு. இந்த வகையில் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய இரு நூல்கள் இருக்கின்றன.
ஒன்று, 'The Image Trap: M.G. Ramachandran in Film and Politics'. இந்த நூல், சமூக ஆய்வாளரும் வரலாற்றுத் துறை பேராசிரியருமான எம். எஸ். எஸ். பாண்டியன் எழுதியது. எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியல் எவ்வாறு தமிழக மக்களிடம் வலிந்து திணிக்கப்பட்டது என்கிற விஷயத்தை இந்த நூல் பல்வேறு ஆதாரங்களுடனும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது. எம்.ஜி.ஆரின் திரை மற்றும் அரசியல் பயணம் ஆகிய இரண்டிலிருந்தும் பல புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு விரிவாக ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது.
இன்னொன்று, 'MGR: The Man and The Myth'. தமிழக காவல்துறை அதிகாரியாக இருந்த K.மோகன்தாஸ் எழுதிய நூல். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் மோகன்தாஸ். எம்.ஜி.ஆரின் அரசியல் பயண வாழ்க்கையில் அவரது நிழலாக அறியப்பட்டவர். எம்.ஜி.ஆர் எடுத்த பல அரசியல் முடிவுகளுக்கு இவரின் செல்வாக்கு இருந்ததாக நம்பப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் இருந்த பல உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் இந்த நூலில் எழுதியிருக்கிறார் மோகன்தாஸ்.
ஒருபக்கம் எம்.ஜி.ஆரின் ஆளுமை, நிர்வாகத்திறமை, மக்களின் செல்வாக்கு போன்றவற்றை மோகன்தாஸ் வியந்து பாராட்டினாலும் இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் இருந்த ஊழல்களையும் நிர்வாகக் கோளாறுகளையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம். நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் சில பள்ளிகளில் 'இலவச மதிய உணவுத்திட்டம்' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காமராஜரின் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் 'சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாக செயல்படத் தொடங்கியது
இந்தப் புதிய திட்டம் பற்றிய ஆலோசனைகளையும் முன்னேற்பாடுகளையும் எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த போது, டிஜிபி மோகன்தாஸிடமும் இது பற்றி விவாதித்திருக்கிறார். ஆனால், இதில் மோகன்தாஸிற்கு சில மாற்று அபிப்பிராயங்கள் இருந்திருக்கின்றன. தமிழக அரசு ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் போது, பல கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியொரு திட்டத்தை கொண்டு வருவதற்குப் பதிலாக '’அந்தந்தப் பகுதிகளில் சிறு தொழிற்கூடங்களை அமைத்து வயது வந்தவர்களுக்கு வேலை தரலாம். தங்கள் பிள்ளைகளின் சாப்பாட்டுக்காக அவர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கத் தேவையில்லை. இதனால் மாநிலத்தின் தொழில்துறை அடிமட்டத்திலிருந்து வளரும்'’ என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறார் மோகன்தாஸ்.
'இத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்து கொண்டுவரப்படும் திட்டத்தால் அதிகம் பலன் அடையப்போகிறவர்கள் இடைத்தரகர்களே. இதில் ஊழலும் மோசடிகளும் பெருகும். அரசிற்கும் கெட்ட பெயர் வரும்' என்பது மோகன்தாஸின் தொலை நோக்குப் பார்வை. அதாவது 'பசிக்கிறவனுக்கு மீனைத் தருவதைக் காட்டிலும் மீன் பிடிப்பதை கற்றுத் தந்தால் அவனாகவே பிழைத்துக் கொள்வான்' என்கிற பழமொழிதான் மோகன்தாஸ் முன்வைத்த கருத்துக்களின் அடிநாதம்.
ஆனால், தன் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த எம்.ஜி.ஆர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 'ஒருவருக்கு உணவு அளிப்பது' என்பதை தன் வாழ்க்கையின் ஒரு பகுதி கலாசாரமாகவே கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தன் வீட்டிற்கு வருகை தருபவர்களில் சாதாரணர், பணக்காரர் என்கிற எந்தவொரு பாரபட்சத்தையும் பார்க்காமல் '’அவர்கள் உணவு சாப்பிட்டார்களா?’' என்று விசாரிப்பதை வழக்கமான கேள்வியாக வைத்திருந்தார். இளமைக் காலத்தில் பசியால் வாடிய அனுபவம் அவருக்கு இந்தக் கலாசாரத்தை கற்பித்திருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரால் விரிவாக்கப்பட்ட இந்த 'சத்துணவு திட்டத்தால்' பல லட்சம் பள்ளி மாணவர்கள் ஒருபக்கம் பயன்பெற்றாலும், அந்தத் திட்டத்திற்குள் இடைத்தரகர்களால் கோடிக்கணக்கான ரூபாய்களில் நிகழும் ஊழல்களும் அவை பற்றிய புகார்களும் இன்றளவும் தொடரும் விஷயமாகி விட்டது என்பதையும் பார்க்க வேண்டும். இதன் மூலம் மோகன்தாஸின் தீர்க்கதரிசனமும் ஒருபக்கம் உண்மையாகி விட்டது.
ஓர் அரசியல் முடிவில் உள்ள எதிர்மறையான அம்சங்கள், பின்னடைவுகள் போன்றவற்றை எம்.ஜி.ஆர் உள்ளுற ஒருவேளை உணர்ந்திருந்தாலும் தனக்கு எதிராக வலுவான அரசியல் போட்டியாளராக அப்போது இருந்த கருணாநிதியைச் சமாளிப்பதற்காக அவர் பல நாடகப் பாணிகளை கையாள வேண்டியிருந்தது. எரியும் பிரச்னையாக இருந்த இலங்கைத் தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் விடுதலைப்புலிகளுக்கு நிதி உதவி செய்தது, மத்திய அரசின் அரசியல் மேகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாநில அரசியல் உத்திகளை மாற்றிக் கொண்டது என்று பல விஷயங்களைச் சொல்லலாம். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையின் போது தனது அரசியல் கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பெயரில் 'அனைத்து இந்திய' என்பதை இணைத்துக் கொண்டதையும் பார்க்க வேண்டும்.
நாம் பிரமித்து வணங்கும் எந்தவொரு ஆளுமைக்கும் பின்னால் எதிர்மறையான அம்சங்களும், விமர்சனங்களும் கூடவே இருக்கும். நாம் அவற்றையும் பரிசிலித்து அந்த ஆளுமையை சமநிலையான பார்வையுடன் அணுக வேண்டும். இதில் எம்.ஜி.ஆர் மட்டுமல்ல, எந்தவொரு ஆளுமையும் விதிவிலக்கல்ல. திரையில் அரிதாரங்களுடன் சித்தரிக்கப்படும் பிம்பங்கள் வேறு; நிஜத்தில் அவர்களின் பிம்பங்கள் வேறு என்கிற வேறுபாடு தொடர்பான கவனம் ஒரு சமூகத்திடம் எப்போதும் இருக்க வேண்டும்.
தன்னுடைய திரை மற்றும் அரசியல் பிம்பத்தை இத்தனை கவனமாக வளர்த்துக் கொண்டதில் எம்.ஜி.ஆர் பெருவாரியான வெற்றியைப் பெற்ற போது திரையில் அவரது சக போட்டியாளராக இருந்த சிவாஜி எங்கே சறுக்கினார்?
அடுத்த வாரம் பார்ப்போம்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/how-mgrs-image-sustained-in-politics-too
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக