கடலை மிட்டாய்க்குப் பெயர் போன கோவில்பட்டி, இந்தத் தேர்தலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிட்டதாலும் கவனம் ஈர்ப்புக்கு உள்ளானது. இந்த தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு முதல் இதுவரை 15 தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வென்றுள்ளன. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜூ 64,514 வாக்குகளுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றாலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்ரமணியனை வெறும் 428 வாக்குகள் வித்தியாசத்திலேயே வீழ்த்தி இருந்தார். இந்த முறை திமுக வேட்பாளர் இந்தத் தொகுதியில் போட்டியிடாத நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சீனிவாசன், அதிமுக தரப்பில் மூன்றாவது முறையாக களமிறங்கிய கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரிடையே மும்முனை போட்டி காணப்பட்டது.
இத்தொகுதியில் முக்குலத்தோர் சமுதாயத்தினர் 23 சதவிகிதம் அளவுக்கு இருப்பதும், 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கயத்தாறு யூனியனில் அமமுக 10 வார்டுகளில் வெற்றிபெற்று யூனியன் சேர்மன் பதவியைக் கைப்பற்றியதும் தினகரனுக்கு தெம்பூட்டுவதாக இருந்தன. கூடவே அதிமுகவின் அதிருப்தி ஓட்டுகளும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தினகரனுக்கு இருந்தது. அதே சமயம் தினகரன் மீதான முக்குலத்தோர் சமுதாய முத்திரை, பிற சமுதாயத்தினரிடையே அதிருப்தியாகவே பார்க்கப்பட்டது. பிற சமுதாயத்தினரின் வாக்குகள் கை கொடுத்தால் மட்டுமே தினகரனுக்கு வெற்றிக்கான வாய்ப்பிருக்கும் என சொல்லப்பட்டது. சீனிவாசனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. கடந்த முறை மக்கள் நல கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக 17.46% வாக்குகளைப் பெற்றது. இந்தமுறை திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருப்பதும், தினகரனுக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அன்று காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்ட சில நேரம்வரை தினகரன்தான் முன்னிலை வகித்தார். அதன்பின் கடம்பூர் ராஜு முன்னிலை வகித்தார். சில சுற்றுகள் வரையிலும் இருமுனைப் போட்டியாகவே இருந்தது. குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் இந்த போட்டி நிலவியபடியே இருந்தது. பின் கடம்பூர் ராஜு தொடர்ந்து முன்னிலை வகிக்கத் துவங்கினார். இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் இறுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கடம்பூர் ராஜுவை விட 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆர்.கே நகர் போலவே தினகரன் வெல்வார் என்றே அவரது கட்சிக்காரர்கள் பலரும் நினைத்தனர். ஆனால் தினகரனால் வெல்ல முடியவில்லை . அதிமுக அம்மைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்த நிலையில் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றுள்ளார். அமமுக சார்பில் தினகரன் மட்டுமாவது சட்டசபைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கும் தோல்வி முகமே கிடைத்தது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ttv-dinakaran-a-short-analysis-of-tamilnadu-elections-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக