Ad

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சேப்பாக்கம் நினைவுகள் : சச்சின் டெண்டுல்கரின் நிறைவேறாத கனவும், அந்தக் கண்ணீரும்! #INDvENG

ரன் மெஷின், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள்.... சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் பிடித்த மைதானம் சென்னை சேப்பாக்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடித்திருக்கும் 51 சதங்களில் 5 சதங்கள் அடிக்கப்பட்டது சென்னையில்தான். இந்த 5 சதங்களில் 4 சதங்களில் இந்தியா வெற்றிபெற்றிருக்கிறது. மீதி இருக்கும் அந்த ஒரே ஒரு சதமும் வெற்றியில் முடிந்திருக்க வேண்டியது. ஆனால்...

1999, சென்னை சேப்பாக்கம் மைதானம், ஜனவரி மாதம்... இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அது. முகமது அசாருதின் தலைமையில் இந்தியாவும், வாசிம் அக்ரம் தலைமையில் பாகிஸ்தானும் மோதின. இப்போதைய டி20 போட்டிகளைவிடவும் மிகவும் பரபரப்பாக, வெற்றி யார் பக்கம் என்பதை யூகிக்கமுடியாமல் செம த்ரில் ஆட்டம் நடந்துகொண்டிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கு 271 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது பாகிஸ்தான். கடைசி நாள் ஆட்டம்... சென்னை சேப்பாக்கம் பிட்ச்சில் சக்லைன் முஸ்தாக்கின் பந்துகள் சுற்றிச்சுழல்கின்றன. அவரது சுழலில் சிக்கி இந்திய பேட்ஸ்மேன்கள் பெவிலியன் நோக்கி நடந்துகொண்டேயிருந்தார்கள். 82 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்துவிட்டது இந்தியா. அப்போது விக்கெட் கீப்பர் நயான் மோங்கியாவோடு களத்தில் நின்றவர் சச்சின் டெண்டுல்கர்.

மோங்கியாவோடு இணைந்து இந்தியாவை வெற்றிகரமான சேஸ் நோக்கி கொண்டு செல்லப் போராடினார் சச்சின். இக்கூட்டணி 138 ரன்கள் சேர்க்க, 218 ரன்கள் இருக்கும்போது மோங்கியா அவுட். ஆனால், சச்சின் களத்தில் நின்று 136 ரன்கள் குவிக்கிறார். இந்தியா வெற்றிபெற வெறும் 17 ரன்களே தேவையிருக்கும்போது சச்சின் அவுட். கையில் மூன்று விக்கெட்கள் இருக்கிறது. ஆனால், அடுத்த 4 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றுப்போனது இந்தியா.

Sachin Tendulkar

சச்சின் டெண்டுல்கருக்குத்தான் மேன் ஆஃப் தி மேட்ச் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், விருதை வாங்க சச்சின் மேடைக்கு வரவேயில்லை. ''என்னை சுற்றியிருந்த உலகம் நொறுங்கிப்போனதைப் போல உணர்ந்தேன். என்னால் என் அழுகையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வாங்க மேடைக்கு செல்லும்படி சொன்னார்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நான் மேடைக்குப்போகும், பேசும் நிலையில் நன் இல்லை என மறுத்துவிட்டேன். பெவிலியனிலேயே உட்கார்ந்துவிட்டேன்'' என்று அன்றைய நாள் குறித்துப்பின்னர் பேசியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

90-களில் இந்திய கிரிக்கெட்டின் நிலை இதுதான். சச்சின் அவுட்டானால், இந்தியா அவுட். சச்சின் பெவிலியனுக்கு நடந்தால் டிவியை அணைத்துவிட்டு எல்லோரும் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆனால், அப்படியிருந்த அந்த இந்திய அணிதான் இன்று எந்த தனி வீரரையும் நம்பியில்லாமல் 11 வீரர்களுமே சிறப்பாகப் பங்களிக்கும் அணியாக மாறியிருக்கிறது. அணியில் இருக்கும் அந்த 11 வீரர்களும் காயமடைந்தால்கூட அடுத்தக்கட்ட வீரர்கள் உள்ளே வந்து ஆஸ்திரேலியா போன்ற அணியையே மண்ணைக் கவ்வ வைக்கிறார்கள். ஒரு தொடரின் முதல் டெஸ்ட்டிலேயே 36 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி வரலாற்றிலேயே மிக மோசமானத் தோல்வியைப் பதிவு செய்து அவமானத்தை சந்தித்த அணி 2-1 என தொடரை வெல்கிறது. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக!

90-களில் ஒற்றை மனிதனை நம்பியிருந்த அதே அணி இன்று ஒட்டுமொத்த 11 பேரின் பங்களிப்போடு வெல்கிறது. இந்திய கிரிக்கெட் இன்று முழுமையாக மாறிவிட்டது என்பதற்கான சான்று ஆஸ்திரேலிய தொடர்!

மிக மிக பலம் வாய்ந்த, உலகின் சிறந்த அணியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சென்னையில் தொடங்குகிறது கோலி தலைமையிலான இந்தியா. ஆனால், இங்கிலாந்து ஒன்றும் சாதாரண அணியல்ல. சேப்பாக்கம் மைதானமும் முன்புபோல முழுக்க முழுக்க ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் பிட்ச் அல்ல. இந்தியாவில், இந்தியாவைக் கடைசியாக வீழ்த்திய அணி இங்கிலாந்துதான். 2012-13 சீசனில் 2-1 என இங்கிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. அதனால், இந்தமுறை ஆட்டம் வேறுமாதிரிதான் இருக்கும்.

கோலி தலைமையிலான இந்திய அணி

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் என மிகச்சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து அணி. இந்திய அணியும் விராட் கோலி, இஷாந்த் ஷர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்திக் பாண்டியா என முக்கிய வீரர்களோடு களமிறங்கக் காத்திருக்கிறது.

சேப்பாக்கம் ஒரு புதிய போருக்குத் தயாராகியிருக்கிறது... சச்சின், கோலி அண்ட் கோ-வின் சேப்பாக்கம் ஆட்டத்தைக் காண ஆவலோடு காத்திருப்பார்... நம்மோடு!



source https://sports.vikatan.com/cricket/sachin-tendulkars-most-memorable-innings-at-chennai-chepauk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக