இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான `பொன்னியின் செல்வன்' நிஜமாகிக்கொண்டிருக்கிறது. 2019-ன் இறுதியில் ஆரம்பித்த இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் கொரோனாவால் தடைபட்டது. ஷூட்டிங் அனுமதி கிடைத்ததும் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கடந்த மாதம் தொடங்கிய படப்பிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
'பொன்னியின் செல்வன்' கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு கல்கி வார இதழில் 1950 முதல் 1955 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தொடராக வெளியானது. சோழர் ஆட்சிக்காலத்தில் அதாவது கி.பி 1000-ம் ஆண்டுவாக்கில் நடந்ததாக எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவுதான் இந்த நாவல். வந்தியத்தேவன்தான் கதையின் நாயகன். இந்த வரலாற்றுப்புனைவைத்தான் மணிரத்னம் சினிமாவாக உருவாக்கிவருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தை எம்ஜிஆர் திரைப்படமாக உருவாக்க முயற்சிகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
500 கோடி ரூபாய் முதலீட்டில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. கதையின் நாயகன் வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார். ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், ராஜேந்திர சோழனாக ஜெயம் ரவியும், பழுவேட்டரையராக சரத்குமாரும் நடிக்கிறார்கள். சரத்குமாருக்கு ஜோடியாக நந்தினியாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். குந்தவியாக த்ரிஷா நடிக்கிறார். பார்த்திபன், விக்ரம் பிரபு உள்பட பல நடிகர்கள் தற்போது `பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்கள்.
ஜனவரி 6-ம் தேதி ராமோஜிராவில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மார்ச் 5-ம் தேதியோடு படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைய இருக்கிறது. மொத்தமாக 150 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தற்போது காலை 8 மணிக்குத்தொடங்கும் படப்பிடிப்பு இரவு 11 மணிவரை இடைவெளியில்லாமல் நடைபெற்றுவருகிறது. மணிரத்னத்தின் இயக்கத்தை ஒவ்வொரு நடிகர்களும் வியந்து பாராட்டிவருகிறார்கள். கார்த்தி தன் நண்பர்களிடம் எல்லாம் மணிரத்னத்தின் இயக்கத்தை வியந்து பாராட்டிவருகிறாராம்.
கதைப்படி சில முக்கியமான காட்சிகள் காவிரி நதிக்கரையில் நடப்பதுபோன்று இருக்கும். காவிரியில் தண்ணீர் இல்லை என்பதால் இந்தக் காட்சிகள் ஆந்திராவில் கோதாவரியில் எடுக்கப்பட இருக்கிறது. கோதாவரி கரையில் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் ராமோஜிராவுக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பாடல்களுக்கான ஷூட்டிங் நடந்துமுடிந்துவிட்டது. பிருந்தா கோரியோகிராபராகப் பணியாற்றியிருக்கிறார்.
'பொன்னியின் செல்வன்' படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/maniratnams-ponniyin-selvan-movie-is-nearing-its-completion
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக