திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சியில் செயலாளராக அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(48) என்பவர் பணியாற்றி வந்தார்.
பாஸ்கர், மேல்நல்லாத்தூர் ஊராட்சித் தலைவர் அரிபாபு என்பவருக்குக் கீழ் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை ஊராட்சி செயலாளர் பாஸ்கர் வழக்கம் போல் அலுவலகத்தைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்று விட்டு, நேற்று (சனிக்கிழமை) காலை வழக்கம் போல் அலுவலகத்தைத் திறந்து அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்
இந்நிலையில், காலை பொதுமக்கள் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது ஊராட்சி செயலர் பாஸ்கர், அலுவலக மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக ஊராட்சித் தலைவர் அரிபாபு மற்றும் மணவாள நகர் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பாஸ்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் பாஸ்கர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றினையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் தற்கொலை செய்துகொண்ட பாஸ்கர்,``1998-ஆம் ஆண்டு முதல் நான் இந்த செயலாளர் பதவியிலிருந்து வருகிறேன். என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில் நான் ஒருமுறை கூட தவறு செய்ததில்லை. ஆனால், இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே எனக்கு வேலைப் பளு மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, 01.01.2021 முதல் 06.02.2021 வரை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவுக்கு என்னைத் தள்ளி விட்டார்கள் என்பதனை இந்த கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக ஊராட்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ஏராளமான ஊழியர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஊராட்சி செயலாளர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/panchayat-secretary-in-tiruvallur-commits-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக