பெங்களூருவில் ஓய்வெடுத்துவரும் சசிகலா நாளை மறுநாள் (8-ம் தேதி) வேலூர் மாவட்டம் வழியாகச் சென்னை திரும்புகிறார். 7-ம் தேதியன்றே சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் சசிகலாவின் பயணத் திட்டம் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. 8, 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வேலூர் வரவிருந்தார். எடப்பாடி பழனிசாமி முன்பு தனது அரசியல் பலத்தை காட்ட விரும்பிய சசிகலா பயணத் திட்டத்தை 8-ம் தேதி மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் வரவேற்பைத் திருவிழாவைப் போல் கொண்டாட அ.ம.மு.க-வினர் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். 8-ம் தேதி காலை பெங்களூருவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க சசிகலா புறப்படுகிறார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தமிழக எல்லையான ஓசூரில் திரண்டு சசிகலாவுக்குப் பிரமாண்ட வரவேற்புக் கொடுக்கவிருக்கிறார்கள்.

அங்கிருந்து கிருஷ்ணகிரி, பர்கூர், வாணியம்பாடி டோல்கேட், ஆம்பூர் நகரம் வரை மேளதாளங்களுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கவும் அ.ம.மு.க-வினர் திட்டமிட்டிருக்கிறார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாபன், மாதனூரை அடுத்துள்ள கூத்தம்பாக்கத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி சசிகலாவை வரவேற்க உள்ளார். இதற்கான அனுமதி கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் மனு கொடுத்துள்ளார். ஜெயந்தி பத்மநாபன் வாடகைக்கு எடுக்கவுள்ள ஹெலிகாப்டரின் டிராவல் ஏஜன்சி நிறுவனம் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்க உள்ளார். ஒரு மணி நேர வாடகை 80,000 ரூபாய் என ஜெயந்தி பத்மநாபன் தெரிவித்துள்ளார். அப்படியெனில், இரண்டு மணி நேரத்துக்கு சுமார் 1,60,000 ரூபாய் வாடகை செலுத்தி ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவுகிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தொடர்ந்து, கந்தனேரி மற்றும் வேலூர் மாநகரிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வேலூர் வழியாகத் தொடர்ந்து பயணிக்கும் சசிகலாவுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி, ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, கத்திப்பாரா என வழிநெடுகிலும் அதிர வைக்கும் வேட்டுகளுடன் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். சென்னை சென்றடைவதற்குள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் சசிகலாவைப் பின்தொடர்ந்து அணிவகுத்துச் செல்லும் என்றும் அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அதேபோல், முதல்வரை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளையும் அ.தி.மு.க-வினர் தடபுடலாகச் செய்துவருகின்றனர். அசாதாரண சூழலில் ஒரே நேரத்தில் முதல்வரும், சசிகலாவும் நேருக்குநேர் வேலூரைக் கடப்பது தேவையில்லாத சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உளவுத்துறை மூலம் முதல்வரின் கவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வரின் பயணத்திட்டம் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. சசிகலா சென்றப் பின்னர் 9-ம் தேதியன்று காலை 9.30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்துக்கு வருகிறார் முதல்வர் பழனிசாமி. இரண்டாவது பாயிண்ட்டாக சோளிங்கரில் நடைபெறும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் அரைமணி நேரம் கலந்துரையாடுகிறார். பின்னர், ராணிப்பேட்டை முத்துக்கடைப் பகுதியில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார்.
அதை முடித்துக்கொண்டு மதியம் உணவுக்கு வேலூரில் உள்ள பென்ஸ் பார்க் ஹோட்டலுக்கு வந்து உணவருந்துகிறார். இந்த ஹோட்டல், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்குச் சொந்தமானது. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் பள்ளிகொண்டாவில் மகளிர் குழுவினருடன் கலந்துரையாடிவிட்டு கே.வி.குப்பத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் முதல்வர் பழனிசாமிக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கிறார்கள். அங்கு துரைமுருகனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கும் முதல்வர் பழனிசாமி, மாலையில் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். மறுநாள் 10-ம் தேதி காலை முதல் மதியம் வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். சலசலப்பு, சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் சசிகலாவுக்கு வழிவிட்டு பிரசார தேதியை முதல்வர் மாற்றியிருப்பது, அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/supporters-gears-up-welcoming-sasikala-to-tamilnadu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக