ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பா.ம.க இளைஞரணி தலைவரும் எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். பொய்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அன்புமணி பேசுவதற்குள் பலத்த மழை பெய்தது. மேடையிலிருந்த அன்புமணி மழையில் நனைந்தபடியே... ‘‘நான் எப்போது வேலூர் வந்தாலும் மழையும் உடன் வந்துவிடுகிறது’’ என பேசத் தொடங்கியபோது, மேடைக்கு முன்பு திரண்டிருந்த அக்கட்சியினரும் களைந்துச் செல்லாமல் கைத்தட்டி, விசில் அடித்து அவரின் பேச்சைக் கேட்டு ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து உரையாற்றிய அன்புமணி, ‘‘தமிழகத்தில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்கு பா.ம.க ஆட்சி அமைய வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ-க்களை விட ஊராட்சி மன்றங்களின் தலைவர்களுக்குத்தான் அதிகாரம் அதிகம் இருக்கிறது. பத்து தம்பிகள் ஒன்றுகூடி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்தப் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடித்தாக வேண்டும். 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு திடீரென்று கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். கடந்த 45 வருடங்களாக மருத்துவர் ஐயா ஓடாய் தேய்ந்து ஆயிரக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்து பெற்றுக் கொடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆரிடம் முறையிட்டோம். அவர் மறைவுக்குப் பின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த எம்.ஜி.ஆர் மனைவி ஜானகியிடம் கேட்டோம். அதன் பின் ஆட்சிக்கு வந்த கலைஞர் மற்றும் ஜெயலலிதாவிடமும் கேட்டோம். அவ்வளவு ஏன் அவர்களைத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடமும் இட ஒதுக்கீடு கேட்டோம். யாருமே கொடுக்கவில்லை. தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தோம். ஒன்றியம், பேரூர், நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் லட்சக்கணக்கான மனுக்களை கொடுத்துள்ளோம். அதன்பின்னரே இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவர் ஐயா ஒருவரே காரணமானவர்.
இட ஒதுக்கீட்டை சாதிப் பிரச்னையாகவோ, கட்சிப் பிரச்னையாகவோ பார்க்கவில்லை. சமூக நீதிக்கான பிரச்னையாக பார்க்கின்றோம். வன்னியர் போன்ற இதர பின்தங்கியிருக்கும் சமூக மக்களுக்கும் மருத்துவர் ஐயா இட ஒதுக்கீடு பெற்றுத்தருவார். ஒன்றை உறுதி ஏற்போம். தமிழகத்தில் பா.ம.க ஆட்சி மலர வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்து மாற்றத்தைத் தொடங்குவோம். கடந்த 54 ஆண்டுகளாக அனைத்து கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டது. ஸ்டாலின்கூட அவரின் கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர். இப்போது, அவருடைய முதலமைச்சர் கனவும் நிறைவேறிவிட்டது. அடுத்து நாம்தான் இருக்கிறோம். நம்முடைய ஆட்சி அமைவதுதான் நியாயம், நீதி. அனைவரும் தயாராக இருங்கள்’’ என்றார் அன்புமணி ராமதாஸ்.
source https://www.vikatan.com/government-and-politics/pmk-leader-anbumani-ramadoss-speech-at-vellore
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக