இன்னும் கொண்டாட்ட மனநிலையிலிருந்து நீங்கள் விலகியிருக்க வாய்ப்பில்லை. ஒரு IPL போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இப்படி ஆடுகிறார் என்பதைக் கடந்து, ஒரு இளம் இந்திய வீரரின் மகத்தான ஒரு இன்னிங்ஸைப் பார்த்து சிலாகித்திருக்கிறீர்கள். அதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்கள் விடுபட வாய்ப்பில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்து, தன் முதல் IPL சதத்தை (அக்டோபர் 2 நிலவரப்படி... விரைவில் மாறலாம். அவரது ஃபார்ம் அப்படி இருக்கிறது) அடித்திருக்கிறார் ருத்துராஜ் கெய்க்வாட். ஆனால், குறையாத கொண்டாட்டமெல்லாம் இந்த ஒரு இன்னிங்ஸுக்காக மட்டுமா!
ஒரு வீரரை நமக்குப் பிடிக்கப் பல காரணங்கள் இருக்கும். அவர்கள் விளையாடும் ஸ்டைல் பிடிக்கலாம். இன்னிங்ஸை கட்டமைக்கும் முறை பிடிக்கலாம். ஆட்டத்தின் அணுகுமுறை பிடிக்கலாம். அக்ரஷன் கூடப் பிடிக்கலாம். ஆகச் சிறந்த வீரர்கள் சிலரை மட்டுமே இந்த அனைத்துக் காரணங்களுக்காகவும் பிடிக்கும். ருத்துராஜ் இந்த பாக்ஸ்கள் அனைத்தையும் டிக் செய்பவர். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கக் காரணம், சமீப காலமாக பெரிய வீரர்களிடம்கூடப் பார்க்க முடியாத அந்தக் குணத்தை இவர் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருப்பதுதான்.
நேற்றைய போட்டி…
19.6-வது ஓவர். குட் லென்த்தில் பிட்சான முஸ்தாஃபிசுர் பந்தை லெக் சைட் பறக்கவிடுகிறார் கெய்க்வாட். ஒரு இசை மேதையின் விரல்கள் பியானோவில் பட்டவுடன், நிசப்தத்தை உடைத்துப் பரவிய இசையில் மெய்மறந்து போகும் ரசிகர்களைப் பார்த்திருக்கிறீர்களா… இந்த ஷாட்டுக்குப் பிறகு நீங்களே அப்படித்தான் உணர்ந்திருப்பீர்கள்.
பந்து பவுண்டரியைக் கடந்து செல்ல, ஹெல்மட்டைக் கழற்றி பேட்டை உயர்த்துகிறார் ருத்துராஜ். “He goes for it… The Sound is beautiful. The distance is incredible” என்ற ஹர்ஷா போக்ளேவின் வார்த்தைகளுக்கு நடுவே, ஆர்ப்பரிக்கும் அபுதாபி ரசிகர்களின் சத்தம். அனைத்தையும் விட சத்தமாகக் கேட்கிறது ருத்துராஜின் பேட்டில் பந்து பட்ட அந்த ஓசை. அப்படியொரு டைமிங்!
ஆனால், எனக்கு இவர் மிகவும் பிடித்துப்போக இதுவொன்றும் காரணம் இல்லை.
ரீவைண்ட் செய்வோம்.
17.1 - முஸ்தாஃபிசுரின் பந்துதான். 95 மீட்டருக்குப் பறந்து போய் விழுகிறது. “For a man without muscles, he’s hitting the ball long way”.
ஆம், யோசித்துப் பார்த்தால் உண்மைதான். 60-70 மீட்டர் சிக்ஸர் அடிப்பதுபோல் 80+ மீட்டருக்கு அசால்டாக பந்தை அனுப்பிக்கொண்டிருக்கிறார். எப்படி என்று ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால், இதனாலா பிடித்தது? இல்லை.
ரீவைண்ட்...
14.2 - ராகுல் திவேதியாவின் பந்தை நேரே இறங்கி வந்து பௌலரின் தலைக்கு மேலே தூக்கி அடிக்கிறார் ருத்துராஜ். ஸ்கேல் வைத்து கோடு கிழித்ததுபோல் பந்து நேராகச் செல்ல, அழகாய் நகர்ந்து கால்களையும் நேராய் உயர்ந்த பேட்டையும் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது.
“Absolutely ramrod straight. Straight Over the bowler’s head with the precision of an Architect’ - வர்ணனையாளரின் அந்த வார்த்தைகள், அவர் எந்த அளவுக்கு சிலிர்த்துப் போயிருக்கிறார் என்பதைப் புரியவைத்தது. அந்த ஸ்டைல், அந்தத் துல்லியம். ஆராதிக்காமல் இருக்க முடியாது. கொண்டாடாமல் விட முடியாது. ஆனால், நான் இவரை ரசிக்க இதுவும் காரணமில்லை. இந்த ஸ்டைலை எந்த பேட்ஸ்மேனிடமும் காண முடிகிறது. ஆனால், அந்த ஒரு விஷயம்..!
இன்று நிறைய பேட்ஸ்மேன்களிடம் காண முடியாதது, ருத்துராஜின் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் வெளிப்படுவது, என்னை ஒவ்வொரு இன்னிங்ஸிலும் கட்டிப்போடுவது - அவரது அக்ரஷன்! ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. உண்மையில், மற்ற இளம் வீரர்களிடமிருந்து, ஏன் சர்வதேச போட்டிகளில் ஆடும் பல வீரர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக் காட்டுவது அவரது அக்ரஷன்தான். IPL தொடரில் சுமார் 134 என்ற ஸ்டிரைக் ரேட்டே வைத்திருக்கும் ஒருவரை அக்ரஸிவ் பிளேயராக அடையாளப்படுத்துவது வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால், அதுதான் உண்மை. ஏனெனில், அக்ரஷனும் அதிரடியும் ஒன்றில்லை.
யார் அக்ரஸிவான கிரிக்கெட்டர்? லெக் ஸ்டம்ப்பில் guard எடுத்து முழு பலத்தையும் கொடுத்து ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு விளாச நினைப்பவரா, ஒவ்வொரு பந்தையும் பேட்டர்கள் மிரண்டு போகுமளவு 140 kmph பவுன்ஸர்களாக வீசுபவரா, பேட்ஸ்மேன் அடித்த பந்தைப் பிடித்துவிட்டு ஸ்டம்பின் மீது எறியும் பௌலரா, பௌலரிடம் முறைத்துக்கொண்டு அடுத்த பந்தை பவுண்டரி அடிப்பவரா, இல்லை பவுண்டரி அடித்த பேட்டரை அடுத்த பந்தே அவுட்டாக்கிவிட்டு முகத்துக்கு முன்பு சென்று கொண்டாடுபவரா… அங்கு கோபம் வெளிப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அக்ரஸிவ் கிரிக்கெட்டர்கள் இல்லை.
ஒருவர் அக்ரஸிவ் கிரிக்கெட்டர் என்பதை, அவர் உடல்மொழி உணர்த்தும். அவர் அணுகுமுறை உணர்த்தும். “உன்மையான அக்ரஷன் என்னவென்று தெரியவேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள்” என்றார் ஹெய்டன். ஆம், அதுதான் உண்மையான அக்ரஷன், ஆக்ரோஷம்.
பாடி லைன் அட்டாக் செய்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய பௌலர்களை எதிர்கொள்ள, சூயிங் கம் மென்றுகொண்டு ஹெல்மட் அணியாமல் நடந்துவரும் விவியன் ரிச்சர்ட்ஸின் தோரணைதான் அக்ரஷன். ஆஃப் சைடின் கடவுள் கங்குலிக்கு ஐந்து ஸ்லிப்பும் ஒரு கல்லியும் நிற்கவைத்து, பிரெட் லீ கையில் பந்தைக் கொடுத்து ஆஃப் சைடிலேயே போடச் சொல்லும் பான்ட்டிங்கின் முடிவுதான் அக்ரஷன். அந்த அக்ரஷனை ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு எளிதாக அதிலிருந்து மீள முடியாது. ருத்துராஜிடமிருந்து அவ்வளவு எளிதில் மீண்டு விட முடியாது!
ருத்துராஜின் அக்ரஷனைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசுவோம். சச்சின், கோலி போன்ற பேட்டர்கள் களமிறங்கும்போது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாக இருப்பது எது தெரியுமா? அவர்களின் டெக்னிக்கோ, ஃபார்மோ இல்லை. ‘சச்சின் இறங்கிட்டாரே’, ‘கோலி வந்துட்டாரே’ என்று பௌலர்களின் மனதில் எழும் அந்த எண்ணம்தான். முதல் பந்தைச் சந்திப்பதற்கு முன்பே அந்த ஜாம்பவான்கள் இப்படியொரு அணுகூலத்தை அடைந்திருப்பார்கள். பௌலர்களின் பயம், அவர்களை பின்தங்கவைத்திருக்கும்.
இது பௌலர்களுக்கும் பொருந்தும். வாசிம் அக்ரம், வார்னே தொடங்கி இன்று பும்ரா, ரஷீத் கான் வரை இவர்களுக்கும் அந்த சாதகமான சூழல் இருக்கும். அதுவும் ரஷீத் கான் ஓவரில் விக்கெட் விடக்கூடாது என்பதை மட்டுமே குறியாக வைத்து, ரன்ரேட் என்பதையே அணிகள் மறந்திருக்கின்றன. IPL தொடரில் 6.24 என்ற அட்டகாசமான எக்கானமி வைத்திருக்கிறார் ரஷீத். 23 வயதிலேயே IPL ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறார். ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல் தவிர்த்து வேறு எந்த பேட்டரும் ரஷீதை தைரியமாகக் கையாண்டதில்லை. இந்த ஆண்டு வரை… ருத்துராஜ், ரஷீதை சந்திக்கும் வரை!
3 நாள்கள் ரீவைண்ட் செய்வோம். செப்டம்பர் 30, 2021. CSK v SRH.
135 ரன்களை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ், 5 ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் 36 ரன்கள் எடுத்துவிட்டது. வேறு வழியில்லாமல் தன் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறார் கேன் வில்லியம்சன். ரஷீத் கான் கையில் பந்து இருக்கும்போது பேட்டர்களின் அணுகுமுறை எப்படியிருக்கும் என்பது நமக்குத் தெரியும். பேட்டருக்குத் தன்மீது பயமிருக்கும் என்ற கூடுதல் நம்பிக்கையில்தான் ரஷீதும் கிரீஸுக்கு வந்திருப்பார். ஆனால், ஸ்டிரைக்கில் இருந்தது ருத்துராஜ் கெய்க்வாட்.
முதல் பந்திலேயே ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறார் ருத்துராஜ். எட்ஜாகி கீப்பருக்கு மேலே சென்று பவுண்டரி ஆகிறது. எட்ஜ் ஆகியிருக்கலாம். இருந்தாலும், அந்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பவேண்டும் என்ற நோக்கில்தான் ஆடினார் ருத்துராஜ். அடுத்த பந்து… கிரீஸிலிருந்து இறங்கி வந்து பௌலரின் தலைக்கு மேலே சிக்ஸருக்குப் பறக்கவிடுகிறார்.
“This is very rare. Stepping down the pitch to Rashid Khan… very rare. But, Ruturaj Gaikwad makes it look ridiculously easy” - வர்ணனையில் கவாஸ்கர் மெய்மறந்து பேசுகிறார்.
உண்மைதான். எத்தனை பேர் ரஷீக் கானின் பந்தில் அப்படி இறங்கி வந்து அசாத்திய ஷாட் ஒன்றை ஆடியிருப்பார்கள். அதுவும், அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்களை எத்தனை பேர் அடித்திருப்பார்கள்? யோசித்துப் பார்க்கும்போதே அதிசயிக்கிறீர்களா?!
கவாஸ்கரின் வார்த்தைகள் முடிந்து, பாயின்ட் திசையிலிருந்த கேமராவின் ஃபூட்டேஜிலிருந்து ஹைலைட்ஸ் காட்டப்பட்டது. இறங்கி வந்து அந்த ஷாட்டை அடித்துவிட்டு, ஒரு நொடி மேலே பார்த்த ருத்துராஜ்ஜ், ஒரு பெரும் ராஜ்ஜியத்தை சரித்துவிட்ட தோரணையில் டுப்ளெஸ்ஸியை நோக்கி நடப்பார். 3 அடிகள்தான் அந்த ஸ்லோ மோஷன் ஹைலைட்ஸில் காட்டியிருப்பார்கள். பார்க்கவே அப்படியிருக்கும். ரஷீத் கானுக்கு எப்படி இருந்திருக்கும்!
அவை 10 ரன்கள் கிடையாது. ரஷீத் கானுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. மற்றவர்கள் உன்மீது கொண்டிருக்கும் பயம் இங்கே இல்லை என்ற அறைகூவல். ஒரு மாபெரும் வீரனின் நம்பிக்கையை கிரீஸிலிருந்து எடுத்துவைத்த 2 அடியில் தவிடுபொடியாக்கியிருப்பார் ருத்துராஜ். அதுதான் அக்ரஷன். ஒரு முன்னணி வீரர், உளவியல் ரீதியாக தன் மீது ஆதிக்கம் செலுத்திவிடாமல் இருக்க உடனடியாக அனுப்பப்படும் அந்த எச்சரிக்கை மணி… அதுவும் அக்ரஷன்தான். ருத்துராஜ், அதை ஒவ்வொரு போட்டியிலும் காட்டிக்கொண்டிருக்கிறார்.
உலகத்தர பௌலருக்கு மட்டுமல்ல, வளர்ந்துவரும் பௌலராக இருந்தாலும், அனுபவ பௌலராக இருந்தாலும், அறிமுக பௌலராக இருந்தாலும் கெய்க்வாட் உடனடியாக எச்சரிக்கை அனுப்பிவிடுவார்.
நேற்றைய போட்டியை பாதியில் விட்டுவிட்டோமல்லவா... ரீவைண்ட் செய்து முதல் பந்துக்கு வருவோம். ஆகாஷ் சிங். தன் முதல் IPL போட்டியில் பந்துவீச வருகிறார். ஒவ்வொரு வீரரையும் போல் நல்லதொரு first impression ஏற்படுத்தவேண்டும் என்ற ஆசையோடுதான் அவரும் இருந்திருப்பார். ஆனால், அவருடைய முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பி, ‘எதிரே நிற்பது நான்’ என்று அறிவித்தார் ருத்துராஜ். நிதானமாக பந்தைக் கணித்து அற்புதமாக டைம் செய்து ஆடப்பட்ட ஸ்ட்ரெய்ட் டிரைவ். பார்க்க அவ்வளவு கூலாக இருந்தது. ஆனால், பௌலரின் தலையில் என்னவெல்லாம் ஓடியிருக்கும்.
கடைசிப் பந்திலும் பவுண்டரி அடித்து, அந்த முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்தார் ருத்துராஜ். ஆர்ப்பாட்டமில்லாத ஷாட்கள்தான். ஆனால், ஒரு பௌலரை அதுவே நிலைகுலையவைக்கும். இந்த சீசனில் அவருடைய மிகப்பெரிய ஆயுதமாக இருப்பது இந்த அணுகுமுறைதான்.
மார்ச் 15. வான்கடே மைதானம், மும்பை. CSK v KKR.
ஒவ்வொரு பௌலரையும் ஆரம்பத்திலிருந்தே விளாசத் தொடங்குகிறார் ருதுராஜ். கம்மின்ஸின் பந்துவீச்சில் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே 4. சுனில் நரைனின் அவருக்கு வீசிய இரண்டாவது பந்தில் 4. இரண்டு போட்டிகளுக்கு முன்பு, இரண்டே ஓவரில் 5 விக்கெட்டுகள் எடுத்த ரஸல் இவருக்கு வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர். இளம் பௌலர் நாகர்கோட்டிக்கும் அதே கதைதான். முதல் பந்தே சிக்ஸருக்குப் பறந்தது. பிரஷீத் கிருஷ்ணா பந்தை பவுண்டரிக்கு அனுப்ப மட்டும் நான்கு பந்துகள் ஆனது. வருண் சக்ரவர்த்தி தவிர்த்து அனைவருக்கும் அதே நிலைதான். நாகர்கோட்டிக்கும் அதே டிரீட்மென்ட்தான், நரைன், கம்மின்ஸ் ஆகியோருக்கும் அதே டிரீட்மென்ட்தான்!
ரஷீத் கானை டீல் செய்த விதம் பற்றிப் பேசினோமே… அது இரண்டாவது சுற்றில் மட்டுமல்ல. இந்தியாவில் நடந்த முதல் சுற்றிலும் அப்படித்தான் டீல் செய்தார். ரஷீத்தின் ஒரே ஓவரில் 3 ஃபோர்கள் அடித்து ஆட்டமிழந்தார் ருத்துராஜ். இதுவரை ரஷீத் கான் பந்துவீச்சில் 18 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருக்கிறார். ஆறு ஃபோர்கள், ஒரு சிக்ஸர். வெறும் இரண்டே டாட் பால்கள். ஸ்டிரைக் ரேட் : 211.11! இதுதான் ருத்துராஜ் கெய்க்வாட் ஸ்பெஷல்!
என்னதான், பௌலர்களை அக்ரஸிவாகக் கையாண்டாலும், தன் இன்னிங்ஸை நிதானமாகவே கட்டமைக்கிறார் ருத்துராஜ். மிகவும் சென்சிபிளாக விளையாடுகிறார். ஏதோவொரு பௌலருக்கு எதிராக ஃபாஃப் மிகவும் சௌகரியமாக உணர்ந்து அதிரடியாக ஆடினால், இவரது முதல் வேலை ஸ்டிரைக் ரொட்டேட் செய்வதுதான். ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தால், அதற்கு ஏற்பத்தான் எந்த ஷாட்டும் ஆடுகிறார். ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கிறார். ரிஸ்க் இல்லாத ஸ்ட்ரெய்ட் டிரைவ் மூலமோ, கட் ஷாட் மூலமோ பவுண்டரி அடித்து பௌலரை பின்தங்கவைப்பார். ஆனால், அடுத்த பந்தே ஸ்டிரைக் ரொட்டேட் செய்யலாமா இல்லை டாட் ஆடலாமா என்றுதான் யோசிப்பார். டி-20 கிரிக்கெட் என்பதற்காக, MPL விளம்பரத்தில் வருவதுபோல் மூளையைக் கழற்றிவைத்துவிட்டு வந்து ஆடும் வீரரில்லை இவர்!
இப்படி முழுமையான ஒரு பேட்ஸ்மேனாக உருவெடுத்து நிற்கும் ஒருவரை நம்மால் கொண்டாடாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு வீரர் புதிதாக கலக்கத் தொடங்கும்போதும், இவர் இந்திய அணிக்கு விளையாடுவார் என்ற எண்ணம் வரும். அப்படி பலருக்கும் தோன்றும். ஆனால், எல்லோராலும் தேசிய அணிக்குள் நுழைந்துவிட முடிவதில்லை. நுழைந்தாலும் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. சமீப காலத்தில் மயாங்க், கில், ப்ரித்வி ஷா, இஷான் கிஷன் என பல ஓப்பனர்களைப் பார்த்துவிட்டது இந்தியா. ஆனால், ரோஹித் - தவானுக்குப் பிறகு இவர்கள்தான் மாற்று என்று நம்மால் ஒருவரையோ இருவரையோ குறிப்பிட்டு சொல்ல முடிவதில்லை. அதற்கெல்லாம் ருத்துராஜ் விடையாக இருப்பார் என்று தோன்றுகிறது!
இன்று லாராவை விட்டால், தேவ்தத் படிக்கலின் ஃபூட் மூவ்மென்ட்டில் உள்ள தவறுகள் பற்றி நாள் முழுக்க பாடம் எடுப்பார். கெவின் பீட்டர்சன் ஒவ்வொரு KKR போட்டியிலும் ''ஷுப்மன் கில் ஸ்லோ பாலில் தடுமாறுகிறார்'’ என்று புலம்புகிறார். பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் 49 ரன்களுக்கு அவுட் ஆனபோது, ஜெய்ஸ்வாலின் அனுகுமுறை ஒவ்வொருவராலும் பெரிதாக விமர்சிக்கப்பட்டது. இப்படி ஒவ்வொருவருக்கும் பலவீனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வளவு ஏன், அனுபவ வீரர் தவானையே ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டுவந்து பயமுறுத்துகிறார்கள். ருத்துராஜ்- இதுவரை அப்படியொரு பலவீனத்தை வெளிக்காட்டவில்லை.
வேகப்பந்துவீச்சை அதீத கவனத்தோடு எதிர்கொள்கிறார். இவர் சுழலை ஆடுவது பற்றி எழுதினால், ஆறேழு கட்டுரைகள் எழுதவேண்டியிருக்கும். கவிதையே கூட எழுதவேண்டியிருக்கும். அப்படி ஒரு ஆட்டம் காட்டுகிறார். ருத்துராஜ் - ரோஹித்தின் அழகியலும் கொண்டிருக்கிறார். கோலியின் அக்ரஷனும் கொண்டிருக்கிறார். ஷார்ட் ஃபார்மேட்டில் ஓப்பனிங் இறங்கி அட்டகாச தொடக்கமும் அவரால் தர முடியும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் இறங்கி அணியைத் தூக்கி நிறுத்தவும் முடியும். இவரால் எதுவும் முடியும்!
source https://sports.vikatan.com/ipl/why-ruturaj-gaikwad-is-a-special-player-of-this-generation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக