பிக்பாஸ் சீசன் 5 இன்று மாலை ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உள்ளே சென்று பார்த்தோம். கொரோனா பரிசோதனை, இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போன்ற போட்டியாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் எங்களுக்கும் இருந்தது.
கேட் நுழைவாயிலில் வெப்பப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தார்கள். செட்டுக்குள் நுழைந்த உடன் பிக்பாஸ் சீசன் 5 லோகோவும், புரொமோவில் இடம்பெற்ற கமல்ஹாசனின் படங்களும் இருந்தன. பிறகு, சிறிது தூரம் நடந்து பிக்பாஸ் வீடு இருக்கும் இடத்தை அடைந்தோம். வீட்டுக்குள் நுழையும் முன்னர் எங்களுக்கும் தனித்தனி மைக் கொடுக்கப்பட்டது. கவுன்ட் டெளன் சொல்லி பிக்பாஸ் வீட்டின் கதவை திறந்தார்கள்.
இதுவரை நாம் பார்த்த சீசன்களை விட இந்த சீசன் பிக்பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. பசுமை வண்ண கான்செப்ட்களில் இந்த முறை வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள். பச்சை வண்ணம் போர்த்தியது போன்று வீட்டின் முகப்பு இருந்தது. பிக்பாஸ் சீசன் 5 என்பதால் வீட்டு முகப்பில் 5 என்கிற வடிவில் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அது முழுக்கவும் புற்கள் மீது இருப்பது போன்று இருந்தது.
உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் அமர்ந்து பேசுவதற்கென தனியொரு இடம் இருந்தது. இந்த முறை வீட்டுக்கு வெளியில் பல இடங்களில் அமர்ந்து பேசுவதற்கு பல இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மழை பெய்யும்போது பயன்படுத்திக் கொள்வதற்கு குடைகளும் வைக்கப்பட்டிருந்தன.
வலது புறத்தில் செடி போன்று டிசைன் செய்யப்பட்டிருந்த ஒரு நீர்த்தொட்டி இருந்தது. கடந்த முறை பிக்பாஸ் செட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் இந்தமுறை அதற்கு முன்னெச்சரிக்கையாக இந்தத் தொட்டி வடிவமைக்கப்பட்டிருப்பது போன்று இருந்தது.
அடுத்ததாக, ஜெயில்! போன முறை வீட்டிலிருந்து வெளியேறி இடப்புறம் திரும்பினால் ஜெயில் இருந்தது. ஜெயிலுக்குள்ளேயே கழிப்பறையும் இருந்தது. ஆனால், இந்த முறை ஜெயில் இருந்த இடம் சிறிய அறையாக மாறி இருந்தது. அப்போ ஜெயில் இல்லையான்னா கேட்குறீங்க..?
இருக்கு... இந்த முறை ஜெயில் வீட்டுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலுக்குள் போகிறவர்கள் இந்த முறை ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஜெயிலுக்குள்ளே பாத்ரூம் வசதிகள் இல்லை. நீச்சல் குளம் இருந்த இடத்தில் தற்போது ஜெயில் இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீச்சல் குளம் பிக்பாஸ் வீட்டில் அமைக்கப்படவில்லை.
அடுத்ததாக, வீட்டுக்குள் நுழைந்தோம். பிரம்மாண்டமான இன்டீரியர் டிசைனுடன் இந்த சீசனில் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டிருக்கிறது. சீசன் 5 என்பதால் எல்லா இடங்களிலும் 5 என்கிற எண் இடம் பெற்றிருந்தது.
வரவேற்பரை போன்று வீட்டுக்குள் சென்றதும் உட்கார்ந்து பேச வலது புறத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நேராக சென்றால் டைனிங் டேபிள் இருக்கிறது. குறிப்பாக டைனிங் டேபிளில் உள்ள ஒரு இருக்கையில் மட்டும் 5 என்கிற எண் இருந்தது... அத்துடன் அந்த இருக்கை மட்டும் பிங்க் வண்ணத்தில் இருந்தது.
கிச்சனில் இந்தமுறை எந்தவித மாற்றமும் இல்லை. வழக்கம் போன்ற கிச்சன் தான் இந்த முறையும் இருந்தது. கிச்சனுக்கு பக்கத்தில் கொஞ்சம் பெரியதாக ஸ்டோர் ரூம் அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக, அகம் டிவி வழியே அகத்திற்குள் நுழைவோம் என கமல்ஹாசன் சொன்னவுடன் எல்லாரும் அமர்ந்திருப்பார்களே அதே வடிவத்தில் தான் இந்த முறையும் ஸோஃபாக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கன்ஃபஷன் ரூம் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். சுவரோடு சுவராக வடிவமைக்கப்பட்டிருந்தது கன்ஃபஷன் ரூம். கன்ஃபஷன் ரூமில் பெரும்பாலும் போட்டியாளர்கள் மனக்குறையை சொல்கிறார்கள் என வெள்ளை நிறத்தில் அமைதியை உணர்த்தும் வகையில் அந்த ரூம் அமைக்கப்பட்டிருந்தது. இருக்கைக்கு பின்புறத்தில் வெள்ளை நிறத்தில் விங்ஸ் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த இருக்கையில் அமர்ந்ததும் நம் முகத்துக்கு நேராக ஃபோக்கஸ் லைட் ஆன் ஆகிறது.
அடுத்ததாக படுக்கையறை. வழக்கம்போல ஆண்களுக்கு 5 படுக்கைகளும், பெண்களுக்கு 5 படுக்கைகளும் இருந்தன. படுக்கையறையில் துணிகளை அயர்ன் செய்வதற்கென அயர்னிங் மிஷின்களும் இருந்தன.
படுக்கையறையில் இந்த முறை ஒரு ஸ்பெஷல் என்னவென்றால் பெண்களுக்கான படுக்கையறையில் ஒரு பெட் மட்டும் பிங்க் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. மற்ற பெட்களை விட அந்த பெட் சிறியதாகவும் இருந்தது. இந்த படுக்கையும், டைனிங்கில் உள்ள பிங்க் வண்ண இருக்கையும், யாருக்காக, எதற்காக என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.
இறுதியாக, பாத்ரூம். போன முறை அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் தான் இந்த முறையும் பாத்ரூம் அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு குளியலறையும், இரண்டு டாய்லெட்டும் இருந்தன. முந்தைய சீசன்கள் போன்று பெண்கள் ரூமில் அமைக்கப்பட்டிருந்த எமெர்ஜென்சி பாத்ரூம் இந்த முறை அமைக்கப்படவில்லை. இந்த பாத்ரூமை மட்டும்தான் போட்டியாளர்கள் பயன்படுத்த முடியுமாம்.
போட்டியாளர்கள் சென்ற பிறகு இந்த வீடு எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்த்தாக வேண்டும்!
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/whats-special-in-bigg-boss-season-5-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக