கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூமலைக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதிவி ஆதி திராவிடர் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது தேர்தல் நடத்தாமல் தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்ய கிராம கமிட்டி முடிவு செய்திருக்கிறது. இதையடுத்து தேர்தல் நடத்தப்படாமல் ஆதி திராவிடப் பிரிவைச் சேர்ந்த ப்ரியா என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சியில் உள்ள 6 வார்டுகளில் தலா 4 பேரைத் தேர்வுசெய்து குலுக்கல் முறையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் வார்டு உறுப்பினர்களின் பெயரைத் துண்டு சீட்டில் எழுதிப் போட்டு ஊராட்சி மன்றத் துணைத்தலைவரைத் தேர்வு செய்திருக்கின்றனர். இக்குழுவில் துணைத்தலைவர் மற்றும் 3 ஆவது வார்டு உறுப்பினர் மட்டுமே ஆண்களாக இருந்தனர். இந்நிலையில், ஊராட்சி மன்றக் குழுவின் செயல்பாடு சரியில்லை எனக் கூறி, கிராம சபைக் கூட்டத்தில் வைத்து தலைவர் உள்ளிட்ட அனைவரையும் ராஜினாமா கடிதம் எழுத வைத்துள்ளனர்.
தேனி ஒன்றியம் பூமலைக்குண்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ப்ரியா தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் மகேஷ், தேனி கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான திருப்பதி, ஊராட்சி செயலர் செந்தில் ஆண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வளர்ச்சிப் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை. ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. ஊரில் உள்ள முத்தாலம்மன், பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினர். குறிப்பாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள 2 டீ கடைகளை அகற்ற முடியாத ஊராட்சி மன்றக் குழு தங்களுக்குத் தேவையில்லை. செயலிழந்துள்ள இந்த ஊராட்சி மன்றக் குழுவால் ஊராட்சிக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. எனவே தலைவர் உள்ளிட்டவர்கள் பதவியில் நீடிக்கக்கூடாது எனவும், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் 5 பேரை ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான திருப்பதி, ``முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காகத் தலைவர் உள்ளிட்ட ஊராட்சி மன்றக் குழுவினர் ராஜினாமா செய்ய சொல்லக்கூடாது" எனக் கூறியுள்ளார். கிராமக் கமிட்டியினரோ, பொதுமக்களாக பார்த்துத் தேர்வு செய்த குழுவின் செயல்பாடு சரியில்லை என்பதால் திரும்பப் பெறுகிறோம்" என்று உறுதியாகக் கூறியுள்ளனர். இதனால் தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விலகிக்கொள்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் நிறைவு பெற்றது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஞான திருப்பதியிடம் கேட்டபோது, ``குறிப்பிட்ட சிலர் மட்டுமே இவ்வாறு பிரச்னை செய்கிறார்கள். அவர்களுடைய அழுத்தம் காரணமாகவே தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் எழுதினர். ஆனால் அந்தக் கடிதம் எங்களிடம் வழங்கப்படவில்லை. எவ்வளவோ எடுத்துக் கூறியும் சிலர் புரிந்து கொள்ளாமல் நடந்த கொண்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். ஊராட்சி மன்றக் குழுவை கலைப்பது என்றால் முறையாக கூட்டம் கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்பதுகூட இப்பகுதி மக்களுக்கு தெரியவில்லை என்றார்.
Also Read: கிராம சபைக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாப்பாபட்டியை தேர்வு செய்தது ஏன்?!
ஊராட்சிமன்றத் தலைவர், துணைத்தலைவரிடம் இதுகுறித்து விசாரித்தோம். "கொரோனா காலத்தில் தூய்மைப் பணி, தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்டப் பணிகளை மட்டுமே பார்த்தோம். பிற பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது உண்மைதான். அந்தக் கடைகளை அகற்ற ஏற்பாடு செய்து வந்தோம். சிலர் எங்களைக் கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்துவிட்டதாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஊராட்சியால் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு அறிவுறுத்தலின்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு நடத்தவிடாமல் வேறு இடத்தில் நடத்த நிர்பத்திக்கப்பட்டோம். தேர்தல் நடத்தி தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதைப் புரிந்து கொண்டோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/politics/resignation-of-the-village-president-at-the-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக