தென் சென்னையில் இருக்கும் பிரபலமான மருத்துவமனைகளில் அதுவும் ஒன்று. அங்கு 14 வயதுச் சிறுவனை அனுமதித்து சிகிச்சை பார்த்துள்ளனர். இதில் அதிர்ச்சி என்னவெனில், அந்தச் சிறுவனுக்கு கொரோனா தொற்றே இல்லை. ஆனால், இருப்பதாகச் சொல்லிச் சொல்லி தங்க வைத்து பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு செவிலியர், இந்தக் கொள்ளையைச் சகித்துக்கொள்ள முடியாமல், கொரோனாவே இல்லாமல் கோவிட் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த அந்த அப்பாவிச் சிறுவனிடம் உண்மையைச் சொல்லியிருக்கின்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட சிறுவன், தன்னுடைய பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்ல, அவர்களோ அப்படியெல்லாம் இருக்காது என்று வெகுளியாக அந்த மருத்துவமனையை நம்பிக்கொண்டே இருந்துள்ளார். இப்படியே வைத்து போலி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தவர்கள், கடைசியாக 14 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துவிட்டார்கள். சென்னையின் மையப்பகுதியில் மருந்தகம் வைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் தம்பி மகனுக்கு நிகழ்ந்த அநியாயம்தான் இது. அவருடைய புலம்பலைக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை.
நாடே கோவிட்-19 பரவலில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்க, படுக்கை போதாமல் திண்டாடுகின்றனர். இந்நிலையில், தென் சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் இப்படியோர் ஏமாற்று வேலை நடந்திருப்பது மருத்துவ உலகத்துக்கே பேரதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால், இந்தக் கொள்ளை இவர்களோடு நின்றுவிடவில்லை.
கொரோனா பாசிட்டிவ் என்று ஒருவர் சிகிச்சைக்கு வந்தால் அவர்களிடம் லட்சக்கணக்கில் கொள்ளையடிப்பது மட்டுமன்றி, கொரோனா இருக்கிறதோ இல்லையோ ஒருவரை கொரோனா நோயாளியாக அனுமதித்தால், அவர்களுக்கும் அந்தக் கொள்ளையிலிருந்து தனி கமிஷன். இந்த கமிஷனுக்காக, கொரோனாவே இல்லாதவரையும் கூட பாசிட்டிவ் என்று கூறி அழைத்துவந்து அனுமதித்துவிட்டு, கமிஷன் வாங்கிச் செல்பவர்கள் பலர். பாவம், தனக்கு கொரோனா பாசிட்டிவ்தான் என்று நம்பி அச்சத்தோடும் வேதனையோடும் அங்கு சிகிச்சை எடுக்க வருபவர்களுக்கோ மன உளைச்சல், நிம்மதியின்மையோடு சேர்த்து பெருமளவு பணமும் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது.
ஒருவர் உண்மையாகவே கொரோனா பாசிட்டிவ் இருந்து அங்கு சென்றாலும்கூட, குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாயைச் சுருட்டாமல் அவர்கள் சிகிச்சையை முடித்து வெளியே அனுப்புவதில்லை. இப்படிச் சிக்கிக்கொண்ட ஒருவர் இரண்டரை லட்சம் ரூபாயைக் கட்டிய பிறகுதான் வெளியே செல்லவே அனுமதித்ததாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இப்படி, கொரோனாவை வைத்துச் செய்யப்படும் முதலீடுகளும் அதிலிருந்து அடிக்கப்படும் கொள்ளைகளும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதுமட்டுமன்றி, கொரோனா பாசிட்டிவ்வோடும் மிக மோசமான உடல்நிலையோடு தீவிர சிகிச்சை தேவைப்பட வேண்டிய நிலையிலும் யாராவது அனுமதிக்கப்பட்டால், அவர்களை படுக்கை போதவில்லை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று ஏதாவது காரணத்தைக் காட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிடுகின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்களைப் பற்றி சென்னையைச் சேர்ந்த ஓர் அரசு மருத்துவரே கவலை தெரிவித்துள்ளார்.
அவர், ``தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அனைத்தும், மோசமான உடல்நிலையோடு எந்த நோயாளியாவது தங்கள் மருத்துவமனைக்குச் சிகிச்சை கேட்டு வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயாராக இல்லை. ஆபத்தான நிலையிலிருக்கும் அந்த நோயாளிகளை அவர்கள் அரசு மருத்துவ மனைக்குத்தான் அனுப்பி வைக்கின்றனர். தனிநபர் ஒருவரின் உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கையாள தனியார் மருத்துவமனைகள் தயங்குகின்றன. ஆகையால், அரசு மருத்துவமனையையே எல்லோரும் தேடி வருகின்றனர். இதனால், இங்கும் கடுமையான இடப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். அவர்களும் நோய்த்தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்" என்று வேதனையோடு தெரிவித்தார்.
இவைபோக, தனியார் மருத்துவமனைகள் அரசாங்கம் கோவிட் சிகிச்சைக்காக நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் சிகிச்சை பெற்றவர்களில் பலர் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அதோடு ஒரே நேரத்தில் மூன்று, நான்கு பேர் ஒரு படுக்கையைக் கேட்கும்போது, அதில் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே இடம் கொடுப்பதும் நடக்கிறது. இதைத் தவிர்க்க முதலில், அரசு கோவிட் சிகிச்சை மையங்களுக்கு ஆரம்பகட்டத்திலேயே சென்று அவர்களுடைய வழிகாட்டுதலைப் பெற்று அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்" என்று கூறினார்.
தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவது பற்றியும் கொரோனாவே இல்லாமல் சிகிச்சை கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பேசிய செயற்பாட்டாளர் மருத்துவர் ரவீந்திரநாத், ``மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள், குறைந்த அறிகுறிகளோடு இருப்பவர்களை அதிகமாக அனுமதித்துக் கொள்கிறார்கள். இதனால், தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.
Also Read: கொரோனா: இந்தியாவில் 2 கோடியை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை! #NowAtVikatan
இதைச் சரிசெய்ய, சிகிச்சைக்கு அனுமதிக்கும் அதிகாரத்தை அரசே கையில் எடுக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளுமே அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். அப்போதுதான் கட்டணக் கொள்ளையைத் தடுக்க முடியும்.
அதோடு, ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தாலும், அவர்களுக்கு கொரோனா இருக்க வாய்ப்புள்ளது. நுரையீரலில் கோளாறு இருந்தால் அதை நிச்சயம் கொரோனா பாசிட்டிவ்வாகக் கருதியே சிகிச்சையளிக்க வேண்டும். ஆகையால் அதை நாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது" என்று கூறினார்.
தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனைக்குத் திருப்பிவிடுவது என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று கொரோனா கண்காணிப்பில் இருக்கும் கூடுதல் இயக்குநர் மருத்துவர்.விஸ்வநாதனிடம் கேட்டபோது, ``ஏற்கெனவே எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசு உத்தரவு பிறப்பித்து, அனைவருக்கும் அனுப்பியுள்ளது. அதை மீறும் மருத்துவமனைகள் மீது யாராவது புகார் தெரிவித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறோம். சென்னையில் மட்டும் இதுவரை சுமார் 50-க்கும் மேற்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று கூறினார்.
Also Read: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா... கட்டுக்குள் கொண்டுவர புதிய ஆட்சி செய்யவேண்டியது என்ன?
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டியது அவசியம். அதேநேரம், அனைத்து மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்கவேண்டும். அறிகுறிகள் இன்றி பாசிட்டிவ் வந்தால், அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முடியும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், வெறுமனே படுக்கைகளை நிரப்பி பணம் சம்பாதிப்பதும் ஆங்காங்கே நடப்பதை மறுப்பதற்கில்லை.
மருத்துவர் ரவீந்திரநாத் கூறியதுபோல் அரசே அவசரகால அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளின் கொரோனா பிரிவையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அரசின் மேற்பார்வையோடு செயல்பட வைக்கவேண்டும். இதுவே, அனைவருக்கும் முறையான சிகிச்சை நியாயமான கட்டணத்தில் கிடைக்க உதவும்.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/private-hospital-in-chennai-looted-14-lakh-rupees-for-the-kids-covid-treatment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக