கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள நச்சலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், நச்சலூர் பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலருகே அதே பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (45), கண்ணன் (46), புரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் (29) ஆகிய மூன்று பேரும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்தபோது, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்த ரூ. 7,700 மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள், பணம் ரூ.51,850 பறிமுதல் செய்யப்பட்டன.
Also Read: நாமக்கல்: ப்ளஸ் டூ மாணவியை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை - சரக்கு ஆட்டோ டிரைவரைத் தேடும் போலீஸ்!
அந்த மூன்று பேரைக் கைதுசெய்த போலீஸார் மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர். அதேபோல், குளித்தலைக்கு அருகிலுள்ள தோகைமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில், அங்கு சென்ற போலீஸார் தோகைமலை கடைவீதியில் வேதாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லாட்டரிச் சீட்டுகளை விற்றபோது அவரைக் கைதுசெய்தனர். அதேபோல், பேரூர் கடை வீதிப் பகுதியில், காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தச் சுப்பிரமணி என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்ற போது, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். மேலும், இவர்கள் இருவரிடமிருந்த எட்டு லாட்டரிச் சீட்டுகளைப் பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தநிலையில், நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``குளித்தலை, நச்சலூர், தோகைமலைப் பகுதிகளில் வருஷத்தில் 365 நாள்களும் தங்குதடையில்லாம தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் விற்பனை நடக்குது. நாங்க மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட எஸ்.பி-க்களுக்கும் எத்தனையோ முறை புகார் கொடுத்துட்டோம். சும்மா 'கணக்கு' காட்ட மட்டும் இப்படி அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறாங்களே தவிர, முழுமையாக லாட்டரி விற்பனையைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை" என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
source https://www.vikatan.com/news/crime/police-arrested-people-who-sold-lottery-tickets-in-karur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக