Ad

ஞாயிறு, 2 மே, 2021

மதுரை: தீண்டாமை வன்கொடுமைச் சட்டம்; தவறாகப் பயன்படுத்துகிறதா காவல்துறை?!-குற்றச்சாட்டும் விளக்கமும்

பட்டியலின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், சட்ட உதவி செய்பவர்கள், பொதுநலவாதிகள் மீதே தீண்டாமை வன்கொடுமை வழக்கைப் பொய்யாகப் பதிவு செய்து காவல்துறை பழி வாங்குகிறது என்று மதுரை மாவட்ட சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பியுள்ளார்கள்.

காவல்துறை

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் குவாரி, மணல் குவாரி மோசடிகளுக்கு எதிராகவும், தேர்வாணைய மோசடி, முல்லைப் பெரியாற்று பிரச்னை எனப் பல பிரச்னைகளுக்கு நியாயம் கேட்டு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தவர் வழக்கறிஞர் பி.ஸ்டாலின்.

இந்தநிலையில், சில நாள்களுக்கு முன் மேலூர் ஹோட்டலில் நடந்த வாக்குவாதத்தைப் பயன்படுத்தி, இவர்மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கைப் பதிவுசெய்து சிறைக்கு அனுப்பியது மேலூர் காவல்துறை. இந்தச் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர்மீது தீண்டாமை வன்கொடுமை புகார் கொடுத்தவரே, 'ஹோட்டலில் சாதாரண வாக்குவாதம்தான், தீண்டாமை வன்கொடுமைப் புகார் கொடுக்கவில்லை' என்று நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ததால், தற்போது ஸ்டாலின் பிணையில் விடப்பட்டுள்ளார்.

உண்மையிலையே தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்யாமல் தட்டிக்கழிக்கும் காவல்துறையினர், வழக்கறிஞர் ஸ்டாலின் மீது மட்டும் உடனே வழக்கு பதிவு செய்தது ஏன் என்று விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பி.ஸ்டாலின், "கம்யூனிஸ்ட் பின்னணியில் வளர்ந்த நான் பாதிக்கப்படுகிற பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையின மக்கள் பக்கம் எப்போதும் நிற்பவன். மேலவளவு கொலை வழக்கில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ரெத்தினத்திடம் பயிற்சி பெற்றவன். மேலூர் வட்டாரத்தில் நடந்த கிரானைட் மோசடிக்கு எதிராக வழக்கு போட்டவன். தேர்வாணைய மோசடி முதல் முல்லைப்பெரியாறில் தண்ணீர் திருடு போவதுவரை மக்களுக்காக வழக்கு தாக்கல் செய்தவன்.

அது மட்டுமல்லாமல் மேலூர் வட்டாரத்தில் நடக்கும் காவல்துறை அத்துமீறலை எதிர்த்துப் பேசுவேன். இதனால், சமூக விரோதச் செயலில் ஈடுபடும் பெரிய புள்ளிகளும், அவர்களால் பயன்பெறும் காவல்துறையினரும் என்மீது ஆத்திரத்தில் இருந்தனர். ஆரம்பத்தில் கிரானைட் மோசடி பற்றிப் புகார் எழுப்பியபோது பொய்வழக்கு போட்டார்கள்.

வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

அது மட்டுமல்லாமல் எனக்குப் பல மிரட்டல்களும் வந்தன. அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து இயங்கிவந்தேன். கடந்த 18-ம் தேதி மேலூர் சேகர் ஹோட்டல்காரருக்கும் எனக்கும் சின்ன வாக்குவாதம் ஏற்பட்டது. இது போலீஸுக்குத் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளரை விட்டுவிட்டு அங்கு வேலை பார்க்கும் பட்டியல் சமூக ஊழியர் பெயரில் புகார் பெற்று என் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்தார்கள். உடனே என்னை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறைக்கு அனுப்பினார்கள். என்னைப் பற்றி இந்தப் பகுதியிலுள்ள மக்களுக்குத் தெரியும். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் இந்தச் சம்பவத்தை விசாரித்து இது பொய் வழக்கு என்பதைச் சுட்டிக்காட்டி என்னைப் பிணையில் வெளியில் கொண்டு வந்தார்கள்.

பொய் வழக்கு, கைதுக்கு நான் அஞ்சவில்லை, சட்டத்தின் எந்தப் பிரிவிலும் என்மீது வழக்கு போடட்டும். ஆனால், பட்டியல் சமூக மக்களுடன் இயங்கிவரும் என் போன்றோர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்து அதன் முக்கியத்துவத்தைக் குறைக்காதீர்கள். தீண்டாமை வன்கொடுமையால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்காத காவல்துறை, அந்தச் சட்டத்தை இப்படி மிஸ் யூஸ் செய்வது சட்டவிரோதம்... சட்டத்தை மீறிய காவல்துறையினர் மீது நீதிமன்றத்தில் முறையிடுவேன்" என்றார்.

புகார் தாரரான ஹோட்டல் ஊழியர் முருகப்பெருமாள் சார்பாக அஃபிடவிட் தாக்கல் செய்த வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், "மேலவளவு, சென்னகரம்பட்டியில் நடந்த சாதிய வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றவர், மக்கள்நலன் சார்ந்த பல பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தவர். இதனாலேயே அதிகார வர்க்கத்தால் அவருக்கு அச்சுறுத்தல் இருந்துவந்தது. இந்த வழக்கு பதிவு செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புதான் சீல் செய்து வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் எடுத்துச் செல்லப்படுவதாகப் புகார் எழுப்பினார். அதனால்தான் திட்டமிட்டு ஹோட்டலில் நடந்த சாதாரண வாக்குவாதத்தை, தீண்டாமை வன்கொடுமை வழக்காக மாற்றியிருக்கிறார்கள். தகராறு செய்ததாக வைத்துக் கொண்டாலும் அதற்குரிய பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தாலும் ஒரு லாஜிக் இருந்திருக்கும். அதைவிடுத்து தீண்டாமை வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்கிறார்கள்.

வழக்கறிஞர் செல்லப்பாண்டியன்

அனைவரையும் மதிக்கக்கூடியவர் மீது சாதியை இழிவுபடுத்தித் திட்டினார், குத்த வந்தார் என்று வழக்கு போடுவது எவ்வளவு மோசமான செயல்... ஹோட்டல் உரிமையாளரிடம் புகார் வாங்காமல் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஊழியரிடம் புகார் பெற்றிருக்கிறார்கள். சமாதானப்படுத்திவையுங்கள் என்றுதான் புகார்தாரர் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். ஆனால், காவல்துறையினரோ இஷ்டத்துக்கு கதை எழுதிவிட்டார்கள். அதோடு, ஹோட்டல் ஊழியர் முருகப்பெருமாள் 'நான் தீண்டாமை வன்கொடுமைப் புகார் அளிக்கவில்லை. சாதாரண வாக்குவாதம் என்றுதான் புகார் கூறினேன். வழக்கறிஞர் ஸ்டாலின் மீதான தனிப்பட்ட பிரச்னையால் காவல்துறையினர் இப்பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதன் பிறகு ஸ்டாலின் பிணையில் வெளியில் வந்தார்.

வழக்கறிஞர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் மனதில்பட்டதை நேருக்கு நேராகக் கூறிவிடும் பழக்கமுள்ளவர். மேலூர் தாலுகாவிலுள்ள நான்கு காவல் நிலையங்களிலும் உள்ளூரைச் சேர்ந்தவர்களே நீண்டகாலமாக பணிசெய்கிறார்கள். மதுரை மாவட்டத்துக்கு எஸ்.பி., டி.எஸ்.பி சரியானவர்கள் வந்தாலும், இவர்கள் சொல்கிற தகவலை அப்படியே நம்புகிறார்கள். இதனால்தான் பல பிரச்னைகள். அதனால், மேலூர் வட்டாரத்தில் பணியாற்றும் காவல்துறையினரை வேறு மாவட்டங்களுக்கு மாற்றினாலே இந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கும்" என்றார்.

சட்டம்

இந்தப் புகார் பற்றி மேலூர் டி.எஸ்.பி ரகுபதிராஜாவிடம் கேட்டோம். "அவரைப் பார்த்தால் மக்களுக்காகப் பாடுபடுபவர் மாதிரி தெரியலை. குடித்துவிட்டால் இஷ்டத்துக்குப் பேசுவார். பலமுறை எங்களிடமே வரைமுறை இல்லாமல் பேசுவார். பொதுநல வழக்கு போடுகிறார் என்பதால் அவர் செய்யறது எல்லாம் சரி ஆகிவிடுமா? அன்று ஹோட்டலில் தகராறு நடந்தது உண்மை. ஹோட்டல் ஊழியர் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்தோம். எங்களுக்கும் அவருக்கும் வேறு எந்த முரண்பாடும் இல்லை. அவர்மீது பதிவு செய்த வழக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியானது. சட்டப்படியானது. இப்ப, புகார் கொடுத்தவரை சமாதானப்படுத்தி இப்படிச் சொல்ல வைக்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது" என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/advocate-complaint-against-melur-police-on-un-touchability-violence-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக