இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நேற்றைவிட இன்றைக்கு மிக அதிக பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய சூழல் ஒவ்வொரு நாளும் உருவாகியிருக்கிறது. கட்டாய முகக் கவசம், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது ஆகியவை தொற்று ஏற்படுவதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.
இந்த நிலையில், பல் துலக்கி (tooth brush), நாக்கு வழிப்பான் (tongue cleaner) ஆகிய இரண்டும் கொரோனா தற்காப்பு பரிந்துரையில் இப்போது முதன்மை பெற்றிருக்கின்றன.
ஆம், கொரோனாவை எதிர்கொள்வதற்கு ‘Oral Hygiene ’ எனப்படும் வாய்ச் சுகாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், அதிலிருந்து மீண்ட பிறகு தங்கள் பல்துலக்கியையும், நாக்கு வழிப்பானையும் உடனடியாக மாற்றிவிட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முதல் அலையின்போது தொற்று ஏற்படாத பலரும் இப்போது தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்; அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் மறுபடியும் தொற்றுக்கு அதிகளவில் ஆளாகிக் கொண்டிருக்கின்றனர்.
Also Read: கொரோனா தொற்று ஒரு தொடக்கம்தானா... இயற்கையின் விதிகள் நமக்குச் சொல்வது என்ன?
இந்த இக்கட்டான நிலையை எதிர்கொள்வதற்கு ஏற்கெனவே உள்ள முகக்கவசம் அணிவது, கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுவது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளோடு, இப்போது வாய்ச் சுகாதாரம் சார்ந்த இந்த வழிமுறைகளையும் மருத்துவர்கள் தீவிரமாகப் பரிந்துரைக்கின்றனர்.
வீட்டில் எல்லோரும் ஒரே கழிப்பறை, குளியலறையைப் பயன்படுத்தும் சூழல் இருந்தால், பல்துலக்கிகளும் ஒன்றாகவே இருக்கும். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதே பல்துலக்கியையும், நாக்கு வழிப்பானையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது அவற்றின் மூலம் அவர் மீண்டும் தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது; குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது.
இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த பல் மருத்துவர் ம. கோகுலிடம் பேசினேன். “கொரோனா தொற்று என்பது தொற்று ஏற்பட்ட நபரின் இருமல், தும்மல், பேசுதல், சிரித்தல் போன்ற செயல்பாடுகளால் வாயிலிருந்து வெளிப்படும் சிறு துளிகளில் வைரஸ் முதன்மையாகப் பரவுகிறது.
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் மனித உடலில் அதிகம் இருக்கும் இடம் வாய்தான். கொரோனா வைரஸ் அடிப்படையில் வாயிலிருந்து வெளிப்படுகிறது; வைரஸ் வெளிப்பட்ட பிறகு காற்றில் சிறிது நேரம் தங்குகிறது. பிறகுதான் வேறொரு நபருக்குத் தொற்றுகிறது.
Also Read: கொரோனா தொற்று உறுதியானதும் நாம் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பகிர்ந்த தகவல்கள்!
வாய் சார்ந்த செயல்பாடுகளில், நாம் சாப்பிடும் உணவு உள்ளே போய்விடுகிறது. ஆனால், பல் துலக்கும்போது, துலக்கி முடித்த பிறகுப் பல் துலக்கியும், நாக்கு வழிப்பானும் வெளியே தான் இருக்கின்றன. சாதாரண சமயங்களில் கூட, பல் துலக்கி முடித்து சிறிது நேரம் கழித்து பல் துலக்கியை முகர்ந்து பார்த்தால் ஒரு வாடை இருக்கும். அது பாக்டீரியாவின் வாடைதான்.
இந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்துவிட்ட ஒருவர், உடனடியாகச் செய்ய வேண்டியது தன்னுடைய பல்துலக்கியையும், நாக்கு வழிப்பானையும் மாற்றுவதுதான். இதனால், மீண்டும் அவர் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் குறைகிறது; அவருடைய குடும்பத்தினருக்கும் இந்தக் காரணத்தால் தொற்று ஏற்படும் அபாயம் இல்லாமல் ஆகிறது.
மற்றபடி எல்லோரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.
source https://www.vikatan.com/health/healthy/dentists-say-oral-hygiene-prevents-corona-infection
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக