Ad

திங்கள், 3 மே, 2021

ஸ்டாலின்  கையில் லகான்... யாருக்கு அமைச்சர் யோகம்? காத்திருக்கும் தி.மு.க-வினர்!

ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறப்போகும் தி.மு.க-வினர் யார் என்கிற தகவல் குறித்த பல்வேறு தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. அமைச்சர்கள் குறித்த பெயர் பட்டியல் ஸ்டாலின் செனடாஃப் சாலையில் விறுவிறுப்பாக தயாராகிவருகிறது.

ஸ்டாலின்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. குறிப்பாக, 125 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக தி.மு.க இந்த தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில் தி.மு.க பெற்ற இந்த வெற்றி அந்த கட்சியின் உடன்பிறப்புகளுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று தி.மு.க தலைவராக உள்ள மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வந்தபோதே தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சென்றனர். இந்நிலையில் நேற்று காலையும் அறிவாலயத்திற்குச் சென்ற ஸ்டாலினை தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உட்பட சில அதிகாரிகள் சந்தித்து பேசியுள்ளார்கள்.

ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுத்த அதிகாரிகள்

இந்த சந்திப்பில் பதவியேற்பு வைபம் குறித்தும், அமைச்சர்கள் பட்டியல் குறித்தும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் பேசியிருக்கிறார். வரும் 4-ம் தேதி மாலை சென்னையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தினையும் ஸ்டாலின் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சரவை பற்றிய சில கருத்துகளையும் ஸ்டாலின் முன்மொழிய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு நடந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டத்தில் “அனைவருக்கும் என்னால் அமைச்சரவையில் இடம்கொடுக்க முடியாது. ஆனால், அவர்களுக்கு கண்டிப்பாக இதயத்தில் இடம் உண்டு” என்று சொல்லியிருந்தார். தற்போது ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார் என்கிற கேள்வி தி.மு.க வினர் மத்தியில் எழுந்துள்ளது.

இது குறித்து ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது “ஆட்சியைப்பிடிப்பதற்கு முன்பாகவே ஸ்டாலின் தனது சாய்ஸாக சிலரது பெயர்களை அமைச்சர்களாகக் குறித்து வைத்திருந்தார். அதோடு அவரது மருமகன் சபரீசன் மகன் உதயநிதி ஆகியோரிடமும் அமைச்சரவை குறித்து ஏற்கனவே பேசியிருக்கிறார். கலைஞர் கருணாநிதி ஆட்சியைப் போன்று அமைச்சர்களாக இருந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்காமல், ஜெயலலிதா பாணியில் புதியவர்களை அதிகமான அளவில் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்பது ஸ்டாலின் எண்ணமாக இருக்கிறது.

மேலும், தற்போது தி.மு.கவின் முன்னோடிகள் பலரும் இந்த தேர்தலில் வென்றுள்ளார்கள். அவர்கள் அனைவருமே அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ளார்கள். அதே நேரம் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கினால் அது எதிர்காலத்தில் தனது வாரிசுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். இந்த அடிப்படையில்தான் அமைச்சரவையும் இருக்கப்போகிறது” என்கிறார்கள் தி.மு.க தரப்பினர்.

தி.மு.க நிர்வாகிகள்

குறிப்பாக முன்னாள் அமைச்சர்களில் நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தங்கம் தென்னரசு, சாமிநாதன் உள்ளிட்ட பத்து முதல் பனிரெண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பினை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களைத் தவிர புதியவர்களாக அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சேகர்பாபு, மனோ தங்கராஜ், ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐம்பது வயதை ஒட்டியவர்கள் அதிக அளவில் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. முப்பது பேர் அமைச்சரவையே போதும் என்கிற எண்ணமும் ஸ்டாலினிடம் உள்ளது. ஸ்டாலின் தயார் செய்யும் அமைச்சரவைப் பட்டியலை சபரீசன் தரப்பு ஒ.கே செய்யும் பட்சத்தில் அந்தப் பட்டியல் மட்டுமே ஆளுநர் மாளிகைக்கு செல்லும் என்கிறார்கள். இந்த பட்டியல் வரும் 6-ம் தேதி மாலைக்குள் இறுதி செய்யப்படும் என்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/who-are-the-ministers-dmk-executives-waiting-after-the-win-in-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக