நேற்று காலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சதுரங்கப்பட்டினத்தில் இயங்கிவரும் மருத்துவர் வீ.புகழேந்தியின் மருத்துவமனை, அரசு அதிகாரிகளால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சீல் வைக்கப்பட்டது.
கல்பாக்கம் பகுதியைச் சுற்றியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தினமும் மிக மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்து வந்தார் மருத்துவ செயல்பாட்டாளரும் மருத்துவருமான புகழேந்தி. இந்நிலையில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விதிகளின்படி, சீல் வைப்பதற்கான காரணங்களை முன்கூட்டியே தெரிவிக்காமல், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, மருத்துவமனையை சீல் வைத்துள்ளதாகக் கூறி, மருத்துவர் புகழேந்தி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடமும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பில் சீல் வைத்த அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தில், ``செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில், நெரும்பூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட சதுரங்கப்பட்டினத்தில் இயங்கி வந்த புகழேந்தியின் தனியார் மருத்துவமனையில் அவர் இல்லாமல், அவருடைய உதவியாளர் நாகூரான் என்பவர் மூலம் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது மண்டல துணை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ததில் தெரியவந்தது. மேலும் மேற்படி மருத்துவம் மேற்கொள்ளப்படும் கட்டடம் பாழடைந்த நிலையில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் உள்ளது.
அதுமட்டுமன்றி, பெருந்தொற்றுக் காலத்தில் சமூக இடைவெளி எதுவும் பின்பற்றப்படாமல், முகக் கவசம் அணியாமல் 25 நபர்களுக்கும் மேலாக அங்கு கூடியிருந்தார்கள். இந்தக் காரணங்களால், அவருடைய மருத்துவமனை 22-05-2021 அன்று வட்டாட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்னை குறித்து மருத்துவர் புகழேந்தி அளித்துள்ள விளக்கத்தில், ``மருத்துவமனை உதவியாளர் நாகூரான் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து மக்கள் சேவை செய்து வருகிறார். நான் இல்லாத நேரங்களில், சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதைச் செய்யுமாறு நான் கூறியுள்ளேன். இல்லையேல், அவர்களுக்கு சிகிச்சை தடைப்படும்போது பாதிப்பு உண்டாகும். மேலும், கொரோனா பேரிடர் காலம் என்பதால், தொலைபேசி வாயிலாக மருத்துவரைத் தொடர்புகொண்டு சிகிச்சை அளிக்கவும் அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த அடிப்படையில், 21-ம் தேதியன்று, சுமார் 20 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மருத்துவமனை பாழடைந்த கட்டடத்தில் செயல்படுவது குறித்துப் பார்க்கையில், அது எங்கள் சொந்த விருப்பமில்லை. ஏனெனில், மருத்துவமனை அமைந்திருக்கும் இடம் 2014-ம் ஆண்டிலிருந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே, அதன் உரிமையாளர், சட்டவிரோதமாக கட்டடத்தை இடிக்க முற்பட்டது, அனைவரும் அறிந்ததே. கட்டடத்தின் பாழடைந்த, பாதுகாப்பற்ற சூழல் உருவாகக் காரணம் வீட்டின் உரிமையாளருடைய சட்டவிரோத செயல்பாடுகள்தான்.
மருத்துவமனையில், 25 பேருக்கும் மேலாக கூட்டமாகவும் முகக் கவசம் அணியாமலும் இருந்தனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலம் காரணமாக, அங்கு வரும் மக்களுக்கு சிகிச்சையளிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. எனது இன்னொரு மருத்துவமனை வயலூரில் இருக்கிறது. அங்கு தற்போது அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதால், அவர்களுக்கு சிகிச்சையை முடித்துவிட்டு இங்கு வர தாமதாகிறது. இந்நிலையில், அங்கு கூட்டம் கூடுகிறது. சில வாரங்களுக்கு முன்னர், இதே பிரச்னை தொடர்பாக, தாசில்தார், உதவி காவல் ஆய்வாளர்களிடம் இதை நான் விளக்கினேன். சட்ராஸ் மருத்துவமனையில் வழக்கு நிலுவையில் உள்ளதால், உச்சி வெயில் நேரத்தில் அங்கு நோயாளிகள் அமர்வதற்குக் கூட நிழல் உருவாக்கிக் கொடுக்க முடியாத அவல நிலை உள்ளது. மழையின்போது மருத்துவமனையில் நீர் கசிந்தபோதும், அதற்கு ஒரு மேற்கூரை அமைக்க நான் சந்தித்த துன்பங்கள் சொல்லி மாளாது.
மருத்துவமனையில் டோக்கன் கொடுத்து, அதன் அடிப்படையில் ஒவ்வொருவராகவே கவனித்து வருகிறோம். நோயாளிகளிடம் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினாலும்கூட, சிலநேரங்களில் குறைபாடுகள் நிகழ்ந்திருக்கலாம். இருப்பினும், எங்களால் இயன்றவரை அதைச் சொல்லாமல் இல்லை.
மருத்துவமனை சீல் வைக்கப்பட்டபோது, விதிமுறைகளைப் பின்பற்றி அதற்கான காரணத்தைத் தெரியப்படுத்தியோ, சுவரில் நோட்டீஸ் ஒட்டியோ இருந்திருந்தால், குழப்பங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதைச் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
மருத்துவமனை செயல்பட்டு வரும் கட்டடத்தின் மீது வழக்கு நடந்து வருவதையும் அதை 2017-ம் ஆண்டு இடிக்க முற்பட்டதையும் `அரசை எதிர்த்தால் இதுதான் நடக்குமா?' - இடிக்கப்பட்ட மருத்துவர் புகழேந்தியின் கிளினிக் என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்தோம். மேலும், ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாத நேரத்தில் நோயாளி அவசரமாக வரும்போது, உதவியாளர் முதல்கட்ட சிகிச்சை, முதலுதவிகள் போன்றவற்றை மருத்துவரின் அனுமதியோடும் வழிகாட்டுதலோடும் மேற்கொள்ளலாம். ஆனால், மருத்துவர் இல்லாத நேரத்தில் உதவியாளர் சிகிச்சை அளிக்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் மருத்துவர் புகழேந்தியின் மருத்துவ சேவையைப் பாராட்டியும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காகவும், துறை சார்ந்த சாதனையாளர் விருதை, மு.க.ஸ்டாலின் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவத்தை சேவையாகச் செய்துவரும் ஒரு மருத்துவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முறையான இட வசதி இல்லாதபோது, அவருக்குரிய இட வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அவருடைய சேவையைத் தொடர்ந்து மேற்கொள்ள வசதி செய்து தரவேண்டும். அதைவிட்டுவிட்டு, அவருடைய சேவையைத் தடை செய்யும் வகையில், மருத்துவமனையைப் பூட்டி சீல் வைப்பது மக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/govt-officials-sealed-doctor-pugazhendhis-clinic-without-prior-notice-why
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக