கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா, உலகம் முழுவதும் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து உலகமே கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்த்து இருந்தது. கடந்த ஆண்டு இறுதியில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தடுப்பூசி போடத் தொடங்கிய 18 நாள்களில் இந்தியாவில் நான்கு மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறைத் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``இந்தியா குறைந்த நாள்களில் நான்கு மில்லியன் மக்களிடம் தடுப்பூசியைக் கொண்டு சேர்த்துள்ளது. பிற நாடுகள் இதே அளவு ஊசியை மக்களிடம் கொண்டு செல்ல குறைந்தது 60 நாள்களுக்கு மேல் எடுத்துக்கொண்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்களப் பணியாளர்கள் அல்லாமல் பொது மக்களுக்கும் விரைவில் தடுப்பூசி சென்றடைய உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதில் இந்தியா வேகமான நாடாகச் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக எந்த இறப்பும் பதிவும் செய்யப்படவில்லை. அதில் அருணாசலப் பிரதேசம், திரிபுரா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், கோவா, புதுச்சேரி போன்றவை குறிப்பிடத்தக்கவை.11,039 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதே நேரம் 14,225 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையைவிட 68 சதவிகிதம் அதிகம்.
Also Read: `முதல் டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?!' - மருத்துவ விளக்கம்
கோரளாவில்தான் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,62,631. இதில் 97.08 சதவிகிதம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளனர். விரைவில் இந்தியா கொரோனாவிலிருந்து மீண்டு வரும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/health/healthy/india-is-the-fastest-country-in-vaccination-says-the-health-ministry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக