இரு தினங்களாக திஷா ரவி என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் விவாதங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
திஷா ரவி மீது தேசத்துக்கு விரோதமாக நடந்து கொண்டதாக டெல்லி போலீஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
திஷா ரவியின் கைது குறித்து பல்வேறு ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்தும் வருகின்றனர்.
1. யார் இந்த திஷா ரவி?
22 வயது திஷா ரவி காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயலாற்றி வரும் ஒரு ஆர்வலர்.
பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஸ்வீடனைச் சேர்ந்த இளம் வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க்கால் நிறுவப்பட்ட `Fridays for future` என்ற அமைப்பின் அங்கமாக உள்ளார்.
மேலும், 2019ஆம் ஆண்டு `Fridays for future` அமைப்பின் இந்தியப் பிரிவைத் தொடங்கி அதற்குத் தலைமை தாங்கி வருகிறார் திஷா.
மரம் நடுவது, பருவநிலை மாற்றம் மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது என இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல பணிகளையும் குழுவாக மேற்கொண்டு வந்துள்ளார்.
விலங்குகள் நல ஆர்வலராகவும் இருக்கும் திஷா ஒரு `வீகன்` ஆவார்.
இவர் கடந்த வருடம் அளித்த வோக் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், ``பருவநிலை மாற்றம் குறித்து வெள்ளை இனத்தவர்கள் சொல்வதைத்தான் இந்த உலகம் கேட்கிறது. என்னைப் பொறுத்தவரை இது `சுற்றுச்சூழல் பாகுபாடு`. பருவநிலை மாற்றம் குறித்து வளரும் நாடுகளிலும் உள்ள மக்கள் சொல்வதையும், அவர்கள் மீதும் கவனம் செலுத்தப்படும் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
2. மோடிக்கு எதிரான கருத்துகள்
மற்றொரு நேர்காணலில் மோடிக்கு எதிராகக் காத்திரமான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர், ``மோடி தான் செய்வது அனைத்தும் சரியானவை என அனைவரையும் நம்ப வைத்துவிட்டார். அவருடைய நிர்வாகம் குறித்து ஏராளமான கேள்விகள் உள்ளன. மனித உரிமை மீறல், சூழலியல் செயல்பாடுகள் என அவர் செயல்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.
அதே நேர்காணலில் அவர், தமது பெற்றோரும் அவரை ஆதரிப்பதாகப் பதிவு செய்துள்ளார்.
3. திஷா மீது சுமத்தப்பட்ட குற்றம் என்ன?
விசாரணைக்காக வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட திஷா விசாரணைக்குப் பின்பு கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசத்துக்கு எதிராக நடந்து கொண்டது, விரோதத்தைத் தூண்டுவது, குற்றச் சதியில் ஈடுபட்டது போன்ற குற்றங்கள் டெல்லி போலீஸாரால் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், இவரை ஐந்து நாள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் கிரெட்டா தன்பெர்க்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில். அவர் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான `டூல்கிட்` ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது போராட்டத்தில் ஈடுபவர்கள், ஆதரவு தருபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறைகள்தான் அந்த டூல்கிட்.
ஆனால், அந்த டூல்கிட் இந்தியாவிற்கு எதிரான சமூக, கலாசார மற்றும் பொருளாதார ரீதியில் போர் புரிவதற்கான திட்டம் என்றும், அதை உருவாக்கியவர் திஷா ரவிதான் என்றும் அதை அவர் கிரேட்டாவுடன் பகிர்ந்துள்ளார் எனவும் டெல்லி போலீஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த `டூல்கிட்’ தற்செயலாக வெளியில் கசிந்தவுடன் கிரேட்டாவிடம் அதை நீக்குமாறு திஷா கேட்டுள்ளார் என்றும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் காலிஸ்தான் ஆதரவுக் குழுவுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர் என்றும் டெல்லி போலீஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனால், விசாரணைக்காக டெல்லி அழைத்து வரப்பட்ட திஷா ரவி, நீதிமன்றத்தில் தான் அந்த டூல்கிட்டில் வெறும் இரு வரிகளை மட்டுமே மாற்றி எழுதியதாகத் தெரிவித்துள்ளார்.
சமீப நாள்களாக விவசாயிகளுக்கு ஆதரவாகப் பகிரப்படும் ட்விட்டர் பதிவுகள் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் என்று அந்தப் பதிவுகளையும், கணக்குகளை நீக்குமாறும் ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய அரசு தரப்பில் கோரப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் தற்போது திஷா ரவியின் கைது நடந்தேறியுள்ளது
4. சரி… டூல்கிட் என்றால் என்ன?
போராட்டங்கள் நடத்தும் போது, அந்த போராட்டத்தில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டிவை என்ன என்பதை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை செயல்திட்டம்தான் 'டூல்கிட்'. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், போராட்ட செயல்திட்ட ஆவணம் அது.
பொதுவாக எந்தவொரு போராட்டத்தின் போதும், 'டூல் கிட்' பகிரப்படுவது வழக்கம்தான்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த காலநிலை மாற்றத்திற்கு எதிரான செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பர்க், தமது ட்விட்டர் பக்கத்தில் 'டூல்கிட்' ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் இந்தியாவில் களத்தில் உள்ள மக்களால் இந்த டூல்கிட் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதன் பின்பு அதை தமது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கி இருந்தார்.
5. அதில் என்ன இருந்தது?
போராட்ட செயல் திட்டம்தான் அதிலிருந்தது. குறிப்பாக ட்விடரில் ட்ரெண்ட் செய்வது, பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது என அதிலிருந்தவை போராட்டத் திட்டம் குறித்த ஆவணம் தான்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகைப்படம் மற்றும் காணொலிகளை வெளியிடுவது ஆகியவை கிரேட்டா தன்பர்க்கின் 'டூல்கிட்டில்' குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் கோரிக்கை வைப்பது, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அவருக்கு அருகில் இருக்கும் இந்தியத் தூதரகம், ஊடக நிறுவனம் அல்லது உள்ளூர் அரசு அலுவலகம் ஆகியவற்றின் அருகே போராட்டம் நடத்துவது உள்ளிட்டவையும் அந்த டூல் கிட்டில் குறிப்பிடப்பட்டிருந்தன.
6. ஆதரவும் எதிர்ப்பும்
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தீபக் குப்தா, ராஜதுரோகம் தொடர்பான எந்த ஆவணமும் அந்த டூல் கிட்டில் இல்லை என்று கூறி உள்ளார்.
பொதுவெளியில் கிடைக்கும் அந்த டூல்கிட்டை நானும் படித்தேன். ஆனால், அதில் வன்முறை குறித்த தகவல்களோ, மக்களைக் கிளரச் செய்யும் எந்த விஷயமோ அதில் இல்லை என்று தீபக் குப்தா கூறி உள்ளார்.
வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹாவும் திஷா ரவிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர், ``இந்தக் கைது கண்டிக்கத்தக்கது; மிகவும் மோசமான செயல். இந்தியச் சமூகம் எந்த அளவுக்குக் கீழ் நோக்கிச் சென்றிருக்கிறது என்பதைப் பாருங்கள்” எனக் கூறி உள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், நடிகர் சித்தார்த் எனப் பலர் திஷாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம் தீவிர வலதுசாரிகள் இந்த கைதுக்கு நியாயம் கூறி வருகின்றனர்.
``புர்ஹான் வானிக்கு 21 வயது, அஜ்மல் கசாபுக்கு 21 வயது. வயது வெறும் ஓர் எண்தான். யாரும் சட்டத்துக்கு மேல் கிடையாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். குற்றம் குற்றமே" என பெங்களூரைச் சேர்ந்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர், பி.சி.மோகன் ட்வீட் செய்துள்ளார்.
source https://www.vikatan.com/news/india/6-information-about-the-arrested-activist-disha-ravi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக