வாழ்க்கை எந்தக் கட்டத்தில் எப்படிப்பட்ட திருப்புமுனைகளை வைத்திருக்கும் என்பது தெரியாமலேதான் நாமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனையைச் சொல்லவே நடுங்குகிறது நமக்கு. ``இந்த வருஷம் ஏப்ரல் மாசம்தாங்க நான் கடைசியா நடந்தது'' என்கிற விஜயகுமாருக்கு 27 வயசு. வாழ்க்கையின் சவால்களைச் சந்தித்து சாதிக்க வேண்டிய வயதில், மகிழ்ச்சிகளை அனுபவிக்க வேண்டிய வயதில் வீட்டுக்குள் முடங்கிப்போய் கிடக்கிறார்.
``விழுப்புரம் பக்கத்துல தலைக்காணி குப்பம்தாங்க என்னோட ஊரு. அம்மா லதா, பால்வாடி ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க. அப்பா சங்கர் விவசாயி. அதுவும் நெல் விளைவிச்ச விவசாயி. நிலம்னு பார்த்தா ஒரு ஏக்கருக்கும் குறைச்சலாத்தான் இருந்துச்சு. தண்ணீர் பிரச்னை வேற. ஒரு போகம் மட்டும் நெல்லு விதைப்பார். அப்பப்போ வேர்க்கடலையும். மூணு வருஷத்துக்கு முன்னால, அப்பாவால விவசாயம் செய்ய முடியலை. அதை விட்டுட்டு மரம் வெட்டுற கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சார். அப்பாவுக்கு ஆஸ்துமா பிரச்னை இருக்கு. அதனால, நான் டிப்ளோமா இன் எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன் படிச்சிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், அவரை `வேலைக்கு போகாதப்பா, ரெஸ்ட் எடு'ன்னு சொல்லிட்டேன்'' என்றவர் தொடர்ந்தார்.
``சென்னையில ஒரு ஃபார்மா கம்பெனில ரெண்டு வருஷம் வேலைபார்த்தேன். வேலை பிடிக்காததால, சொந்த ஊர்ல ஏதாவது தொழில் செய்யலாம்னு திரும்ப ஊருக்கே வந்துட்டேன். 2018-ல சின்னதா காய்கறிக் கடை வெச்சேன். மொத்தமா காய்கறிகளை வாங்கி சில்லறை விலைக்கு விற்க ஆரம்பிச்சேன். வியாபாரம் நல்லபடியா போயிட்டிருந்துச்சு. எங்க வீடு சந்தோஷமா இருந்துச்சு'' என்றவர், தன் காலில் அடிபட்ட அந்த நாளை நினைவுகூர்ந்தார்.
``எனக்கு நல்லா நினைவிருக்கு. 2021 ஏப்ரல் மாசம் 21-ம் தேதி, மண்வெட்டியால மண்ணைக்கொத்திட்டு இருந்தப்போ தவறுதலா மண்வெட்டி என் வலது கால்மேல விழுந்துடுச்சு. சின்னக்காயம்தான்கிறதால, ரெண்டு, மூணு நாள் வரைக்கும் டிடி இன்ஜெக்ஷன் போடலை. அடிபட்ட நாலு நாள் வரைக்கும் கால்ல வலி, வீக்கம் எதுவும் இல்லை. அஞ்சாம் நாள் கால் வீங்கி வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. உடனே மருத்துவமனைக்குப் போனேன். காயம் செப்டிக் ஆயிடுச்சுன்னு சொன்ன டாக்டர், மூணு நாள் ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்லி தினமொரு ஊசிபோட்டார். மூணாவது நாள் நைட் என்னால நடக்க முடியாத அளவுக்கு கால் வீங்கிடுச்சு. டவுன் ஹாஸ்பிட்டலுக்கு போனோம். அங்கேயும் `காயம் செப்டிக் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டு, என்னை ரெண்டு நாள் வரவழைச்சு ஊசி போட்டாங்க. அப்படியும் என் கால் சரியாகலை.
அடுத்த ஹாஸ்பிட்டலுக்கு போனோம். கால்ல செப்டிக் ஆன இடத்துல கறுப்பா இருந்ததை சின்னதா ஆப்ரேஷன் செஞ்சு எடுத்துட்டு அனுப்பினாங்க. அடுத்த நாள் டிரெஸ்ஸிங் செஞ்சு அனுப்புறப்போ பயங்கர வலி. வீக்கமும் அதிகமாகிடுச்சு. முடியாம மருத்துவமனையிலேயே படுத்துட்டேன். என் நிலைமையைப் பார்த்த எங்கப்பா, இருக்கிற நிலத்தை விக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு அடுத்த நாளே தனியார் ஹாஸ்பிட்டல்ல என்னை அட்மிட் பண்ணாரு. அங்க, கறுப்பா இருந்த சதையை கொஞ்சம் கொஞ்சமா சீவி எடுத்தாங்க. கடைசியா அது கறுப்புப்பூஞ்சைன்னு சொல்லிட்டு, காலை எடுக்கணும்னு சொன்னாங்க. அதுக்கு ஒண்ணு, ரெண்டு லட்சம் ஆகும்னு சொன்னாங்க. கையில இருந்த பணமெல்லாம் தீர்ந்துபோனதால கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டோம்.
அங்க, அட்மிட் ஆன மொத ரெண்டு நாள் டிரிப்ஸ்தான் ஏத்தினாங்க. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுறதுக்கு முன்னாடி கொரோனா டெஸ்ட் எடுத்தப்போ நெகட்டிவ்னு வந்துச்சு. அட்மிட்டான கொஞ்ச நாள்ல கொரோனா பாசிட்டிவ். இதுக்கு நடுவுல அடிபட்ட அந்தக் கால் சுத்தமா செயல் இழந்துடுச்சு. விரல்களை அசைக்க முடியலை. ரெண்டாம் தேதி ஆபரேஷன் செய்யணும்னு சொன்னவங்க தியேட்டர் கிடைக்காம ஆறாம் தேதி ஆபரேஷன் செஞ்சு, காலை எடுத்துட்டாங்க.
இருந்த நிலமும் போயிடுச்சு. ஒத்த காலோட என்னால என் குடும்பத்தையும் காப்பாத்த முடியலை. உடம்புக்கு முடியாத என் அப்பா மறுபடியும் வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டாரு. இந்த முறை நூறு நாள் வேலை. பால்வாடி டீச்சரான அம்மாவுக்கு, லோன் பிடித்தம்போக 6 ஆயிரம் ரூபாய் கையில வரும். தம்பி எலெக்ட்ரீஷியனா இருக்கான். கொரோனாவுக்குப் பிறகு அவனுக்கும் பெருசா வேலையில்லை. மொத்தத்துல குடும்பமே தத்தளிச்சிட்டு இருக்கு. அவங்களையெல்லாம் காப்பாத்த வேண்டிய நான் ஒரு காலில்லாம வீட்ல இருக்கேன்.
எப்படியாவது எனக்கு செயற்கைக்கால் வெச்சுடணும்னு அதோட விலையை விசாரிக்க ஆரம்பிச்சோம். முன்ன மாதிரி எல்லா வேலையும் செய்யணும்னா மூணு லட்சம், நாலு லட்சம் செலவுல செயற்கைக்கால் வைக்கணும்னு சொல்றாங்க. வயலை வித்து என் உயிரைக் காப்பாத்திடுச்சு என் குடும்பம். ஆனா, எனக்கு செயற்கைக் கால் வைக்க என்ன செய்யறதுன்னு தெரியாம கண்ணீர் விட்டுக்கிட்டிருக்கு. குடும்பத்தைக் காப்பாத்த வேண்டிய நான் இப்போ குடும்பத்துக்கு பாரமா இருந்துட்டிருக்கேன்'' என்கிற விஜயகுமாரின் குரலில் குடும்பம் குறித்த கவலையும் எதிர்காலம் குறித்த பயமும் அப்பியிருக்கின்றன.
source https://www.vikatan.com/news/general-news/viluppuram-youngster-needs-financial-help-to-get-prosthetic-legs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக