ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. மேற்கிலுள்ள ஜோலார்பேட்டை தொகுதியைத் தன்னுடைய கோட்டையாக நினைத்து ஆதிக்கம் செலுத்தி வந்தவர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி. அ.தி.மு.க-வில் 16 வருடங்கள் மாவட்டச் செயலாளர், பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ., இரண்டாவது முறை அமைச்சர் என தொடர்ந்து அதிகாரத்திலேயே இருந்த வீரமணி, இந்த தேர்தலில் `சீட்’ விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட் தர வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரமிக்க மனிதராகவும் தன் கிராஃபை உயர்த்திக் காட்டினார் வீரமணி. வேட்பாளர் ரேஸிலிருந்த வலுவான நிர்வாகிகளை ஓரம் கட்டிவிட்டு, தொகுதியில் செல்வாக்கில்லாத, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாகவும் வீரமணி மீது கடுகடுத்தனர் மூத்த நிர்வாகிகள் சிலர். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோஃபர் கபிலும் வீரமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
Also Read: மந்திரி தந்திரி: நிலோஃபர் கபில்
``வாணியம்பாடி தொகுதியில் எனக்கு மீண்டும் சீட் கிடைக்காமல் செய்துவிட்டார் வீரமணி. இருந்தாலும், அவர் பரிந்துரைத்துள்ள வேட்பாளர் செந்தில்குமாரை வெற்றி பெறச் செய்வேன்’’ என்று ஓப்பன் டாக்கில் வீரமணியை விளாசியிருந்தார் நிலோபர். செந்தில்குமாரும் வெற்றி பெற்றுவிட்டார். அதே சமயம், இவ்வளவு ஆதிக்கம் செலுத்திய வீரமணி தன்னுடைய ஜோலார்பேட்டை தொகுதியிலேயே மண்ணை கவ்வியிருப்பது, அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஆறுதலைக் கொடுத்திருக்கிறது.
வீரமணியால் பரிந்துரைக்கப்பட்டிருந்த காட்பாடி தொகுதி வேட்பாளர் வி.ராமு, அணைக்கட்டு தொகுதி வேட்பாளர் வேலழகன், குடியாத்தம் தொகுதி வேட்பாளர் பரிதா, ஆம்பூர் தொகுதி வேட்பாளர் நஜர் முகமது உள்ளிட்டோரும் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தற்கு ஒரே காரணம், கே.சி.வீரமணிதான் என்று கொதிக்கிறது நிலோஃபரின் தரப்பு.
இது குறித்து நம்மிடம் பேசிய நிலோஃபர் கபில் ஆதரவாளர்கள்``வீரமணியின் பரிந்துரைப் பட்டியலை கட்சித் தலைமை ஏற்கக் கூடாது. அவர் பேச்சில் தலைமை மயங்கிவிட்டால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல தொகுதிகள் கைநழுவிச் சென்றுவிடும் என்று அன்றே சொன்னோம். இப்போது, வீரமணியே மண்ணை கவ்வியிருக்கிறார். மூக்கு வேர்த்த வீரமணிக்கு முதுகெல்லாம் மூளை என அ.தி.மு.க தலைமை நம்பியதுதான் தவறு’’ என்று விமர்சிக்கின்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/jolarpet-constituency-minister-veeramani-defeated-nilofer-kafil-criticism
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக