Ad

திங்கள், 10 மே, 2021

சென்னை: பெண்களிடம் மொபைல் பறிப்பு - சேஸ் செய்து மடக்கிப்பிடித்த போலீஸுக்கு குவியும் பாராட்டு!

சென்னை சிந்தாரிப்பேட்டை கரீம்மொய்தீன் தெருவைச் சேர்ந்தவர் சூர்யா (35) என்ற பெண். இவர் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே செல்போனில் பேசியபடி நடந்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், சூர்யாவின் செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா, சத்தம் போட்டார். உடனே அவ்வழியாகச் சென்றவர்கள் செல்போனைப் பறித்துச் சென்ற இளைஞரை விரட்டினர் ஆனால் அந்த இளைஞர் தப்பிவிட்டார்.

செல்போன்

இதுகுறித்து சூர்யா சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். சம்பவம் நடந்த அண்ணாசிலை அருகில் பொருத்தப்பட்டிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்போனைப் பறித்துக் கொண்டு இளைஞர் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்தச் சமயத்தில் சூர்யாவின் செல்போனின் ஐஎம்இஐ நம்பரை சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். ஐஎம்இஐ நம்பரைக் கண்காணித்தபோது கண்ணகி நகர் பகுதியில் செல்போன் இருப்பதாகச் சிக்னல் காட்டியது.

Also Read: சென்னை: அதிகாலையில் சைக்கிளிங் - நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு

இதையடுத்து சிந்தாரிப்பேட்டை போலீஸார் கண்ணகிநகர் பகுதிக்குச் சென்று விசாரித்தனர். விசாரணையில் சென்னை கண்ணகிநகர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா (26) என்பவர்தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து சூர்யாவின் செல்போன் உள்பட 4 செல்போன்கள், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விக்னேஷ் மீது கொலை வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது

சென்னை பெசன்ட்நகரில் குடியிருந்துவரும் ஸ்வேதா என்பவர், கடந்த 9-ம் தேதி ஆண் நண்பருடன் பைக்கில் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அதிகாலையில் புறப்பட்டார். ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை, சிமென்ட் சாலை சிக்னல் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள், ஸ்வேதாவின் ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஐ போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

ஸ்வேதா, திருடன் திருடன் என சத்தம் போட்டார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த புனித தோமையார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் ஜோசப், செல்போனைப் பறித்தவர்களை விரட்டினார். தில்லை கங்காநகர் சுரங்கப்பாதை அருகே செல்போனை பறித்துச் சென்றவர்களை எஸ்.ஐ டேனியல் ஜோசப் மடக்கிப்பிடித்தார். விசாரணையில், அவர்கள் வேளச்சேரியைச் சேர்ந்த பார்த்திபன் (19), ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சாம் (22) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ஸ்வேதாவின் விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. துணிச்சலாக செயல்பட்ட எஸ்.ஐ டேனியல் ஜோசப்பை கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-chase-and-arrest-cellphone-snatchers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக