Ad

திங்கள், 10 மே, 2021

`யாருக்காக என் அப்பா, அண்ணன் உயிரை விட்டாங்களோ, அவங்களே எனக்கு ஓட்டு போடல!' - அன்னலட்சுமி

``ஆக்கிரமிக்கப்பட்ட 198 ஏக்கர் ஏரியை மீட்பதற்காகப் போராடிய எங்கப்பாவையும் அண்ணனையும் துள்ளத் துடிக்க வெட்டிக் கொன்னாங்க. `ஊருக்காக உழைக்கப் போய், இப்படி அநியாயமா ரெண்டு உசுரை இழந்துட்டீங்களே'னு உறவுகளும் அக்கம்பக்கத்தாரும் சொன்னாங்க. ஆனா நான் முடங்கிடாம, நடந்து முடிந்த தேர்தல்ல ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்னேன். ஆனா, எங்க குடும்பத்துல ரெண்டு தலைமகன்களை யாருக்காக இழந்தோமோ, அந்த மக்களே எனக்கு ஓட்டுப் போடலைங்கிறதுதான் வருத்தமா இருக்கு. ஆனாலும், அரசியலில் அடுத்தடுத்து பயணிப்பேன்" என்று நிதானித்து, வார்த்தைகளில் உறுதி கூட்டி, புன்னகை மலர பேசுகிறார் அன்னலட்சுமி.

மக்களோடு அன்னலட்சுமி

அன்னலட்சுமி, திருச்சி மாவட்டம், இனாம் புலியூரைச் சேர்ந்தவர். அருகில் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முதலைப்பட்டியில் இருந்த 198 ஏக்கர் ஏரி, சிலரது ஆக்கிரமிப்பில் இருந்தது. அன்னலட்சுமியின் தந்தை வீரமலையும், சகோதரர் நல்லதம்பியும் ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தனர். அதற்காக, ஆக்கிரமிப்பாளர்களால், வீரமலையும், அவரின் மகன் நல்லதம்பியும், கடந்த 29.07.2019 அன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குடும்பத்தில் இருந்த இரண்டு தலைமகன்களையும் இழந்ததால், அன்னலட்சுமி குடும்பம் அல்லாடி வருகிறது.

ஆனால், குடும்பத்தில் வறுமை வாட்டினாலும், தன் தந்தை, சகோதரர்போல் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார் அன்னலட்சுமி. 38 வயதாகும் அன்னலட்சுமி, திருமணம் செய்துகொள்ளவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு 608 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், தேர்தலை சந்தித்த அனுபவம் குறித்து அன்னலட்சுமியிடம் பேசினோம்.

̀̀எங்கப்பாவையும் அண்ணனையும் படுபாவிங்க பட்டப்பகல்ல, நட்ட நடுரோட்டுல வெட்டிக் கொன்னாங்க. எங்க குடும்பமே அதன் பிறகு நொடிச்சுப் போனது. வருமானத்துக்கு வழியில்லை. அரசு, `வீரமலை குடும்பத்துல ஒருத்தருக்கு அரசு வேலை; நல்லதம்பி பிள்ளைகளை படிக்க வைப்போம்'னு சொன்னுச்சு. ஆனா, அந்த வாக்குறுதியெல்லாம் காத்தோட காத்தா கரைஞ்சு போச்சு. அதுக்காக நாங்க கலங்கி நின்னு, மூலையில முடங்கிடலை. எங்கப்பா வழியில் நானும் பொது வாழ்க்கைக்கு வர நினைச்சேன். `மக்கள் பாதை' இயக்கத்தின் நீதி திட்ட மாநில பொறுப்பாளர் தங்கவேல் சாரும், மாவட்டப் பொறுப்பாளர் அன்பழகன் சாரும் என்னை தேர்தலில் நிக்கச் சொன்னாங்க. அதனால், எனது ஊர் அடங்கிய ஸ்ரீரங்கம் தொகுதியில், கால்பந்து சின்னத்தில் போட்டியிட்டேன்.

எங்கப்பா, அண்ணனை இழந்ததற்கு தமிழக அரசு ஒரு ரூபாய்கூட இழப்பீட்டுத் தொகையோ வேறு உதவியோ செய்யாதபோதும், அதிலிருந்து மீண்டு தேர்தல் களத்துக்கு வந்தேன். இது எனக்குப் புது அனுபவம்.

அன்னலட்சுமி

Also Read: `ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட அப்பா, அண்ணனைக் கொன்னாங்க... இப்போ நான் வந்திருக்கேன்!' - அன்னலட்சுமி

நான் சார்ந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லாததால், அதையெல்லாம் பட்டியலிட்டு தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருந்தேன். பிரசாரக் களத்தில் மக்கள் என்னை ஒரு துணிச்சல் பெண்ணாகப் பாராட்டியதையும், வரவேற்றதையும் கண்கூடாக உணர்ந்தேன். ஆனா, அவையெல்லாம் வாக்குகளாக மாறாததற்கு, தேர்தல் நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க வரும் மக்களிடம் என் பெயரையும் சின்னத்தையும் எடுத்துக்கூறக்கூட களப்பணியாளர்கள் இல்லாததே காரணம். மேலும், எனக்கு ஆதரவுக்கு யாரும் இல்லை, எப்படி எதிர்காலத்தில் பொது வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்கிற தயக்கமும் மக்களிடம் இருந்திருக்கலாம். ஓட்டுக்குப் பணம் என்பதெல்லாம் ஓட்டு வாங்குவதற்கோ வெற்றிக்கோ காரணம் அல்ல என்பதை முழுமையா நம்பினேன்.

ஆனால், பணம்தான் இங்கே பத்து மட்டுமல்ல, நூறையும் செய்திருக்கு. அதனால்தான், நான் 608 வாக்குகளை மட்டுமே பெற முடிந்திருக்கு. இந்த முதலைப்பட்டியில உள்ள 198 ஏக்கர் ஏரியினால ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் வரும் கோப்பு, எட்டரை, போசம்பட்டி, முள்ளிக்கரும்பூர், பேரூர், போன்ற கிராமங்கள் பெரிதும் பலன் அடையும். ஆனா, இந்தக் கிராமங்கள்ல உள்ளவர்களே எனக்கு வாக்களிக்காதது பெரும் கவலை அளிக்குது. அதேபோல், என் நெருங்கிய உறவினர்கள் நிறைந்த இனாம் புலியூர் கிராம மக்களும் வாக்களிக்கலை.

தேர்தல் பிரசாரத்தின் போது அன்னலட்சுமி

அவங்க நலனுக்காகத்தான் அப்பாவும் அண்ணனும் தங்கள் உயிரையே விட்டாங்க. ஆனா, அதைக்கூட அந்த மக்கள் நினைச்சுப் பார்க்கலை என்பதுதான் என்னை கொஞ்சம் கவலையில ஆழ்த்தியிருக்கு. நான் தேர்தல்ல போட்டியிட்டப்ப, என் வயல்ல என் அப்பா, அண்ணன் போட்டோக்களை போட்டு, ஃப்ளெக்ஸ் வைத்திருந்தேன். ஆனா, அதில் உள்ள என் அப்பா, அண்ணன் போட்டோக்கள் உள்ள பகுதிகளை, அவங்களை கொன்னவங்க கிழிச்சாங்க. அதையெல்லாம் மீறித்தான் தேர்தலைச் சந்தித்தேன். ஆனா, இந்த மக்களே என்னை பெரிதாக எடுத்துக்கலை என்பதுதான் வருத்தமா இருக்கு. இன்னும் ரெண்டு, மூணு மாசத்துக்குள் கரூர் நீதிமன்ற முதன்மை அமர்வில் நடக்கும் கொலை வழக்கில் தீர்ப்பு வந்துடும்.

அதனால், நான் இத்தோடு முடங்கிட மாட்டேன். நான் தொகுதியில் ஜெயிக்கலை என்றாலும், நான் கொடுத்த வாக்குறுதிகளை சட்ட வடிவில் அல்லது போராட்டங்கள் மூலமாக நிறைவேற்றப் பாடுபடுவேன். இதுகுறித்து, மக்கள் பாதை இயக்கம், தேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் பொதுநல வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி முடிவு செய்வேன். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அமைக்க, அடிமனை பிரச்னை தீர்க்க, வாசனை திரவிய தொழிற்சாலை ஏற்படுத்த, நீர்நிலைகளை தூர்வாற, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றனு நான் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் சட்டப் போராட்டம் மூலம் நிறைவேற்ற வைப்பேன்.

கிழிக்கப்பட்ட ஃப்ளெக்ஸ்

அதனால, தேர்தல் முடிவுகளை மனதார ஏற்றுக்கொண்டு எனக்கு வாக்களித்த மக்களுக்கு உங்கள் மூலமா நன்றியைத் தெரிவிச்சுக்குறேன். அதே வேளையில், நான் தேர்தல் களத்தில் சோர்ந்துவிடாமல் பெரும் முயற்சி எடுத்ததற்கு, என் தந்தை மற்றும் சகோதரர் வழியில் என்னை ஒரு போராளியாய் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் மட்டுமன்றி, தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகைகள், காட்சி ஊடகங்களுக்கு நன்றி. அதன் காரணமாக, எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைச்சிருக்கு. அதேபோல, தேர்தல்ல நான் போட்டியிட செலவான சுமார் 50,000 ரூபாயை, மக்கள் பாதை இயக்கத் தோழர்களும், சென்னையைச் சேர்ந்த ஒருசில சமூக ஆர்வலர்களும் ஏற்றுக்கொண்டாங்க.

குறுகிய கால இடைவெளியில, 20 முதல் 25 சதவிகித குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து வாக்குக் கேட்டேன். அதனால, தேர்தலை சந்திப்பதுக்கும், எனது பொதுவாழ்க்கைக்கும், இத்தோடு முடிவில்ல. என் தந்தை, அண்ணன் ஆசியோடு எனது அரசியல் பயணம் தொடரும். வரும் 2024-ல் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன். அதுவரை, சட்டப்போராட்டங்கள், களப்போராட்டங்கள் மூலம், மக்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு எதிராத் தொடர்ந்து போராடுவேன்" என்றார் உறுதி மேலிட.

வேட்கை நிறைவேற வாழ்த்துகள் சகோதரி!



source https://www.vikatan.com/social-affairs/women/srirangam-independent-candidate-annalakshmi-shares-her-first-election-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக