Ad

ஞாயிறு, 2 மே, 2021

வேலூர்: வீடுகளை நோட்டமிட்டு நாய்கள் மீது தாக்குதல்?! - நள்ளிரவில் பீதியைக் கிளப்பிய இளைஞர்கள்

வேலூரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை எதிரேயுள்ள காந்தி ரோட்டில் எப்போதுமே மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும். இந்தநிலையில், காந்தி ரோட்டிலுள்ள காசி விஸ்வநாதர் கோயில் தெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் சந்தேகம்படியாகச் சுற்றித்திரிந்துள்ளனர். இருவரின் கையிலும் மிக நீளமான வாள் போன்ற ஆயுதம் இருந்திருக்கிறது. நள்ளிரவு நேரம் என்பதால் தெருவே நிசப்தமாக இருந்தது.

சி.எம்.சி மருத்துவமனை

இளைஞர்கள் இருவரும் ஒவ்வொரு வீடாக நோட்டம் பார்த்தபோது, அங்கிருந்த நாய்கள் அவர்களைப் பார்த்து குரைத்தன. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் தங்களின் கையிலிருந்த ஆயுதங்களால் நாய்களை விரட்டி விரட்டித் தாக்கினர். அச்சமடைந்து ஓடிய நாய்களை விடாமல் துரத்தித் தாக்கியபடியே அந்த இளைஞர்கள் அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்றனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின.

காட்சிகளைப் பார்வையிட்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இளைஞர்கள் இருவரின் தோற்றமும் வடமாநிலத்தவர்போல் தெரிந்தது. அவர்கள் கொள்ளையர்களாக இருப்பார்களோ என்று யூகித்து அச்சமடைந்தனர். இது தொடர்பான புகார் காவல் நிலையத்துக்குச் செல்வதற்குள்ளாக வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி மேலும் அதிர்ச்சியூட்டின.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.

அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ள இரண்டு இளைஞர்கள் யார் என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ``அவர்கள் இருவரும் வடமாநிலத்தவர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவில் வந்தபோது, தங்களைப் பின்தொடர்ந்துவிடாமல் குரைத்த நாய்களை விரட்டியுள்ளனர். கொள்ளையர்கள் கிடையாது. இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறோம்’’ என்கிறது காவல்துறை.



source https://www.vikatan.com/social-affairs/crime/attack-on-dogs-by-two-vellor-young-man-cctv-footage-got-shared

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக