Ad

ஞாயிறு, 2 மே, 2021

`ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது ஏன்? பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமே?'-எழுப்பப்படும் சந்தேகம்!

மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யாத ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் நீதிமன்றத்தில் போராடி அனுமதி பெற்றிருக்கிறது. ஆனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தயங்குவது ஏன்? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட தி.மு.க-வினர் `ஏன் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும், திருச்சியில் தொடங்கலாமே...' என்றல்லவா கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். அவர்களும் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால், இதில் ஏதோ அரசியல் இருப்பதாகச் சந்தேகம் எழுகிறது என்று ஆவேசப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கொரோனா உயிரிழப்பு

கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படுகிறது. தற்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லியிலுள்ள மருத்துவமனைகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதேபோல், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துவருகின்றனர்..

இந்தநிலையில், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம், கடந்த 1980-ம் ஆண்டு நிறுவனத்தின் சொந்தத் தேவைக்காகவும், மருத்துவமனை தேவைக்காகவும் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்காக பிளான்ட் நிறுவியது. 1999-ம் ஆண்டு வரை ஆக்ஸிஜன் தயாரித்து வழங்கப்பட்டுவந்த நிலையில், அந்த பிளான்ட் தொடர்ந்து செயல்படுவதற்கு இயந்திரங்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.

ஆக்ஸிஜன் ரயில்

ஆக்ஸிஜன் பிளான்ட்டில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆகும் செலவைவிட வெளியில் வாங்குவது குறைவாக இருப்பதால், அந்த பிளான்ட் மூடப்பட்டது. இந்தநிலையில், கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆக்ஸிஜன் உருளை

திருச்சி பெல் நிறுவனத்தில் புதிய பிளான்ட் தொடங்கி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, பெல் தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் மத்திய அரசுக்குக் கோரிக்கைவைத்தனர். ஆனாலும் மத்திய அரசு மௌனமாக இருப்பது எங்களுக்குச் சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக ஆதங்கப்படுகிறார்கள்.

இது குறித்து திருச்சி பா.ம.க மாநகர் மாவட்டச் செயலாளர் திலீப்குமாரிடம் பேசினோம். ``நாடு முழுவதும் கடுமையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL) மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்கும் பிளான்ட் நல்ல முறையில் செயல்பட்டுவந்தது.

திருச்சி பா.ம.க,மாநகர் மாவட்ட செயலாளர் திலீப்குமார்

ஆனால்,பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளாத காரணத்தால், கடந்த 2016-ம் ஆண்டு முதல் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கே, எட்டு மணி நேரத்தில், 1,000 கியூபிக் மீட்டர், அதாவது 150 சிலிண்டர்கள் (உருளைகள்) ஆக்ஸிஜன் ஆக்கும் திறன் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 400 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உருவாக்க முடியும். மத்திய அரசு உத்தரவிட்டால் பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்ஸிஜன் பிளான்ட் புதிதாகத் தொடங்கப்பட்டு, அரசுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆக்ஸிஜன் பிளான்ட்டை ஒரு மாதத்துக்குள் தொடங்கிவிடலாம். ஆனால், அதற்கு மத்திய அரசுதான் உத்தரவிட வேண்டும்.

திருச்சி சிவா

அப்பாவி உயிர்களைப் பறித்த ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கலாமா வேதாந்தா குழுமத் தலைவர் `இந்த ஆலையை எப்படித் திறப்பது என்பது எங்களுக்கு நன்கு தெரியும்' என்று தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்திருக்கிறார். இதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால்தான் எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

திருச்சி பெல்

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனைத்து வசதிகளும் இருந்தும், மத்திய அரசு மௌனம் காத்துவருவது எங்களுக்குப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவருகிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்கூட தி.மு.க-வும் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறக்க சம்மதிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாதா திருச்சியில் தயாரிக்க முடியும் என்பது. ஏன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்றல்லவா அவர்கள் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்?

திருச்சி சிவா அறிக்கை

எங்கள் மருத்துவர் அய்யாவும் அ.தி.மு.க கூட்டணியில் இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தவறு என்றும், இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் சொல்லியிருக்கிறார். `மக்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது தவறு இல்லை. ஆனால் அது ஒருபோதும் தொடர்ந்துவிடக் கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி நான்கு மாதத்தில் மூடிவிட வேண்டும்' என்றிருக்கிறார்.

திருச்சியில் ஆக்ஸிஜன் பிளான்ட்டை உடனே திறக்க வேண்டும். உங்களது அரசியலில் சித்து விளையாட்டுகளை மக்களின் உயிர்களில் விளையாடாதீர்கள்" என்று ஆவேசப்பட்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/policies/why-open-sterlite-when-bhel-can-produce-oxygen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக