Ad

ஞாயிறு, 2 மே, 2021

நீலகிரி: கேரளாவிலிருந்து மது வாங்கக் குவிந்த கூட்டம்! - எல்லையோர டாஸ்மாக்கை மூடிய மாவட்ட நிர்வாகம்

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று பரவலின் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில், தமிழக எல்லைகளிலுள்ள சோதனைச் சாவடிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களின் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளன.

டாஸ்மாக்

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது வாங்குவதற்காக நீலகிரி மாவட்டத்துக்குள் ஏராளமானவர்கள் படையெடுக்கின்றனர். அதிலும் குறிப்பாக, கேரளாவிலிருந்து மது வாங்க வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. இதனால் உள்ளூர் மக்களுக்கு தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், எல்லையோர பகுதிகளில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என உள்ளூர் மக்கள் வலியுறுத்திவந்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம், மாநில சோதனைச் சாவடி அருகில் செயல்பட்டுவந்த தாளூர் மற்றும் நம்பியார்குன்னு ஆகிய டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இரண்டு மதுக்கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

டாஸ்மாக்

இது குறித்து மாவட்ட நிர்வாகம், ``கடந்த சில நாள்களாக கேரளாவிலிருந்து மது வாங்குவதற்காக நமது எல்லைகளுக்குள் வருவதாக தொடர் புகார்கள் வந்தன. சமூக இடைவெளி, மாஸ்க் போன்ற எந்தச் சுகாதார கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பதில்லை. எல்லையோரங்களில் செயல்பட்டுவந்த கடைகளை மூட உத்தரவிட்டிருக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/tasmac-closed-in-gudalur-because-of-other-state-peoples

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக