கடந்த ஏப்ரல் 29-ம் தேதி, சீனாவின் வென்சங் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 5பி (Long March 5B) என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விரைவில் நிறுவப்படவிருக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஒரு பகுதியை விண்ணுக்கு எடுத்துச்சென்றது ராக்கெட். இப்படி விண்வெளி நிலையம் அமைப்பதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பகுதிகள் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வதும் சீனாவின் பொறுப்புதானே. அங்கேதான் கோட்டை விட்டிருக்கிறது சீனா. இந்த சீன ராக்கெட்டின் ஒரு பாகம் தற்போது பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தற்போது இந்திய பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
Our latest prediction for #LongMarch5B CZ-5B rocket body reentry is 09 May 2021 03:30 UTC ± 4 hours along the ground track shown here. Follow this page for updates: https://t.co/p2AU9zVEpA pic.twitter.com/4zvj8LL7K6
— The Aerospace Corporation (@AerospaceCorp) May 8, 2021
சுமார் 23 டன் எடையுள்ள ராக்கெட்டிலிருந்து பிரிந்த அந்தப் பாகம் பூமியின் எந்த பக்கத்தில் விழும் எனச் சரியாகக் கணிக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்தப் பாகமானது 18,000 மைல் வேகத்தில் பூமியை வலம் வந்து கொண்டிருந்தது. இந்த ராக்கெட் பாகம் எந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது, எப்போது பூமியில் விழ வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் கமாண்ட் கவனித்து வருவதாகத் தெரிவித்திருந்தது. பூமியின் வெளிப்புறத்தில் உள்ள வானிலையை எளிதாகக் கணிக்க முடியாது. அவை மாறுபடப் பல காரணிகள் இருக்கின்றன. இதனால் இந்த ராக்கெட் பாகம் எந்த நேரத்தில் சரியாகப் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்று கணிக்க முடியாத சூழல். பெரும்பாலும் யாருக்கும் ஆபத்து இருக்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 0% வாய்ப்பே இல்லை என அடித்து சொல்லிவிட முடியாது என்பதுதான் அப்போதைய சிக்கலாக இருந்தது.
மேற்கத்திய நாடுகள் சீனாவின் இந்தப் போக்கைக் கண்டிக்க, தேவையில்லாமல் ஒரு சின்ன விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்றது சீனா. இந்த ராக்கெட் பாகம் எப்போது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் எனச் சீனாவும் கவனித்து வந்தது. அந்தப் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் வளிமண்டலத்தில் நுழையும் போதே எரிந்து சாம்பலாகும். அது பூமியில் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவுதான் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வென்பின் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அந்த ராக்கெட் பாகம் கடலில் விழும் வாய்ப்புகள்தான் அதிகம் இருக்கிறது எனச் சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஆனால், இதன் பயணத்தை கவனித்து வரும் அமெரிக்காவின் ஸ்பேஸ் கமாண்டோ, இந்த ராக்கெட் பாகம் நியூயார்க், பெய்ஜிங் அல்லது மாட்ரிட்டின் வடக்கோ அல்லது தெற்கு சிலி, வெலிங்டனின் மற்றும் நியூஸிலாந்தின் தெற்கோ அல்லது இதற்கு இடைப்பட்டு எங்கு வேண்டுமானாலும் விழலாம் எனத் தெரிவித்திருந்தது.
அதாவது பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழலாம் என்பதைத் தான்சொல்லியிருந்தார்கள். இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவுக்கு மேல் பூமியின் வளிமண்டலத்தில் உள்ளே அந்த ராக்கெட் பாகம் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று காலை மாலத்தீவு அருகே கடலில் விழுந்திருக்கிறது இந்த ராக்கெட்டின் உடைந்த பாகங்கள்.
இதே போல் ராக்கெட் பாகம் பூமியில் விழுவது இது முதல் முறை அல்ல. இதே போல் கடந்த ஆண்டு சீனாவின் ராக்கெட் பாகம் ஒன்று பூமியில் விழ நேர்ந்தது. அதன் சில பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலிலும் சில பாகங்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு கிராமத்திலும் விழுந்தது. ஆனால், அதனால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. இம்முறையும் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது. ஆனால், சீனாவின் இந்தப் போக்கு ஆபத்தானது என பல நாடுகளும் கவலை தெரிவித்திருக்கின்றன. அடுத்த வரும் ஆண்டுகளில் இன்னும் இதே போன்ற ராக்கெட்கள் பலவற்றை விண்ணில் ஏவவுள்ளது சீனா. அவ்வ்வ்வ்வ்!
source https://www.vikatan.com/science/astronomy/chinese-rocket-parts-falls-to-earth-over-indian-ocean-reports-say
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக