ஏறக்குறைய 25 ஆண்டு காலத்திற்குப் பின்னர் மீண்டும் தனது அமைச்சர் கனவை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ கண்ணப்பன். 1991-1996 வரையிலான அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். வளம் கொழிக்கும் துறைகள் என்பதால், கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அதுமட்டுமல்லாது ஆட்சி அதிகாரத்தின் செல்வாக்கு காரணமாக, தான் சார்ந்த யாதவ சமூக மக்களிடமும் தனி செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டார். இவரது முயற்சியால்தான் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் 1996 ஆம் ஆண்டு, வீரன் அழகு முத்துக்கோன் சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலை அமைக்கப்பட்டதில் யாதவ சமுதாய மக்களிடையே கண்ணப்பனின் புகழ் மேலும் கூடியது. ராஜ கண்ணப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அந்த மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் அதிமுகவின் முக்கியநிர்வாகிகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.பின்னர் 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்த நிலையில், ஜெயலலிதாவுடன்ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கண்ணப்பன், 2001 ல் 'மக்கள் தமிழ் தேசம்' எனும் ஒரு கட்சியை துவக்கி, திமுக கூட்டணியில், இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
யாதவர்கள் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு அவரால் தொடர்ந்து அந்தக் கட்சியை நடத்த முடியவில்லை. பின்னர் 2006-ல் திமுகவில் இணைந்து, இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2009 ல் மீண்டும் அதிமுகவுக்குத் தாவினார். 2011 தேர்தலில் அதிமுக ஆட்சிஅமைத்தாலும், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கண்ணப்பன் தோல்வியையே தழுவினார்.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் போட்டியிட சீட் கிடைக்காத ஏமாற்றத்தில் மீண்டும் திமுகவுக்கு தாவினார். யாதவர் சமுதாயத்தில் செல்வாக்குடன் திகழ்வதால், திமுகவும் அவரை அரவணைத்துக் கொண்டது. 2021 சட்டமன்ற தேர்தலில், கண்ணப்பனின் விருப்பப்படியே அவருக்கு முதுகளத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முறை வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி நிச்சயம் என கண்ணப்பனின் ஆதரவாளர்கள் சொல்லிவந்த நிலையில், எதிர்பார்த்தபடியே அமைச்சராக பதவியேற்றுள்ளார் ராஜ கண்ணப்பன். அதுவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சராக!
source https://www.vikatan.com/government-and-politics/politics/political-journey-of-transport-minister-raja-kannapan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக