Ad

திங்கள், 10 மே, 2021

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! - 4 பேரை பிடிக்க தனிப்படை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் போராட்டத்தைத் துவக்கிய விவசாயிகள் 9 மாதங்கள் ஆகியும் வெயில், மழை, கொரோனா என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாயச் சங்கங்கள் டெல்லி - பஞ்சாப் எல்லையில் கூடாரங்களை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றனர். டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான விவசாயிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கொரோனா லாக்டௌன்களுக்கு மத்தியிலும் சென்று கலந்துகொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மேற்குவங்கத்தின் ஹூக்ளி பகுதியில் கிசான் சோசியல் ஆர்மி என்ற விவசாய இயக்கத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தினர். அதில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 25 வயது பெண் செயற்பாட்டாளர் ஒருவரும் கலந்துகொண்டார். கூட்டத்தின் மூலம் கிசான் சோசியல் அமைப்பினருடன் அறிமுகம் கிடைத்ததை அடுத்து அந்த பெண் தான் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடப் போவதாகக் கூறியிருக்கிறார். கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினரும் அந்த பெண்ணை போராட்டத்தில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்த, மேற்குவங்கத்திலிருந்து கிளம்பி டெல்லிக்கு தனியாகச் சென்று விவசாயிகள் அமைத்திருந்த கூடாரத்தில் தங்கியிருந்திருக்கிறார்.

டெல்லி போராட்டம்

கடந்த மாதம் 11-ம் தேதியன்று டெல்லி எல்லையிலிருந்து பஞ்சாப்-க்கு கிசான் சோசியல் ஆர்மி அமைப்பினருடன் அந்த பெண் ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அப்போது, அந்த பெண்ணை கிசான் அமைப்பை சேர்ந்த சிலர் ரயில் பயணத்தின் போதே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. பஞ்சாபுக்குச் சென்றவுடன் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக அந்த பெண் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், பஞ்சாப் வந்தடைந்த மறுநாளே கூடாரத்தில் தனியாகத் தங்கியிருந்த அந்த பெண்ணை மீண்டும் கிசான் சோசியல் ஆர்மி அமைப்பை சேர்ந்த சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

விவசாய அமைப்பை நம்பி தனியாக வந்த தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களைப் பற்றி அந்த பெண் தனது தந்தையிடம் தொடர்புகொண்டு தொலைப்பேசியில் அழுது புலம்பியிருக்கிறார். நடந்தது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று அவர்கள் மிரட்டியதாகவும் அந்த இளம் பெண் அவரது தந்தையிடம் கூறியிருக்கிறார்.

மேலும், நடந்ததை பற்றி வீடியோ வாக்குமூலமாக பதிவு செய்து அதனையும் தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதனையடுத்து, இளம் பெண்ணின் குடும்பத்தினர் சம்பவத்தை விவசாயச் சங்க பிரதிநிதிகள் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து போராட்ட களத்தில் இளம் பெண் மற்ற பெண்கள் தங்கி இருக்கும் டென்ட் பகுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதால் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெண் செயற்பாட்டாளர் அனுமதிக்கப்பட்டார். அதில் இளம் பெண்ணுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் கடந்த மாதம் 30-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இளம் பெண்ணின் வீடியோ வாக்குமூலத்தை வைத்து காவல்நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்ததின் பேரில், போலீஸாஅர் கிசான் சோசியல் ஆர்மி அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

பெண் செயற்பாட்டாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா விவசாயச் சங்கத் தலைவர்கள் கூறுகையில், "முதலில் இந்த விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்த போது நாங்கள் அதனை விசாரித்தோம். அந்த நபர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன, அவர்களைப் போராட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

பாலியல் வன்கொடுமை

ஆனால், மகளிர் அமைப்புகள் சம்பவம் குறித்துக் கூறுகையில், "சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர்களுக்கு இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முன்னதாகவே தெரியும். ஆனால், அவர்கள் இத்தனை நாள்களாக ஏன் அமைதி காத்தனர் என்று தெரியவில்லை. மேலும், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உன்னத நோக்கத்துடன் வெயில், மழை பாராமல் உண்மையாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் போராட்டத்தின் தன்மையைச் சீர்குலைத்து விடுகின்றன" என்றனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து பேசிய நகர காவல் அதிகாரி, ``டி.எஸ்.பி கண்காணிப்பில் மூன்று ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சைபர் செல் உதவியும் நாடப்பட்டுள்ளது. வழக்கு நான்கு பேருக்கு எதிராக பதியப்பட்டுள்ளது” என்றார்.

ஆண் பெண் பேதமின்றி ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து மாதக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் களத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகள் அனைவரையும் கடும் அதிருப்தியிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/young-women-activist-sexually-harassed-in-delhi-farmers-protest

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக