பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் மூலம் இத்துறை சார்ந்த நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவிகிதமாக இருந்தது. சென்ற திங்கட்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில், வருகின்ற நிதியாண்டில் இது 7.5 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என அறிவித்தார்.
இந்த ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி குறைந்து காணப்பட்டது. தங்கத்தின் நுகர்வும் குறைவாகவே காணப்பட்டது. அதாவது, கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை மிகவும் அதிக அதிகரித்து காணப்பட்டதை அடுத்து விற்பனையும் குறைந்தது. இந்த வரி விதிப்பு குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை கணிசமாகக் குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விலை குறைந்த தங்கம்
தங்கம் விலை கடந்த சில நாள்களில் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருக்கிறது. ஒரு வார காலத்துக்கு முன் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1860 டாலருக்குப் பக்கத்தில் இருந்தது, தற்போது 1797 டாலராக வர்த்தகமாகிறது.
எதிர்காலத்தில் தங்கம் விலை எப்படி?
பட்ஜெட் நடவடிக்கையின் காரணமாக குறுகிய காலத்திற்கு இறங்கலாம். ஆனால், உலக அளவில் வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் 2023-ம் ஆண்டு வரை வட்டி விகிதங்களை குறைவாகவே வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கொரோனாவின் தாக்கம் மேலைநாடுகளில், இன்னும் முழுமையாக குறையாத நிலையில், நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதைப் பார்க்கும்போது, மேலும் சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களை அமல்படுத்த முயலக்கூடும் என்பது தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க முகாந்திரங்கள் இருப்பதையே உணர்த்துகிறது.
வெள்ளி விலை உயர்ந்தது ஏன்?
கடந்த திங்கட்கிழமை வர்த்தகத்தில் சர்வதேசச் சந்தையில் ஒரே நாளில் 9% அதிகரித்து டிராய் அவுன்ஸ் 30 டாலர்களைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சர்வதேச விலை சுமார் 50% அதிகரித்த நிலையில், சென்ற வார இறுதியில் திடீரென்று வெள்ளியின் மீதான முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கின.
கேம்ஸ்டாப் பங்கு விலைகளில் ஏற்பட்ட திடீர் ஏற்றத்தின் சிக்கல்கள் தீர்வதற்குள் வெள்ளியிலும் பதட்டம் தொற்றிக்கொண்டுவிட்டது. குறிப்பாக, ஐஷேர் சில்வர் ட்ரஸ்ட்டின் இ.டி.எஃப் நிறுவனம் தடாலடியாக வெள்ளி மீதான இ.டி.எஃப் பங்குகளை அதிகரிக்கும் வகையில், அதற்குச் சமமான வெள்ளியை வாங்கிக் குவித்தது. இதன் தாக்கம் உலக சந்தைகளிலும் எதிரொலித்தது.
Also Read: இன்னும் நகைச்சீட்டு மூலம்தான் தங்கம் சேமிக்கிறீர்களா? இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்! #HerMoney
ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெள்ளி சார்ந்த இ.டி.எஃப் விலைகள் 7 - 9% வரை அதிகரித்தன. வெள்ளியின் சந்தை என்பது மிகப் பெரியது மற்றும் அதிக சிக்கல்களைக் கொண்டது என்பதால் அதில் ஊக வணிகத்தின் மூலம் விலையேற்றத்தை அதிக நாட்கள் நிலைத்து வைக்க முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
source https://www.vikatan.com/business/finance/will-the-gold-rate-decrease-due-to-the-import-tax-reduction-announced-in-budget-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக