கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நெசவாளர் காலணியைச் சேர்ந்தவர் அசோகன் (58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி ஜெயந்தி (49). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் நாட்டியப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். அடுத்ததாக இரட்டைப் பெண் குழந்தைகள் 12-ம் வகுப்புப் படித்துவருகின்றனர். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அசோகன், வீட்டிலும் ராணுவத்தைப்போல அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருப்பதுடன், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குடும்ப உறுப்பினர்களிடம் வலியுறுத்திவருவாராம். அசோகனின் கட்டுப்பாட்டுகளால் அவ்வப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் அசோகன் வீட்டுக்கு உறவினர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். அசோகனின் மனைவி ஜெயந்தி உறவினர்களை உபசரித்ததால் துவைத்துவைத்த துணியைக் காயப்போடாமல், ஈரத்துடன் பக்கெட்டில் வைத்திருக்கிறார்.
உறவினர்கள் சென்ற பிறகு அசோகன் தனது மனைவியிடம் துணியை ஈரத்துடன் பக்கெட்டில் வைத்ததற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அசோகன் மனைவியைக் கடுமையாகத் திட்டியதுடன், கையால் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஜெயந்தி மயக்கமடைந்தார். இதையடுத்து குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஜெயந்தியை மீட்டு நாகர்கோவிலிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
Also Read: குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!
அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி மரணமடைந்தார். இது குறித்து நேசமணி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மனைவியைக் கொலை செய்ததாக முன்னாள் ராணுவ வீரர் அசோகனைக் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,``அசோகன் ராணுவத்திலுள்ள ஒழுங்கை வீட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என குடும்பத்தினரை நிர்பந்தித்திருக்கிறார்.
கட்டுப்பாடுகளை மீறுபவர்கள்மீது கோபப்பட்டு தண்டனை அளிப்பது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். துணி காயப்போடவில்லை என்ற சாதாரண விஷயத்துக்காக அவர் தாக்கியதில் அவரது மனைவி இறந்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/nagercoil-police-arrests-ex-service-man-in-murder-case
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக