இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசியவர், ``விவசாயக் கடன் ரத்து என்பது, இந்தாண்டு பெறப்பட்ட கடன் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. யாருக்காக இந்த கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது... பழைய கடன் எல்லாம் தள்ளுபடி கிடையாது" என்ற கருத்தை பதிவு செய்தார்.
மேலும், ``இந்தாண்டு பெறப்பட்ட கடன் மட்டுமே ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட கடன், ஒத்திவைக்கப்பட்டது தான். இன்றும் அந்த பழைய கடன் இருந்துகொண்டே தான் இருக்கும். இந்த புதிய கடன் ரத்து என்பதும், தங்களின் சொந்த கட்சிக்காரர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறத" என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து முத்தரசனைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தார். தமிழகம் கடும் வறட்சியில் நிலவிய நேரமது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்களெல்லாம் கருகி, கடுமையான வறட்சி நிலவியது. அப்போது, தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அப்படி, திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மகாலிங்கம் என்ற விவசாயி உயிரிழந்தார். எங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை கோரிக்கையை நிறைவேற்றும் வரை சடலத்தை எடுக்கமாட்டோம் என்று போராடினோம்.
போராட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டார். தமிழக அரசு சார்பில், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகிய நான்கு அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சென்னை நீங்கலாக, தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது" என்றார்.
Also Read: 'ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி; உழுவார் உலகத்தாருக்கு!' -வள்ளுவரை மேற்கோள் காட்டிய முதல்வர்
தொடர்ந்து பேசியவர், "அப்போது, கூட்டுறவு குறுகிய காலப் பயிர்க் கடன்களை, மத்திய கால கடன்களாக மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கடன் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் கடன் தள்ளுபடியில் சேர்க்கப்படக்கூடாது என்று அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடன் அப்படியே தான் இருக்கும். இந்த கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகள் பயனடையவேண்டும்" என்றார்.
மேலும், ``கடந்த 5-ம் தேதி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை முதலமைச்சர் அறிவித்த பின்னர் தான் நம் அனைவர்க்கும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னரே ஆளும்கட்சிகாரர்களுக்குத் தெரிவித்து அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 20 லட்சம் முதல் 35 லட்சத்துக்கு மேல் வரை கடன் பெற்றுள்ளனர். இது பெரும் முறைகேடு, இதுகுறித்து விசாரணை நடந்த கோரி, மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்'' என்று தெரிவித்தார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/ruling-party-cadres-malpractice-in-agricultural-loan-waiver-cpi-mutharasan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக