Ad

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மதுரை: வீட்டை சீல் வைத்த வங்கி! - பெண் பிள்ளைகளுடன் வாசலில் தவிக்கும் குடும்பம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத பால்காரரின் வீட்டை வங்கி நிர்வாகம் ஜப்தி செய்து சீல் வைக்க, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எந்த பொருளையும் எடுக்க முடியாமல் வீட்டு வாசலிலயே ஒரு வாரமாக வசித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ்குமார்

விருசங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு செல்வி என்ற மனைவியும் பள்ளி செல்லும் இரு மகள்கள் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ 4.5 லட்சம் கடன் பெற்று, அதன் மூலம் 7 பசுமாடுகளை வாங்கி தொழில் செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நிலை சரியில்லாமலும், கொரோனா பேரிடர் காலம் என்பதாலும் அவரால் கடன் தவணையை சரிவர செலுத்தமுடியவில்லை.

இந்த நிலையில் தனியார் வங்கி ஊழியர்கள் சட்டவிதிகளின்படி கடந்த வாரம் சதீஷ்குமார் வீட்டுக்கு வந்து, எந்தப் பொருளையும் எடுக்க விடாமல் சீல் வைத்தனர்.

வீட்டிலிருந்து எந்த பொருளையும் எடுக்க முடியாமல் இரண்டு பெண் பிள்ளைகளுடன் கடந்த ஒரு வாரமாக வீட்டு வாசலிலயே தவித்து வருகிறது சதீஷ்குமார் குடும்பம்.

பாதிக்கப்பட்ட குடும்பம்

இந்த நிலையில் தன்னுடைய பொருள்களை எடுத்துக் கொள்ளவாவது அனுமதிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளிடமும், காவல்துறையினரிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ்குமார், ''உடல் நலமில்லை, கொரோனா வந்ததால் வருமானம் இல்லாமல் கடன் தவணையை கட்டமுடியவில்லை. இந்த நிலையில் நோட்டீஸ் விட்டவர்கள், நான் இல்லாத சமயம் வந்து வீட்டுக்கு சீல் வைத்து விட்டார்கள். அரிசி பருப்பைக் கூட எடுக்க முடியவில்லை. எங்களுக்கு ஆடைகளையும் எடுக்கவில்லை. வீட்டு வாசலிலயே இருக்கிறோம். பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப சொல்லி பள்ளியிலிருந்து தகவல் சொன்னார்கள்.

அவர்களின் டிரெஸ், பாடப் புத்தகங்களையும் எடுக்க முடியாமல் தெரிந்த வீட்டில் வாங்கி அவர்களை பள்ளிக்கு அனுப்பினோம். நான் என்ன குற்றம்செஞ்சேன். ஏன் இந்த கொடுமை?

சதீஷ்குமார்

பொருட்களையாவது எடுத்து கொள்கிறேன் என்று வங்கி அதிகாரிகளிடமும், போலிஸிடமும் கோரிக்கை வைத்தும் பலனில்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பெண் பிள்ளைகளின் நலன் கருதி சதீஷ்குமாரின் வீடு ஜப்தி நடவடிக்கையில் மதுரை கலெக்டரும் இத்தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/tamilnadu/bank-loan-recovery-family-facing-trouble-at-thirumangalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக